Theva

உண்மையை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஆணித்தரமாக வெளியிடுவது ‘நடிப்பு’

In செய்தி on மார்ச்14, 2008 at 6:59 முப

பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி)அவர்கள் 24.05.2005 அன்று கூத்தரங்கிற்காக வழங்கிய கருத்துரை ஒலிப்பதிவு செய்யப்பட்டு எழுத்துருவாக்கப்பட்டுத் தரப்படுகிறது.

நான் பலகாலமாக ஷேக்ஸ்பியரது வசனத்தைப் பற்றிச் சிந்திப்பதுண்டு. அதாவது, “உலகம் ஒரு நாடக மேடை. மக்கள் எல்லோரும் நடிகர்கள்.” போகப்போக அதனது உண்மை எனக்கு இன்னும் அதிகமாகத் தெரியவந்தது.

ஒரு சின்னப் பிள்ளை இலக்கியத்தில் ஈடுபடுவதற்கு முன்னர், அதாவது சிறுகதையிலோ நாவலிலோ ஈடுபடுவதற்கு முன்னர் நாடகத்தைத்தான் பார்க்கிறது. நாடக அரங்கில் கூத்துப் பார்க்கிறான். அதேவேளை, வீட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அந்தந்த நேரத்திற்கு ஏற்ப, கலாசாரத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்ட நாடகம்தான். அதையும் அவன் பார்க்கிறான். அதனால்தான், பல பிள்ளைகள் முதல் முதலில் பரீட்சயமாவது நாடகத்தில்தான் என்கிறேன். என்னைப் பொறுத்தவரை நூற்றுக்குநூறு வீதம் இது உண்மையானது.

நான் மருத்துவத்துறையைச் சார்ந்தவன். நாடகத்தில் ஓரளவு ஈடுபட்டதன் காரணமாக என்னுடன் பேசுபவர், வாழ்பவர்;களுடைய மனோபாவத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் நாடகத்தில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளும்போது, ஓரளவிற்காவது அந்தப் பாத்திரத்தின் குணாதிசயங்களை நன்றாக உணர்ந்து செயற்படவேண்டும். ஓர் உதாரணத்தில் வைத்து சொல்வதானால், ஒரு குருடன் பாத்திரத்தில் சிறிது நேரமாவது குருடனாக நடிக்கவேண்டும். கண்ணை மூடிக்கொண்டு குருடனாக நடிக்கும்போது, கட்புலன் இழந்தவர் அவரது வாழ்நாள் முழுவதிலும் எதை இழக்கிறார் என்ற ஒரு உண்மையான புரிந்துணர்வு வருகிறது.

மருத்துவத் துறையைச் சார்ந்த ஒருவர் படிக்கிற காலத்திலே ஏதாவதொரு நாடகத்துடன் தொடர்புபட்டிருந்தால் அல்லது அதில் நடித்திருந்தால் அவருக்கு அது கண்டிப்பாக உதவியாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை எனக்கு அந்த அனுபவம் உண்டு.

அது மட்டுமல்ல ஒருவர் தனது வாழ்வில் – அவர் எந்தத் துறையில் இருந்தாலும் – நேரத்திற்கு, தேவைக்கு ஏற்;ப அவர் யாருடன் பழகுகிறாரோ அவரது அறிவுக்கு ஏற்ப ஏறி அல்லது இறங்கிக் கதைக்க வேண்டிய ஒரு கட்டமிருக்கிறது. இந்த விடயத்தில் நேரு சொன்னது எனக்கு நல்ல ஞாபகம் வருகிறது. அவரை சிலர் கேட்டார்கள், “என்ன சேர் உலகத் தலைவர்களுடன் எல்லாம் அவர்களுடைய அந்தஸ்துக்கு ஏற்ப பேசும் நீங்கள் ஒரு சிறு பிள்ளையைக் கண்டால் அதற்கேற்;ப மாறிவிடுகிறீர்கள். இது எவ்வாறு முடிகிறது?” என்று. அவர் சொன்னார் ‘‘Every time i am acting – எந்தக் கட்டத்திலும் நான் நடிக்கிறேன்’’ என்று.

‘நடிக்கிறேன்’ என்றவுடன் நாங்கள் யோசிக்கக் கூடாது அது ஒரு ‘பொய்மை’ என்று.  உண்மையை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஆணித்தரமாக வெளியிடுவதுதான் ‘நடிப்பு’. அதற்கு அவதானிப்பு மிக மிகத் தேவை.

சில தொழில்களுக்கும் அது அவசியம். எழுத்தாளன்கூட முதன் முதலில் நாடகத்தில் பங்குபற்றியிருந்தால் அவனுக்கு கற்பனை வளம் வரும். எவ்வளவுதான் நெறியாளன் எங்களுக்குச் சொல்லித் தந்தாலும் அந்தப் பாத்திரத்துக்குள் போகும்போது எமது அனுபவம்தான் நடிக்கிறது. சொல்லித் தந்ததை அப்படியே கிளிபோல பேசுபவன் நல்ல நடிகனாக வரமுடியாது. அவனது ஆளுமை, அனுபவத்தின் மூலம் பாத்திரத்தை உணர்ந்து எந்தெந்த இடத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டுமோ – கோடிட்டு என்று சொல்லுவார்கள் – அந்த இடத்தில் அழுத்தம் கொடுத்துச் செய்வதுதான் உண்மையான நடிப்பு. அப்படிச் செய்யத்தான் வேண்டும். சில இடத்தில் கொஞ்சம் மிகையாகவரும். ஆனால், அப்படிச் செய்தால்தான் மக்களை உடனடியாகச் சென்றுசேரும்.

எல்லாத்துறைகளில் இருப்பவர்களுக்கும் நாடக அனுபவம் வேண்டும். ஏற்கனவே பலர் இப்படி இருந்திருக்கிறார்கள். பலரது பெயர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அரசியல்வாதிகள் எல்லாருமே நடித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இது இன்னும் அதிகம். ஆத்மீகத் தலைவர்கள் எல்லாம் நடித்திருக்கிறார்கள். ராமகிருஷ்ணர் நடித்திருக்கிறார். சத்திய சாயிபாபா நடித்திருக்கிறார். அவர்களின் பணிகளுக்கெல்லாம் ஆரம்பம் நடிப்புத்தான்.

இதேவேளை ஒரு நடிகனுக்கு, நாடகத் துறையில் ஈடுபடுகிறவனுக்கு வேறு பல கலைகள் தெரிந்திருத்தலும் அவசியம். அவனுக்கு ஏதோவொரு ரசனை இருக்க வேண்டும். எல்லாம் ரசனையோடு சேர்ந்த ஒரு வார்ப்புத்தான். ஒருவனது ஆளுமை மிக உன்னதமான சிந்தனையில் போகும் போது நாடகம் எழுதினாலும் சரி, நடித்தாலும் சரி, இயக்கினாலும் சரி அவன் ஒரு உயர் மனநிலைக்குப் போய்விடுகிறான். அவன் தனது வாழ்க்கையைக் கூட ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுடன்  இருந்து, தியானங்கள் ஒழுங்காகச் செய்து, சிந்தனையில் உச்ச நிலைக்கு வரும்போது அவன் மற்றவர்களைக் கவர்கிறான். ஆனபடியால் நாடகத்தை வளர்ப்பது, அதற்குப் புத்துணர்வு கொடுப்பது, புதிய புதிய சிந்தனைகளை வரவழைப்பது, பல விதமான நாடகங்களை மேடையேற்றுவது என்பன கண்டிப்பாக ஒரு சமுதாயத்துக்குத் தேவை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: