Theva

விடியலின் விம்பங்கள்

In சொற்சித்திரம் on பிப்ரவரி23, 2008 at 9:38 முப

சமாதானம் நின்று நிலைக்கவேண்டும் என்பதற்காகப் பல தரப்பினரும் பல்வேறு வழிகளில் முயற்சியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமாதானத்தில் ஏற்படுகின்ற சிறு சீறலைக் கண்டு ‘எல்லாம் உடைந்து விடும்’ எனும் அச்சத்தில் மக்கள் வாழந்து கொண்டிருக்கிறார்கள்.

எம்மை அடக்கி ஒடுக்கி ஆள நினைக்கிற அதிகார சக்திகளிற்கு எதிராகப் போராடும் நாம், எமக்குள்ளேயே நிலவும் சின்னச் சின்னப் பிரச்சினைகள், குரோதங்கள், துவேசங்கள், மனக்கசப்புக்களைக் களைந்தெறிந்துவிட்டு ‘மன இருள்’ அகற்றி அணிதிரள்வோம் என வேண்டுதல் செய்தவாறு வவுனியா அரங்காலயா பண்பாட்டுக் குழுவினர் குடாநாட்டிற்கு 19.12.2004 அன்று வருகை தந்தனர்.

‘விடியலின் விம்பங்கள்’ எனும் தெருவெளி அரங்காற்றுகையை நல்லூர் நாவலர் கலாசார மண்டப முன்றலில் நிகழ்த்தினார்கள். அரங்க ஆற்றுகைக்கு முன்னராக ‘சமாதானத்தைத் தேடி’ எனும் பொதுக் கூட்டமும் வவுனியா விழுது நிறுவன தவிசாளர் சாந்தினி சச்சிதானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கலாநிதி லக்ஷ்மன் மாரசிங்க (சிறிலங்கா சமாதானச் செயலகம், அரசியல் யாப்புக் குழுத் தலைவர்), கலாநிதி ரஞசித் அமரசிங்க (அரசியல் துறைத் தலைவர், பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்த ‘சமாதானத்தைத் தேடி’ என்ற நிகழ்வின் ஒரு பகுதியாகவே ‘விடியலின் விம்பங்கள்’ ஆற்றுகையும் இடம்பெற்றது. பிறமாவட்டங்களில் ‘ஒதுக்காதி ஒதுக்கன்’ என்ற பெயரிலேயே இந்த அரசியல் முரண்நிலைகளை ஆராயும் வீதி இசை நாடகம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இவ்வாற்றுகை தமிழக நாடகக் கலைஞர் பிரளயன் அவர்களின் அண்மைக்கால இலங்கை விஜயத்தின் போது அவரிடம் பயிற்சி பெற்றவர்களால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. விழுது, கிராம அபிவிருத்தி நிறுவனம், பெண்கள் அபிவிருத்தி நிலையம், திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகத்தின் விடியல் அரங்கக் குழு, உழைக்கும் பெண்கள் அமைப்பு ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தோர் ஆற்றுகையில் பங்கெடுத்தார்கள்.

வடமோடி, தென்மோடிக் கூத்துக்களின் பாடலமைப்புக்களை வைத்துப் புனையப்பட்ட பாடல்களுடன் வீதி நாடகத்திற்குரிய வெளிப்பயன்பாட்டில் இவ்வாற்றுகை நடைபெற்றது. ‘ஒக்கன்’ எனும் குறித்த பாத்திரம் மக்களின் ஒற்றுமை மத்தியில் ஏற்படுகின்ற சிறு சிறு பிரச்சினைகளை ஊதிப்பெருப்பிக்க விளைகின்றான். ஆயினும், அதனை இனங்காண்ட மக்கள் அவனை விரட்டியடிக்கிறார்கள். இங்கே பிரதானமாக இலங்கையில் இரு சமூகத்தவரும் இனமத வேறுபாடின்றி ஒற்றுமையாக இருக்கும் நிலமையை முன்நிறுத்தி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ‘தமிழ் பேசும்’ மக்களாகிய நாம் ஐக்கியப்பட்ட ஒன்றுபட்ட சக்தியாகத் திரண்டு நின்று உரிமைக்குரல் கொடுப்போம் என ஆற்றுகையாளர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆற்றுகை பாடல் லயம், சந்தம் காரணமாக இனிமை கொண்டிருப்பினும் வீதி நாடகத்திற்குரிய எந்த அடிப்படை மூலங்களையும் கொண்டிருக்கவில்லை. வீதியில் போடப்படுவது எல்லாம் வீதி நாடகமாகிவிட முடியாது. சில நடிகர்கள் தமது தனித்துவ முயற்சியில் நாடகத்தை நகர்த்திச் சென்றார்கள். ஆயினும், ஒட்டு மொத்தமாக வீதி நாடக விடயங்கள் பற்றி அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். பார்வையாளரின் இதயத்துடன் பேசமுற்படும்போது அதற்கேற்ற பக்குவம் பெறவேண்டும். ஆற்றுகையாளர்கள் மல்லுக் கட்டுவோராக மாறிவிடக்கூடாது. வாதப் பிரதிவாதங்கள் எழும். தீர்க்கமான கருத்தியற் சிந்தனையிருப்பின் பார்வையாளர்கள் பந்தாட நினைக்க மாட்டார்கள்.

அன்று அந்த ஆற்றுகையின் இறுதியில் கலந்துரையாடலும் எதிர்பார்க்கப்பட்டது. அது காரசாரமாக இருந்திருப்பின் வரவேற்கத்தக்கது. ஆனால், விதண்டா வாதங்களாகவும் ஆற்றுகையாளர்களை சிறுமைப்படுத்தியதாகவுமே இருந்தது. உண்மையில் இக் கலந்துரையாடலில் ஏற்பட்ட நிலைமையானது நாடகத்திற்கு முன்னர் நடைபெற்ற சமாதானம் பற்றிய பொதுக்கூட்டத்தின் பிரதி பலனே எனலாம். மக்கள் எப்போதும் விழிப்புடன்தான் இருக்கிறார்கள். இதனை யாரும் மறந்து விடக்கூடாது.

அரங்கின் மீது பற்றுக் கொண்டவர்கள் ஏன் அளிக்கை செய்கிறோம், யாருக்கு கருத்துக்கூறுகிறோம், என்ன கருத்துக் கூறுகிறோம், என்ன கருத்தைப் புரிந்துகொண்டோம், என்ன கலந்துரையாடுகின்றோம் போன்ற விடயங்களில் கவனம் கொள்ளுதல் சிறந்தது. அரங்கத் துறையில் கற்பதற்கு நிறையவே உண்டு. அதுவும் பட்டறிவால் பெற்றுக்கொள்ள மிக அதிகமாகவே உண்டு.

பின்னூட்டமொன்றை இடுக