Theva

Editorial: பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார்

In பொது on பிப்ரவரி23, 2008 at 9:10 முப

டிசெம்பர் 26, 2004 சுனாமிப் பேரலை தமிழர் தாயகப் பிரதேசங்களைத் தாக்கி பல ஆயிரம் உயிர்களைப் பறித்துச் சென்றது. சொத்திழப்புக்களும் உயிரிழப்புக்களும் ஆழமான மனவடுக்களை உருவாக்கியுள்ளன.

பேரிடரினால் அல்லல்பட்டவர்களுக்குப் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் தன்முனைப்புடன், தன்னெழுச்சியாக தம்மால் முயன்றளவு உதவினார்கள். ஆனால். பேரிடர் வேளை செயற்படவேண்டியவர்கள் போதியளவு வேகமாகவும் அக்கறையாகவும் செயற்படவில்லையென்ற குற்றச்சாட்டு உண்டு. தமிழர் தாயகத்திற்கு வரவேண்டிய அரச உதவிகள் போதியளவு வரவில்லை. அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும், அழுத்தங்களும் போதியளவு மேற்கொள்ளப்படவில்லை. இழப்புக்களை உரிய முறையில் வெளிப்படுத்தி உதவிகள் வந்து சேர்வதற்கான ‘வழிகளை வெட்டவேண்டியவர்கள்’ அதனைச் செய்யவில்லை. மாறாக, பத்திரிகைகளில் தங்கள் பட்டங்களும் பெயர்களும் வரவேண்டும் என்பதற்கான செயற்பாடுகளில் அதிக நாட்டத்துடன் ஈடுபட்டிருந்தார்கள்.

நிற்க, சுனாமி அனர்த்தத்தினால் உளரீதியாக அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. இதற்கான ‘பரிகார முயற்சிகள்’ பற்றிப் பலரும் பேசுகிறார்கள். உளமருத்துவர்கள், ஆற்றுப்படுத்துனர்கள் இணைந்து ‘அனர்த்த கால உளநலப் பணிக்குழு’ ஒன்றை அமைத்து வழிகளைத் திட்டமிடுகிறார்கள். உளநெருக்கீட்டிற்கு ஆட்பட்டிருப்பவர்களை நெருக்கீட்டிலிருந்து மீட்டெடுக்க அரங்க நடவடிக்கைகள் தேவை என்ற முன்மொழிவுகளும் உண்டு. சில அரங்க நிறுவனங்கள் ஆற்றுப்படுத்தல் பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. இவ்வாறு ஈடுபடும் அரங்கத்திறன் உள்ளவர்களுக்கு உறவியல் சார் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

அரங்கினூடான உளசமூகச் செயற்றிட்ட வரைபுகளைத் தருமாறு பல சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் கோரியுள்ளன. அவசர அவசரமாகப் போதியளவு அரங்க அனுபவம் இல்லாதவர்களை உள்வாங்கித் திட்டங்களை எழுதிப் பணம் பெறும் முயற்சிகளில் ஒரு சில அரங்க நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

அவசர தேவை ஒன்றிற்காக அரங்கக் கலையைப் பயன்படுத்த முனைவது ஏற்புடைய ஒரு செயற்பாடே. இருப்பினும். இச்செயற்பாடுகள் உளவியல்துறைசார் நிபுணத்துவம் உடையவர்களின் வழி;படுத்தலுடன் மேற்கொள்ளப்படவேண்டும். அனுபவப் பகிர்வுகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள், உள்ளடங்கிய செயற்பாடுகளாக அவை அமைய வேண்டும். அரங்கினூடான ஆற்றுப்படுத்தல் பணியில் அரங்கு தொலைந்து போகாது இருத்தல் வேண்டும். ஆற்றுப்படுத்துனர், அரங்கத்திறன் கொண்ட ஆற்றுப்படுத்துனர், இந்த இரு நிலைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைத் தெளிவாக அறிந்து புரிந்து செயற்படுதல் அவசியம்.

உளத்தைப் பாதுகாக்கும் பணி புனிதமானது. மிகப் பக்குவமாக, ஆர்ப்பாட்டமின்றி நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டியதுமாகும். ஆற்றுப்படுத்தல் பணியில் ஈடுபடுவோர் அதன் உன்னத விழுமியங்களை பேணிப்பாதுகாத்தல் அவசியமானது. அரசியல் செல்வாக்கிற்கும் நிறுவன விளம்பரப்படுத்தலுக்கும் தனிநபர் விளம்பரப்படுத்தலுக்கும் இந்தப் பக்குவமான புனிதப் பணி பயன்படுத்தப்படுவது கண்டிப்புக்குரியது.

போர்க் காலத்தில் பிறர் ஈனநிலை கண்டு துள்ளிய அரங்கக் கலை, பிறர் ஈனத்தில் பிழைப்புத் தேடும் கலையாக மாறிவருவது வேதனைக்குரியது. இதனை, அரங்கத்துறை சார்ந்த அனைவரும் இணைந்து களைவது அவசியம்.

– ஆசிரியர் குழு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: