Theva

ஆர்கொலோ சதுரர் நாடகத் தயாரிப்புப் படிமுறை

In பகிர்வு on மார்ச்17, 2008 at 7:13 முப

அனுபவப் பகிர்வு

– சா.சிவயோகன்

arkolo-1.jpg

 மனித நாகரீகத்தின் தோற்றத்தோடு கலைப்படைப்புக்களின் வரலாறும் சங்கமிக்கின்றது. ஒரு உயிரியினுடைய அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாலும் மனித மூளையினது விருத்தி, வேறு பல தேவைகளை வேண்டி நிற்கையில், இவற்றை நிறைவேற்றித் திருப்தி காணவேண்டிய நிலைமையின் ஒரு அம்சமாகவே கலைகள் உருவாகியிருக்க வேண்டும். எழுந்தமானமான வெளிப்பாடும், ரசனையும், திருப்தியும் மெல்ல மெல்ல ஏதோவொரு ஒழுங்கமைவுக்குள் வரத்தொடங்க, அவை தனித்தனியாக அடையாளங் கண்டு வேறுபடுத்தக் கூடிய தன்மைகளையுடைய வெவ்வேறு கலைப்படைப்புகள் ஆகுகின்றன.

கலைகளினது அடி நாதமாக திருப்தி அமைகிறது. இந்தத் திருப்தி கலையைப் படைப்போரிலும், அதனை நுகர்வோரிலும் ஏற்படுகிறது. அடையாளங்காணுதல், உணர்ச்சிகளின் வெளிப்பாடு, அறிகைப் புலம்சார் இடைவினை, அனுபவத்தேடல் போன்ற பல காரணிகள் பிரக்ஞை நிலையிலும், ஆழ்மனத் தளங்களிலும் (நனவிலி மனம்) ஊடாடி திருப்தியைத் தோற்றுவிக்கின்றன. ஒரு கலைப் படைப்பை உருவாக்குகின்ற போதும், அதனை நுகரும் போதும் ஏற்படுகின்ற திருப்தி மனித மூளையின் பல பகுதிகளில் அதிர்வுகளை ஏற்படுத்தி, நிறைவான ஒரு அனுபவத்தைத் தருகின்றது.

மனித வாழ்விலே ஏற்படுகின்ற திருப்தியானது பல தளங்களிலே ஏற்படுகின்றது. தாகம் கூடியிருக்கும் வேளையிலே ஒரு மிடறு தண்ணீர் கிடைக்கும் பொழுது உண்டாகும் திருப்தியும், சலப்பை முட்டியதும், அதை வெளியேற்றுகையில் ஏற்படுகின்ற திருப்தியும் மிகவும் அடிப்படையான ஆதியான தளங்களில் நிகழ்வன. இவை போலவே பசியும் பாலியல் தேவைகளும் அமைந்துவிடுகின்றன. உறவுப் பரிமாற்றங்களிலே கிடைக்கின்ற திருப்தியானது இவற்றைவிட வித்தியாசமானதும் சிக்கலானதுமாக இருக்கின்றன. ஆனால் கலைகளினூடாக ஏற்படுகின்ற திருப்தியானது இந்த அடிப்படை விடயங்கள் தாண்டி உள்ளத்தின் ஆத்மார்த்தமான தளங்களில் நிகழ்கின்றன.

கலைகளினூடாகக் கிடைக்கப் பெறுகின்ற உணர்வு பல சமயங்களில் மகிழ்வூட்டுவனவாகவும் இருந்துவிடுகின்றன. இது கலைகளை நோக்கிய மானுடக் கவர்ச்சிக்கு அவசியமானதாகும். ஆயினும் மகிழ்வூட்டலையும் தாண்டி மனதின் ஆழமான தளங்களில் ‘அருட்டலை’ ஏற்படுத்துவதே கலைகளின் பணியாகிறது. இதனைச் செய்து முடிப்பதே கலைஞர்களுக்கு இருக்கின்ற ஆனந்தமான சவாலாகும்.

மேலோட்டமான மகிழ்வூட்டலையும் தாண்டி ஆழமான உணர்வுகளைத் தோற்றுவிப்பதற்கு அறிகைப்புலம்சார் தொழிற்பாடுகளும் தேவைப்படுகின்றன. இவற்றைத் தூண்டுவதாகவே கலைப்படைப்புக்களில் உட்பொதிந் திருக்கின்ற, வெளிப்படுத்தப்படுகின்ற செய்தி இருக்கின்றது. ‘சேதிசொல்லாத’ எவற்றையுமே கலைப்படைப்பு எனக் கருத முடியாது. சொல்ல வருகின்ற செய்தி எப்படிச் சொல்லப்பட்டது என்பதிலே கலை நுணுக்கங்களும் ஊடகமும் உறவாடி அழகுணர்வையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் கலை வடிவங்களாகின்றன.

arkolo-2.jpgநடனநாடகம் (இதனை நாட்டிய நாடகம் என்று வழக்கில் சொல்லப்படுகிறது) பல கலைக்கூறுகள் இணைந்த செழுமையான ஒரு கலை வடிவமாகும். நடன அசைவும், வெளிப்பாடும், இசைப்பாடலுடன் இணைந்து நாடகமாகி மனித வாழ்வின் முரணணிகளைச் செய்திகளாகக் காவி வெளிப்படுத்தும் ஆற்றலை இந்தக் கலைவடிவம் கொண்டுள்ளது. ஆடலும் இசையும்; மனிதனின் ஆதியான கலைகளாக இருப்பதனாலே அவை சேர்ந்துள்ள எவையும் மனங்களை இலகுவில் அடையக் கூடியனவாக இருந்து விடுகின்றன.

நடன நாடகம் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மிகவும் பரிச்சயமான, ஏற்றுக்கொள்ளப்பட்ட, அழகியல் நிறைந்த ஒரு கலைவடிவமாக மிளிர்ந்து வருகிறது. பரதக்கலை தேவதாசியினரிடமிருந்து விடுபட்டு மத்தியதர, உயர்தர வர்க்கத்தினரது பார்வையில் ஒரு அந்தஸ்து உடைய கலையாக மாறியிருக்கின்ற சூழ்நிலையில் (இது நாடகத்திற்கு இதுவரை ஏற்படவில்லை) ஒரு நடன நிகழ்வைப் பார்க்கப் போகின்றவர்கள், கிட்டத்தட்ட ஒரு திருவிழா, கலியாண வீட்டிற்குப் போவது போல ‘வெளிக்கிட்டு’ப் போகிறதும், நடனம் பயின்றவர்கள் பயிலுபவர்கள் பயிற்றுபவர்கள் யாவருமே சாதாரண நேரங்களிலேயே கூடியளவு பூச்சோடும் படபடக்கும் நயனங்களோடும் லாவகமான உடல் அசைவுகளோடும் இருப்பதுமான ஒரு ‘உபகலாசாரம்’ உருவாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பிரபல்யமாக இருக்கின்ற இந்தக் கலை வடிவத்துடன் இணைந்து ஒரு தயாரிப்பை மேற்கொள்வதற்கு நாடக அரங்கக் கல்லூரியினரான நாம் துணிந்தோம்.

இதுவரை காலமும் ஈழத்திலே நடந்த பல நடன நாடகங்கள் பண்டைத்தமிழ் இலக்கியங்களிலிருந்தும் இதிகாச புராணங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட சில பகுதிகளையே கருப்பொருளாகக் கொண்டு அளிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. விதி விலக்காக அமைந்த சில நடன நிகழ்வுகளையும் பார்த்ததுண்டு. பரதம் என்கின்ற கலைவடிவோடு பாரம்பரியமாகத் தொடர்கின்ற ஆடை அலங்காரங்கள், ஆடல் முறைகள் பாவவெளிப்பாடுகள், பாடும் முறைமை என்பவற்றோடு இவ்வாறான களங்கள் மிக இலகுவில் ஒன்றித்துப் போகக்கூடியன. இந்தச் செல்நெறியை அதிகம் குழப்ப விரும்பாது மகாபாரதம் என்கிற மானுட இலக்கியத்திலிருந்து ஒரு துளியை எடுத்து அளிக்கை செய்யக் கருதினோம்.

இவ்வாறு இலக்கியத்திலிருந்த சில பகுதிகளை எடுத்து அளிக்கை செய்வதில் பல நன்மைகள் இருக்கின்றன. பொதுவாக அளிக்கை  செய்யப்படும் பகுதியின் முன்கதை பின்கதை பலருக்குத் தெரிந்திருக்கும், பாத்திர அறிமுகங்கள் அதிகளவில் தேவைப்படாது. மேலும் அதனுடைய கதை அறிந்த ஒன்றாக இருப்பதனால் அளிக்கை கொண்டு வரும் செய்தி, அளிக்கை செய்யப்படும் முறைமை, கலை நுணுக்கம் போன்றவற்றிற்குப் பார்வையாளர் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

அதேவேளை இவ்வாறு செய்கின்றபோது பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிவரும். ஒரு நிகழ்வைப் பற்றிய வெவ்வேறு விதமான இலக்கிய வாசிப்புகள், வெவ்வேறு விதமான தகவல்களைத் தரும் இலக்கிய பாத்திரங்களை நாங்கள் ஊறிப் போய் இருக்கின்ற தென்னிந்திய நாடக, திரைப்பட வார்ப்புகளிலிருந்து விலக்கிப் பார்ப்பதில் பல சங்கடங்கள் எழலாம். மேலும் இலக்கிய மாந்தர்களை அவர் தம் முரண்பாடுகளை, அவற்றை அவர்கள் எவ்வாறு சாதகமான பாதகமான முறைகளில் கையாண்டு இருக்கின்றனர் என்பதனை மானுடவியல், உளவியல், சமூகவியல், அரசறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகுகின்ற போது அல்லது சில விடயங்களில் அந்தப் பாத்திரங்களை அல்லது சம்பவங்களை விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டி வரலாம். சுவாரசியமாக அரசியல் கலப்பில்லாத (சுத்தமான!) இலக்கிய நாடகங்களைத் தயாரிக்க வேண்டும் என்கிற ஒரு தவறான புரிந்துகொள்ளலுடன் கூடிய கோஷமும் சில வருடங்களாக இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்து வந்தது.

கலைகளை பல்வேறு விதங்களில் வேறுபடுத்திப் பார்க்கும், படிக்கும் மரபு இருக்கிறது. இதன் ஒரு படியில் தனி மனிதரால் உருவாக்கப்படும் கலைகள், பலர் சேர்ந்து உருவாக்கும் கலைகள் என்ற பிரிவும் இருக்கிறது. பொதுவாக நாடகம் ஒரு கூட்டுக் கலையாகவே இருக்கிறது. “ஆர்கொலோ சதுரரைப்” பொறுத்தவரையில் இந்தக் கூட்டுறவு அதனுடைய எழுத்துருவாக்கத்திலேயே ஆரம்பமாகியது.

திருமதி சாந்தினி சிவநேசன், திரு தவநாதன் றொபேட், கவிஞர் முருகையன், குழந்தை ம.சண்முகலிங்கம் என்கிற கலைஞர்களை இணைத்து, அவர்களது எண்ணங்களையும் துறைசார் கலைவெளிப்பாடுகளையும் இணைத்து, மாலையாகக் கோர்க்கின்ற பொறுப்பை நான் எடுத்துக்கொண்டிருந்தேன். மேலே குறிப்பிட்ட ஐவரும் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடி தயாரிப்பை மேற்கொள்ள முடியவில்லை. எனினும், இவர்கள் தங்களுக்குள் ஏற்கனவே பரிச்சயமானவர்களாக இருந்தமையினால் ஒவ்வொருவரும் மற்றவர்களது சிந்தனையோட்டத்தையும் புரிந்துகொண்டு தங்களது துறைசார் பங்களிப்பை வழங்கி எழுத்துருவையும் தயாரிப்பையும் செழுமைப்படுத்தினார்கள். இந்த எழுத்துரு உருவான படிமுறையைச் சுருக்கமாகப் பார்க்கலாம் என எண்ணுகிறேன்.

படி ஒன்று- தயார்ப்படுத்தல்

இந்தப் படிமுறையில் பல ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக திருமதி சாந்தினி சிவநேசன் அவர்களுடன் கலந்தரையாடிய போது நடன நாடகம் தயாரித்து அளிக்கை செய்யப்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. இது எழுத்துருவாக்கத்தை மேற்கொள்வதில் ஒரு உத்வேகமாக அமைந்தது. ஏனைய கலைஞர்களுடனும் கலந்துரையாடி அவர்களது பங்களிப்புக்கான சம்மதத்தையும் பெற்றுக்கொண்டோம்.

கருப்பொருள் சொல்லப்போகின்ற செய்தி தொடர்பாகவும் தெரிவு செய்யப்படுகின்ற களம் பற்றியும் நாடக அரங்கக்கல்லூரியினரது வழமையான வளஆளணியினருடன் கலந்துரையாடப்பட்டது. மகாபாரதத்தின் பல்வேறுவிதமான வாசிப்புக்கள் உசாவல் செய்யப்பட்டன. இலக்கியங்களில் பரிச்சயமுள்ள அறிஞர்களிடமிருந்தும் நேரிலோ, இலத்திரனியல் ஊடகங்களுடாகவோ தகவல்களையும் மனப்பதிவுகளையும் அறிந்து கொண்டோம்.

வழமைபோல குழந்தை ம.சண்முகலிங்கம் எல்லாவற்றையும் குறித்துக்கொண்டார். அடுத்த படிக்குப் போவதற்கு ஒரு அரும்பு காலத்தையும் எடுத்துக்கொண்டார்.

படி இரண்டு – முதல் வரைவு

படி ஒன்றில் கிடைத்த தகவல்களையும் மனப் பதிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு, குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் அதனை ஒரு நாடக வரைவுக்குள் கொண்டு வந்தார். இந்த வரைவு கூடுதலாக விவரிப்புப் பாணியிலும் தேவைப்படுகின்ற இடங்களிலே உரையாடல்களைக் கொண்டதாகவும் இருந்தது. மேலும் இந்த வரைவில் அவர் அதிகளகவு ஒலி, ஒளிக் குறிப்புக்களையும் எழுதியிருந்தார்.

படி மூன்று – சட்டக ஒழுங்கமைப்பு

மேலே குறிப்பிட்ட முதல்வரைபை நடன நாடகத்துக்குரிய சட்டகங்களாக அந்தக் கலை வடிவத்திற்கு அமைவான முறையில் வகைப்படுத்தும் படியாக இது அமைந்தது. இதன் பொழுது ஒழுங்கு மாற்றம், பாடல் வருகின்ற இடங்கள், வசனங்கள் தேவைப்படுகின்ற இடங்கள், நடனமுறைகள், இசையின் பங்களிப்பு என்பவை கருத்தில் எடுக்கப்பட்டன. இதனூடாக ஒரு சட்டக வரைவு உருவானது.

படி நான்கு – மெட்டிசை

முதல்வரைவின் விபரங்களையும் சட்டக வரைவின் ஒழுங்கமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு றொபேட் அவர்கள் மெட்டிசைக் கோலங்களை உருவாக்கிய பகுதி இதுதான். எங்களது வழமைக்கு மாறாக, பாடல்கள் இல்லாத சூழ்நிலையில் ஒவ்வொரு சட்டகத்தையும் விளங்கி தேவையான மெட்டிசைகள் உருவாகின. அது ஒரு நல்ல மகிழ்வான அனுபவம்.

படி ஐந்து – கவி பாடல்

படி நான்கில் உருவான இசைக் கோலங்களையும் மூல சட்டக வரைவுகளையும் வில்லிபாரதப் பாடல்களையும் கொண்டு சென்று கவிஞர் முருகையனிடம் கொடுத்தோம். மெட்டிசைகளையும், சம்பவங்களையும் சுருக்கமாக விபரித்தோம். அவர் இசைப் பரிச்சயம் உடையவராகையினால் இவற்றை மிக இலகுவாக ஆனால் ஆழமாக உள்வாங்கி அவருக்கேயுரிய சிறப்பான ஆளுமைக் குணங்களோடு இந்நாடகத்தின் பல பாடல்களையும் பாடல்களுடன் முன்-இடை-பின் ஆகத் தேவைப்பட்ட வசனங்களையும் உருவாக்கித் தந்தார்.

படி ஆறு – இசைப்பதிவு

கவிஞர் முருகையனது பாடல்களை மீண்டும் மூல இசையுடன் ஒப்பிட்டுக் கவிநயம்குன்றாது பாடி ஒலிப்பதிவு செய்யும்படி முறையாக இது அமைந்தது. தேவையான இடங்களில் வில்லி பாரதப் பாடல்களும் பாரதியார் பாடல்களும் நாட்டார் பாடலும் இசையமைக்கப்பட்டன. தேவையான இடங்களில் நிரவு இசைகளும் கருஇசையும் உருவாக்கப்பட்டன. இவையெல்லாவற்றையும் ஓரளவு நல்ல முறையில் ஒலிப்பதிவு செய்து கொண்டோம்.

arkolo-4.jpg

படி ஏழு – இறுதி வரைவு

இப்பொழுது எங்கள் கையில் விளக்கங்களுடன் கூடிய முதல் வரைவும் ஒழங்குகளுடன் கூடிய சட்டக வரைவும் தேவையான இசைக்கோலங்களும் உணர்வுகளுடன் கூடிய பாடல்களும் இருந்தன. அவற்றை வைத்துக்கொண்டு அவை தருகின்ற உணர்வுகளையும் செய்திகளையும் விபரங்களையும் உள்வாங்கிக் கொண்டு நடன அளிக்கையை மனதிடை நிறுத்தி இறுதி வரைவை உருவாக்கினோம். தேவையான இடங்களில் எல்லாம் வசனங்கள் மீண்டும் எழுத்துருவாக்கம் பெற்றன. இந்தவாறு உருவான எழுத்துருவுக்கு பலவிதமான தலைப்புக்களைச் சிந்தித்து “ஆர்கொலோ சதுரர்” என மகுடமிட்டோம்.

இந்த எழுத்துருவாக்கப் படிமுறைகள் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் வழமையாக நாடகம் எழுதும் முறைமையிலிருந்து வேறுபட்டனவாகும். ஒவ்வொரு படிநிலையிலும் திருமதி சாந்தினி சிவநேசனுடன் கலந்துரையாடி அவரது உள்ளீடுகளையும் பெற்றுக்கொண்டோம். பின்பு எழுத்துருவையும் ஒலிப்பேழைகளையும் அவரிடம் தயாரிப்புக்காகச் சமர்ப்பித்தோம். இந்தப் படிமுறைகளுக்கு ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் தேவைப்பட்டன.

இந்த நாடக எழுத்துருவைத் தயாரித்து அளிக்கை செய்வதில் பலவிதமான இடர்பாடுகள், பயப்பாடுகள் எழுந்தன. அவற்றில் முக்கியமான ஒன்று இந்த நாடகத்திற்குத் தேவையான மனித வளங்களைத் திரட்டி, குறுகிய காலப்பகுதிக்குள்ளே போதியளவு ஒத்திகைகளைப் பார்ப்பது பற்றியதாக இருந்தது. அந்தக் காலப்பகுதியிலே நாட்டில் கொழும்பு – யாழ்ப்பாணப் பயணம் தரை வழியாக – A9 ஊடாக – நடைபெறத் தொடங்கியிருந்தது. இதனால் வரவும் போக்கும் அதிகமாகி பலரும் விருந்தினர்களை உபசரிப்பதிலும், சுற்றுலாக்களை மேற்கொள்வதிலும், விழாக்கள் மேற்கொண்டாட்டங்கள் நடத்துவதிலும் முனைப்புப் பெற்றிருந்தனர். இதனால் தேவையான நடன நாடக மாந்தர்களையும் இசை வழங்குபவர்களையும் ஒன்றாகத் திரட்டியெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. மற்றையது,  இந்தக் காலப்பகுதியில்  யாழ்ப்பாணத்தில் போர்ச் சத்தங்கள் குறைய பிரிந்தவர் சேர்ந்து, பழஞ்சலிப்புக்கள் கொட்டி பழங்கணக்குகள் பார்த்து கூடி மகிழ்ந்து குலாவினர். பல கலாசாரங்கள் ஊடாடி, பண்பாடும் கலைகளும் தேட்டங்களும் விற்று வாங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இவ்வாறான புறநிலை யதார்த்தச் சூழலில் ஆர்கொலோ சதுரரைத் தயாரிப்பதில் சிரமங்கள் ஏற்படத்தான் செய்தன.

பரதக்கலையின் கட்டுப்பாடுகளுக்குள் நின்று கொண்டு எவ்வாறு இதனைத் தயாரித்து அளிக்க முடிந்தது என்பது முக்கியமான விடயமாகும். அதில் திருமதி சாந்தினி சிவநேசன் அவர்களின் பங்கு அளப்பரியது. இந்த நடன நாடகத்தினுடைய அரையிறுதி வடிவத்தை ஆடையலங்காரங்கள், மேடை ஒப்பனைகள், பூச்சுகள் இன்றிப் பச்சையாகப் பார்க்கக் கிடைத்தது. அதன் பிறகு ‘ஆர் கொலோ சதுரரின்’ அளிக்கைகளைப் பற்றி பலர் சொல்லிக் கேட்கவும் எழுத்தால் அறியவுமே முடிந்தது. அது எனது துர்ப்பாக்கியம். சில நியதிகளை மாற்ற முடியாதுதானே!

இந்த நாடக அளிக்கையின் நிர்வாகப் பொறுப்பை நாடக அரங்கக் கல்லூரியினர் ஏற்றிருந்தனர். தயாரிப்பின் போது பல துறைசார் கலைஞர்கள் தங்கள் ஆலோசனைகளையும் பங்களிப்புக்களையும் வழங்கியிருந்தனர். மேலும் பலர் பல செலவுகளைப் பொறுப்பெடுத்து அனுசரணையாளர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். குறிப்பாக எழுத்துரு ஆக்கத்தின் போது தமது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து  கொண்ட பேராசிரியர் சண்முகதாஸ், பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் சிவலிங்கராஜா, சொக்கன், சனாதனன் ஆகியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். (கீதை)

  1. supper notes, thanks for your help me.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: