Theva

நிலவருகே மரணம்! நாடக ஆற்றுகை பற்றி………

In விமர்சனம் on மார்ச்17, 2008 at 7:47 முப

Nelavaruke Maranam

(மேலும் படங்கள் கலரியில்) 

– ஆனந்த்

ஸ்பெயின் நாட்டின் மிகப் பரவலாக அறியப்பட்ட நாடகக் கலைஞர் வெட்றிகோ கார்ஷியா லோர்காவின் Blood wedding நாடகம் சிங்களத்தில் “சந்த லங்க மரணய” (நிலவருகே மரணம்) என்ற பெயரில்  23.04.2005 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றப்பட்டது.

“நிலவருகே மரணம்” நாடகம் 2005ம் ஆண்டு தேசியநாடக விழாவில் வருடத்தின் சிறந்த நாடகம் என்ற விருதையும் சிறந்த நெறியாள்கை, சிறந்த தழுவல் எழுத்துரு, சிறந்த தற்புதுமையான இசையமைப்பு, சிறந்த நடன அமைப்பு, சிறந்த துணை நடிகை, சிறந்த ஒப்பனை வடிவமைப்பு போன்ற விருதுகளையும் பெற்றுக் கொண்டது. இந்நாடகத்தை நெறியாள்கை செய்திருப்பவர் ஆங்கில ஆசிரியராகக் கடமைபுரியும் கௌஷல்யா பெர்னாண்டோ. இவர் சிங்கள மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் திரைப் படங்களிலும் நடித்த நிறைந்த அனுபவத்தைப் கொண்டுள்ளவர்.

‘றிக்கோன் ஆட்ஸ் சென்ரர்’, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் சிறு நிதியம் போன்ற அமைப்புகள் யாழ்ப்பாணத்தில் இந்நாடகம் மேடையேறுவதற்கு வேண்டிய ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தன. முக்கியமாக சிங்களத் திரையுலகிலும் நாடக உலகிலும் மிகப் பிரபல்யமாக விளங்குகின்ற தர்மசிறி பண்டாரநாயக்கா அவர்கள் இந்நிகழ்வை மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஒழுங்கு செய்திருந்தார். இவர் இவ்வாறான “கலைப் பரிவர்த்தணை” நிகழ்ச்சிகளை கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக ஒழுங்கு செய்து வருகிறார். ‘த ரிச்சுவல்’, ‘ரோஜனத்துப் பெண்கள்’ போன்ற சிங்கள நாடகங்களை ஏற்கனவே கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றியுள்ளார். இத்தோடு திரைப்பட விழாக்களையும் ஒழுங்கு செய்து நடத்தியிருந்தார். தமிழ் சிங்களக் கலைஞர்கள் மத்தியில் உறவு மேம்படவேண்டும், கலைகள் ஊடாகச் சமாதானப் பயணம் வலுப்படவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடைய சிங்களக் கலைஞர்களில் தர்மசிறி பண்டாரநாயக்காவும் ஒருவர். இவரது கடுமையான உழைப்பு யாழ்பாணத்தில் சிங்கள நாடகங்களுக்கு கணிசமான வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“நிலவருகே மரணம்” நாடகம் வழக்காறுகளாலும், சமூக வாழ்க்கையாலும் அழிக்கப்படும் மனித வாழ்க்கையின் உச்சக்கட்ட உணர்ச்சிகர நொடிகளை வெளிப்படுத்துகின்றது. வாழ்விழந்து நிற்கும் பெண்கள் பிரதான பாத்திரங்களாக, அழிந்த வாழ்வின் மீது கேள்வி எழுப்பி நிற்கின்றனர். நாடகத்தின் கதை எளிதில் உணர்ச்சிவசப்படும் முக்கோணக் காதலைக் கொண்டுள்ளது. ஒரு மணமகன், விவாகமான ஆண், மணமகள் என்பவர்களின் பாத்திரங்கள் இம்முக்கோணங்களாகும்.

லோர்க்கா தனது காலத்தில் நிலவிய தீவிரவாதம், சகிப்புத்தன்மை இல்லாமை, நெகிழ்ச்சியற்ற நிலை போன்றவற்றை தனது நாடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்நாடகமும் அவ்வாறான கருப்பொருளையே வெளிப்படுத்துகிறது. “நிலவருகே மரணம்” நாடகம் மேடை நாடகமாக மட்டுமன்றி Ballet, இசைவடிவம், திரைப் படமாகவும் உலகில் பல மொழிகளில் வெளி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடகத்தின் காட்சிப் படிமங்கள் யதார்த்தமாகவே நகர்ந்தன. மேடையில் இரண்டு வீடுகள் தோன்றி மறைந்தன. மிக இயல்பான யதார்த்த அசைவுகளும் பேச்சுகளும் காணப்பட்டன. யதார்த்தக் கதைப்போக்கில் யதார்த்தத்தை மீறிய காட்சிப் படிமத் துண்டங்களும் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன. மேற்கின் யதார்த்த நாடகம் ஒன்றை எமது பண்பாட்டின் ஆற்றுகைத் தன்மைகளையும் உள்ளடக்கி மேடையேற்றியதற்கு “நிலவருகே மரணம்” ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆடல், பாடல் பொருத்தமறிந்து பயன்படுத்தப்பட்டிருந்தது. திருமணவைபவம் என்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆடல்களை மிகத் திறமையாக கையாண்டிருந்தார் நெறியாளர். யதார்த்தமும் யதார்த்தமின்மையும் சீராக ஒருங்கிணைக்கப்பட்டு பக்குவமாக குழைக்கப்பட்ட கலவையாகத் தரப்பட்டிருந்தது நாடகத்தின் சிறப்பு.

இந்த இரு தளங்களிலும் பார்ப்போரை அழைத்துச் செல்வதற்கு நடிகர்களின் நடிப்பு துணைநின்றது எனலாம். குறிப்பாக வேலைக்காரப் பெண்ணாக நடித்த பெண்மணி மிக அற்புதமாக யதார்த்தம், யதார்த்தமின்மை ஆகிய இரு தளங்களின் இரு அந்தலைகளுக்கும் சென்று வந்தார். மிகத் தளர்வாக எந்தச் சலனமுமின்றிய அவரது நடிப்புக்கு ஈடுகொடுப்பதாக எனைய பிரதான பாத்திரங்களின் நடிப்புக் காணப்படவில்லை எனலாம். மணமகளின் துலங்கல்கள் நாடகத்தின் நகர்வு வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இருந்ததை உணரமுடிந்தது.

தொட்டிலுடன் பெண்ணொருவர் தாலாட்டுப் பாடலுக்கு ஊடாடியது மிகத் துல்லியமாக ஒரு குழந்தைப் பராமரிப்பையும் தொட்டிலில் ஒரு உயிர்ப்பான குழந்தையையும் வெளிப்படுத்தியிருந்தன. இசை, இசைப்பாடல்கள் நன்றாகவே பொருந்தி அசைந்தன. தற்புதுமை இசை தற்புதுமை நடனத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தது. நாடகத்தில் உணர்வுகளையும் அசைவுகளையும் துலக்கமாக்குவதற்கு “நிலைகள்” (Poses)  பயன்படுத்தப்பட்டிருந்தன. முகபாவங்களும் மிகத் துல்லியமாக வெளிப்பட்டு நின்றன. ஒவ்வொரு சின்ன அசைவுகளும் கவனமெடுக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தன. வார்த்தைகள் மிக நேர்த்தியாகத் தெறிக்க விடப்பட்டிருந்தன. சில பாத்திரங்களில் மேடைப் பதட்டத்தை உணரமுடிந்தது.

நிலா, பலிகொள்ளும் காலம், கொலைச் செயல் என்பன குறியீடுகளாக, பாத்திரங்களாக மேடையில் காட்டப்பட்டிருந்தன. கொலை நெஞ்சை உறுத்தியபோது மேடையெங்கும் கறுப்பு உடைகளில் விதவைக் கோலத்தில் பெண்கள் நின்ற காட்சி தோன்றியது. அந்தக் காட்சி பின் மேடையின் பின் தளத்தில் இரண்டு உடல்கள் தூக்கிச் செல்லப்படும் சவ ஊர்வலம், ஊர்வலத்தின் பின் ஆங்காங்கே தனியன்களாக கறுப்பு உடைகளில் நிற்கின்ற பெண்கள், இறுதியில் வெறும் இருள் உருவங்களால் உருவாகிய ஆழமான மேடைக் காட்சிகள் என்பன இழப்பின் துயரத்தை இழப்பின் மீதானதும் எதிர்காலம் மீதானதுமான ஆழமான துயர் நிறைந்த விசாரணையை வெளிப்படுத்தி நின்றன.

திறந்திருந்த மேடையில் ஒளியைப் பயன்படுத்தி வெவ்வேறு காட்சி மாற்றங்களை கொடுக்கிறார்கள். இருக்கைகள் பெட்டகம் மேடைப்பொருட்களாக இருந்தன. வெவ்வேறு தளத்தைக் கொடுப்பதற்கும் மேடை ஆழத்தை ஏற்படுத்துவதற்கும் பின் தளத்தில் இருந்த படிகள் பயன்பட்டன. ஒளிக் கருவிகள் கச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. பின் மேடையில் திரைகள் ஏதுமின்றிய வெள்ளைச் சுவர் ஒளியால் வெவ்வேறு பின்புலத்தை கொடுத்து நின்றது. நேரக்கட்டுப்பாட்டுடனான ஒளிப்பயன்பட்டில் சிறு சிறு தடங்கல்களையும் உணர முடிந்தது.

ஆடைகள் 1933ஆம் ஆண்டின் ஸ்பெயின் மக்களின் ஆடைகளாக இருந்தன. கைப்பொருட்கள், தலையணிகள், பாதணிகள் அனைத்தும் மேற்குலகின் பண்பாட்டை வெளிப்படுத்தி நின்றன.

“நிலவருகே மரணம்” நாடகத்தின் அளிக்கை முறைகள் முக்கியமாக, மேடை அசைவுக் கோலங்கள் அழகாக இருந்தன. மிகப் பிரபல்யமான மேற்குலகின் யதார்த்த நாடகங்களின் கவித்துவப் பண்புகளைக் கொண்டிருந்தன. கவிதைகள் முக்கியமாக செந்நெறிப் பண்பு கொண்ட கவிதைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. மொத்தத்தில் ஆற்றுகை செந்நெறிப் பண்பு கொண்டுதாகவே காணப்பட்டது.

நீண்ட நாட்களின் பின் ஒரு யதார்த்தப் பாங்கான நாடகத்தை பார்க்கின்ற வாய்ப்பு மனநிறைவைத் தந்தது. விளம்பரப்படுத்தல் ஊடாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் கிடைத்தனர். வசதியற்ற கைலாசபதி மண்டபத்தில் பொறுமையாக ஒன்றரை மணிநேரம் இருந்தார்கள். இவ்வாறான நாடக மேடையேற்றங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். நாடகங்கள் போடுகின்ற, பார்க்கின்ற, பண்பாடு வளர்ச்சியுற ஆதரவளித்தல் துறை சார்ந்தோர் கடமையாகும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: