Theva

மனம் போல் மாங்கல்யம் நாட்டுக்கூத்து

In சொற்சித்திரம் on மார்ச்17, 2008 at 7:06 முப

–   இ.வரதர் (ஆணையூர்)

சென்ற பங்குனி மாதம் 27ம் திகதி இளவாலையில் சீந்திப்பந்தல் எனும் இடத்தில் ‘மனம்போல் மாங்கல்யம்’ எனும் நாட்டுக்கூத்து (தென்மோடி) மேடையேற்றப்பட்டது. இந்த நாடகத்தின் மூலக்கரு ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியரின் சிந்தனையில் உருவாகியது.

யாழ் மண்ணில் இந்நாடகத்தை ஒப்புநோக்கிப் பாடியவர் மறைந்த கணித ஆசான் ஆசீர்வாதம். துணைநின்றவர் நாட்டுக்கூத்துச் சக்கரவர்த்தி அண்ணாவியார் திருப்புகுந்தார் யோசப். அன்று இந்நாட்டுக் கூத்தில் பங்குபற்றிய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தில் பிரபல்யாமான அண்ணாவிமார்கள்.

ஞானரசங்கள், தாளலயங்கள், ராக வர்ணனைகள் ஒருங்கே அமையப்பெற்ற இந்நாட்டுக் கூத்தில் முக்கிய பாத்திரத்தை ஏற்றுப்பாடி நடித்தவர் தென்மோடி நாட்டுக் கூத்துத் திலகம் அண்ணாவியார் இராசாதம்பி. போயிட்டியூர் அன்னாரின் ஆற்றுகையில்தான் இன்று ‘மனம்போல் மாங்கல்யம்’ என்ற நாடகம் உருமலர்த்தப்பட்டது. அவரது கலைப்பரிமாற்றம் இளமையிலேயே முத்திரை பொறிக்கப்பட்டது. விஷேடமாக நாட்டுக்கூத்தி;ல் கையாளப்படும் பெயர், ஞானமரபு வழி ராகங்கள், அவரால் இசைக்கப்படும் போது எல்லா நாட்டுக்கூத்து இரசிகர்களும் பெரிதும் ஆச்சரியத்துக்கு உள்ளாவதை எவரும் மறைக்க இயலாது.

‘மனம்போல் மாங்கல்யம்’ பெரும் ஒய்வுக்குப்பின் நாட்டுக்கூத்து என்ற மறுமலர்ச்சியுடன் மேடையேற்றப்பட்டது. நடிகர்களை களைந்து எடுப்பதும், நாட்டுக்கூத்தின் ஒப்புவமையில் அவர்களை தேர்ச்சி பெறச்செய்வதும், ஆற்றுகையில் ஈடுபடுவர்களுக்குத்தான் அதன் கடினங்கள் விளங்கும். இருந்தபோதும் அவருக்கு இயற்கையாய் அமைந்த கலைமரபினால் இந்நாடகத்தை நெறிப்படுத்தியது நீண்டகால வரட்சிக்குப் பின் கிடைத்த நீர்ப்படுக்கை எனலாம்.

நாடகத்துக்கு வருவோம். நாடகமாந்தர்களின் அபிநயங்கள் வளர்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இராச பாத்திரங்கள் ஏற்று நடிப்பவர்கள் செங்கோலைப் போட்டு காலால் துவசம் செய்கிறார்கள். எந்நேரமும் வாளை இழுத்தடிப்பது அவர்களின் ஆவேசம். பெண்பாத்திரம் சீலியா, றொசளின் ஆகிய பாத்திரங்களை ஏற்று நடிக்கும் பாத்திரங்கள் நன்றாக நடிக்கின்றார்கள். பெண்கள் பாத்திரம் ஏற்று நடித்தவர்கள் பெண்கள்தான். அவர்கள் தமது அபிநயத்தைக் காட்ட கையை நீண்டநேரம் வைத்திருப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

முதலாவது ஒர்லாண்டவாக நடிப்பவருக்கு நாட்டுக்கூத்தில் சிறப்பான எதிர்காலம் உண்டு. ஆண்களின் வேசங்கள் திருந்த இடமுண்டு. இரண்டாவது ஓர்லாண்டாவாக நடிக்கும் அண்ணாவியார் இராசதம்பி கச்சிதமாகப் பாடி தமது ஆளுமையை வெளிப்படுத்தினார். வரவேற்புக்குரியது. அண்ணாவியார் இராசாதம்பி தம்மைப்போலவே புதியவர்களையும் உருவாக்க வேண்டும் என்று இச்சந்தற்பத்தி;ல் கேட்டுக்கொள்கின்றோம். மொத்தத்தில் கனகாலத்துக்குப்பின் ஓர் நாட்டுக்கூத்தைப் பார்த்தோம் என்ற மனத்திருப்தி.

கரையோர வாழ் மக்கள் இன்று வரைக்கும் தமது மரபுவழி நாட்டுக்கூத்தை பேணிக்காப்பதில் முன்னிற்பதில் சளைத்தவர்கள் அல்லர் என்பதை இளவாலை போயிட்டிமக்கள் அடிக்கடி இப்படியான நாட்டுக்கூத்துக்கள் மூலம் அறிமுகம் செய்வதன் மூலம் நிரூபித்து வருகின்றனர். அதேவேளை நாட்டுக்கூத்தில் புலமையும் திறமையும் பெற்ற அண்ணாவிமார்கள் அனேகர் இருந்தும் நாட்டுக்கூத்து இன்று அருகிவருவதை எம்மால் ஜிரணிக்க முடியாதுள்ளது. நாட்டுக்கூத்து தென்மோடித் திலகம் அண்ணாவியார் இராசாதம்பி இப்படியான நாட்டுக் கூத்துகளை புதிய மறுமலர்ச்சியுடன் தொடர்ந்துமம் இடம்பெறச் செய்வார் எனத் திடமாக நம்புகிறோம். அருகிவரும் நாட்டுக்கூத்தை மீண்டும் வளர்ப்போம்.                                               

பின்னூட்டமொன்றை இடுக