Theva

முடிந்தும் முடியாதவற்றைப் பேசிய அரங்கு

In விமர்சனம் on பிப்ரவரி23, 2008 at 9:39 முப

trro_drama_11.jpg– இலக்கியா

அரங்கு பேசவேண்டியவற்றைப் பேசவேண்டும். பேச வேண்டியவை மறை பொருளாகக் கிடக்கும், மௌனமாகக் கிடக்கும். அவை புலணுணர்வைத் தட்டும்போதும் அடக்குமுறைகள், அச்ச நிலைமைகளால் பேசாப் பொருட்கள் ஆகிவிடுகின்றன. 1995இன் பின் ஏற்பட்ட அரசியல், இராணுவ மாறுதல்கள் குடாநாட்டின் அரங்கப் பயணத்தில் மிகுந்த தாக்கம் செலுத்தியிருந்தன. அரங்கு புரட்சிக்கான ஊக்கியெனக் கருதியதாலோ என்னவோ, அதன் மீதான இராணுவப் பார்வை கடுமையானதாகவே இருந்தது. அது இன்றுவரை அரங்கியலாளருக்கான அச்ச நிலைமையை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

எனினும் அவ்வப்போது அரங்கின் வீச்சு வேகங்கொள்வதை இனங்காணக்கூடியதாகவும் உள்ளது. அந்த வகையில் நீண்ட காலங்களின் பின் தே.தேவானந்த்தின் நெறியாள்கையில் உருவான ‘பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்’ எனும் நாடகம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கே ‘நீண்ட காலம்’ என்பது தேவானந்த்தின் சமூகப் பார்வையுடன் கூடிய அரசியல் சார்ந்த அரங்கியல் படைப்புக்களைக் கருத்தில் கொண்டதாகவே குறிப்பிடப்படுகின்றது. ‘விழிச்சுடர்’, ‘எல்லாம் சரிவரும்’, ‘உயிர்விசை’, ‘அக்கினிப் பெருமூச்சு’ என அவரது படைப்புக்களின் வரிசையில் தற்போது ‘பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்’ நாடகம் உருவாக்கம் பெற்றிப்பது அவரது தேறிய படைப்புக்களின் வருகையை நிச்சயப்படுத்திக் கொள்கின்றது.

trro_drama_09.jpgஇடையிடையே ‘முடக்கம்’, ‘நெஞ்சுறுத்தும் கானல்’ போன்ற இலக்கிய விருது பெற்ற நாடகங்கள் அவரால் படைக்கப்பட்டிருக்கின்றன. எனினும் அவை ஆற்றுகை வடிவத்தில் ‘தேறியவையாகக்’ கருத முடியாது. அவை என்.ஜீ.ஓ. தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருந்தன. அதனால், பிரசாரத் தன்மை மேலோங்கியிருந்தன அவற்றில். ஆயினும் அரங்கியற்படிம நுட்பங்களின் பயன்பாட்டால், அதிக பாhவையாளரைச் சென்றடைந்த காரணத்தால் அவையும் தேவானந்தின் அரங்கியற் பயணத்தில் இடம்பிடித்தவையாகவே உள்ளன.

அதேபோன்று தற்போது ‘பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்’ நாடகமும் என்.ஜீ.ஓ. தேவைக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அத்தேவையின் பரிமாணம் வேறுபட்டதாக அமைந்து கொள்கின்றமையை நாடகம் தெளிவாக உணர்த்தியுள்ளது. நிதி சேகரித்தல் நடவடிக்கைக்கு உட்பட்டதெனினும் அந்நிதித் தேவையின் நோக்கம் அந்நிதிப் பயன்பாட்டின் தன்மை மற்றும் நாடகம் கூறும் அல்லது உணர்த்தும் உணர்வுகள் என்பன இந்நாடகத்திற்கு பெறுமதி சேர்ப்பனவாகவே உள்ளன.

ஊர் தோறும் திரிந்து, ஓர் நாட்பொழுதுறங்கி, கூட்டாஞ் சோறாக்கியுண்டு உணர்ந்து வந்த செய்திகள் அரங்கிலே அளிக்கை வடிவம் பெற்றிருக்கின்றன. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் செயற்பாடுகளாக மேற்படி ஊர்த் தரிசிப்புக்கள் நடைபெற்றன. இச்செயற்பாட்டில் கிராமத்து யுவதிகள் தம்மை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தியிருந்தனர். அவர்கள் போரால் பாதிக்கப்பட்டு, இன்னமுமம் யுத்தச் சுமைகளைத் தாங்கிவரும் கிராமத்துப் பெண்களிடம் உறைந்து கிடந்த உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டார்கள். அவர்கள் பெற்ற செய்திகள், உணர்வுகளின் மூலத்திலிருந்து, எம் சமூக பண்பாட்டியல் அம்சங்கள் மற்றும் நம்பிக்கைகளுடன் இணைந்ததாக நாடக உருவாக்கத்தைச் செய்துள்ளார் தேவானந்த். அதற்குக் கவிதை வரிகளைக் கொடுத்தார் கவிஞர் நா.சிவசிதம்பரம். இசை கொடுத்தார் கலைஞர் த.றொபேட். நாடகம் 19.12.2004 அன்று கைலாசபதி கலையரங்கில் முதல் மேடையேற்றம் கண்டது.

நிகழ்விற்குப் பிரதம விருந்தினராகப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், கவிஞர் புதுவை ரத்தினதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். நாடகம் மேடையேறுவதற்கு முன்பாக உரையாற்றிய புதுவை இரத்தினதுரை அவர்கள் – சமாதானக் கிழவன் செத்து விட்டான் – என்ற பொருள்படும் கவிதையைப் படித்தார். (தான் எழுதிய கவிதையைத் தானே மேடையில் படிப்பது வழமையில்லை எனக் கவிஞர் குறிப்பிட்டுக் கூறியுமிருந்தார்.)

உண்மையில் பார்வையாளரின் அனுமதி கோரி அவர் படித்த அந்தக் கவிதை வரிகள் ஊட்டிய உணர்வுகள் நாடகத் திரை விலகலுக்கும் காட்சிப் படிமங்களின் நகர்விற்கும் மேலும் உரமூட்டியிருந்தன. அரங்கின் திரைகள் அகலத்திற்கு அங்கே சிதைவற்ற குடும்பப் படம் சட்டகத்துள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ரெடி ‘சிரியுங்கோ’ எனக் காட்சிகள் நகர்ந்தன.

ஏதிலிகளாய்அப்பு ஆச்சி, அப்பா அம்மா, அக்கா தம்பி என வாழ்ந்த குடும்பங்கள் யுத்த மேகங்கள் சூழ்ந்து கொண்டதால், அவற்றிடையே ஏற்பட்ட சிதைவுகளைக் குடும்பப் படங்களின் கதைகளினூடாகக் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. அந்த யுத்த சிதைவுகளை, வாழ்க்கைப் பிறழ்வுகளை எவ்வாறு ஒரு குடும்பப்பெண் முகங்கொள்கிறாள் என்பதில் கதைக் கரு தொடர்ந்து மையங்கொள்கிறது.

கடல் வலயப் பாதுகாப்பு நடைமுறையால் வஞ்சிக்கப்படுகின்ற குடாநாட்டு மீனவக் குடும்பங்கள் துகிலுரிந்து கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதும், தொடர்ந்து அவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகளும் கதையின் முன் அசைவுகளாக அமைகின்றன. தொழிலுக்குச் சென்ற குடும்பத் தலைவன் கடலால் திரும்பிவரத் தாமதிக்கின்றான். பின் ‘அனுமதிப்போரின்’ சித்திரவதையால் உயிரிழந்துவிடுகின்றான். இங்கே சி;த்திரவதையின் கொடுமையும், அவனது உயிரிழப்பும் தனி நடிப்பினூடாகக் காட்சியாகின.

சித்திரவதை செய்பவனை உருக்காட்டாது அல்லது படிமங்கொள்ளாது செய்யப்பட்ட இக்காட்சிப்படுத்தலில் நடிகன் தனது வேதனைகளின் எதிர்வினைகளைக் குறித்த நாடக மோடிக்கு ஏற்ப வெளிப்படுத்தியிருப்பின் அது அழகு பெற்றிருக்கும். ஆனால், வழமையான அடி உதைகளிற்குக் கிடைக்கும் எதிர்விளைவுகளே புலப்படுத்தப்பட்டன. உண்மையில் அந்த அடக்குமுறையின் வடிவம் புலப்படுமாற்றை குறுக்கிவிட்டதென்றே கூறலாம்.

அவன் இறுந்து விடுகின்றான். இறந்த உடலை மீட்கச் சென்ற சமூகத்தவர்கள் உடலைக் காவி வரும் வேளையில் நிகழ்ந்த காட்சிக்கு விளக்கம் கொடுப்பது போல் – ‘நேரம் பிந்தி வந்ததால அடிச்சுச் சாக்காட்டிப் போட்டாங்கள்’ என வசனம் உரைக்கின்றார்கள். இவை தேவையற்றவை. பார்வையாளர்கள் பழகிவிட்டார்கள் – குறியீடுகளைப் புரிந்துகொள்வதற்கும், யுத்த அவலங்களைத் தரிசிப்பதற்கும் – எல்லோரும் வாழ்வது இதற்குள்தான். இவ்வாறு தவிர்க்கப்பட வேண்டியவை, குறைக்கப்பட வேண்டியவை எனச் சில விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். அவை நடிகர்களின் திறன் சார்ந்த விடயங்களாகவும் அமைந்து கொள்கின்றன. நடிகர்களின் ஆட்தொகை மட்டுமே அரங்கைச் செழுமையாக்கி விடாது.

அவை ஒருபுறமிருக்க, அரங்கின் பின் பகுதியில் அமைந்த அலைகடலின் இளநீலக் காட்சியமைப்பு பொதுப் பின்னணியாக அமைய, கடலுக்குச் சென்று உயிர் துறந்தவரின் குடும்பத்தின் அவலம் கதையாக நகர்கிறது. காட்சிகள் நிஜத்திலும் மனத்தளத்திலும் விமர்சனத் தளத்திலும் எனப் படிமம் பெற்றுள்ளன. பொதுவாகவே கணவனை இழந்த பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதற்கான சமூகத்தின் எதிர்வினைகள், அதன் காரணமாக அவளது மனத்தில் எழும் உணர்வுக் கொதிநிலைகள் என்பன இந்த யுத்த பூமியின் அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன.

கணவனை இழந்த மனைவி உயிர்துறக்க விளைகிறாள். எனினும் பிள்ளைகளிற்காக உயிர்வாழவேண்டும்  என்பதில் திடங்கொள்கிறாள். அந்த மனவுறுதியானது அவளது கணவன் கூறுவதாகக் காட்டப்படுகிறது. (ஆவி நிலையில் மனப்பிரமையில் – அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது) அவள் முன் ஒரு காட்சி தென்படுகிறது. அதாவது அவன் இறந்த நாற்பத்தெட்டாம் நாள் அவனது குருதி கலந்த கடலில் மூன்றுமுறை மூழ்கி எழுந்தால் அவள் துணிவு பெறுவதற்கு வழிகிடைக்கும் என்று அது கூறுகிறது. ஆனால், யுத்தம், இடப்பெயர்வுகள், கடல் வலயத் தடைச் சட்டங்கள் என்பன நாற்பத்தெட்டு நாட்களைப் பல வருடங்கள் ஆக்கி விடுகின்றன. அவள் இந்தப் பல வருடங்கள் அனுபவித்த இன்னல்கள் எண்ணிலடங்காதவை. அவளது எதிர்பார்ப்பெல்லாம் மூன்றுமுறை கடலில் மூழ்கி எழுவது. இந்தச் சமூகம் அவளுக்குக் கொடுத்த வேதனைகள் நெறியாளரின் சமூகம் பற்றிய விமர்சிப்புடன் காட்சியாகியுள்ளன. அக்காட்சிப் படிமங்கள் வாதப் பிரதிவாதங்களிற்கும் சமூகம் சார்ந்த சிந்தனைக் கோட்பாடுகளிற்கும் மீள் வாசிப்புக் களத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

காலம் கனிந்து வரும் வேளை அல்லது கடல் செல்லும் வேளை வர அவள் கடல் சென்று மூன்று முறை மூழ்கி எழுகின்றாள். அதன் விளைவாகப் பல ‘மனப்புயங்கள்’ உயர்ந்த நிலையில் குடும்பப் படச்சட்டகத்துள் காட்சியளிக்கிறாள். இது நாடக முடிவு.

உண்மையில் மன அல்லது மத, சடங்காசார நம்பிக்கைகள் தொடர்பான கருத்தியல் அக முரண்பாடுகள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. முரண்பாடுகளின் களம் – அரங்கு, வாழ்க்கை! சமூகம், தனிநபர் வாழ்க்கை, சித்தாத்தங்கள், நம்பிக்கைகள் என ஏற்றும் நிராகரித்தும் நாடகத்தில் கருத்துக்கள் வெளிப்படுத்துதல் ஆற்றுகையின் ஒட்டுமொத்த விளைவில் தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன. அவை, எமது சமூகம் சாராத மூன்றாம் சக்திகளின் நிராகரிப்பாக அமைந்து கொள்கின்றன. எமது பாரம்பரிய பண்பாட்டியல் அம்சங்களின் அடித்தளத்தில் இருந்து கட்டியெழுப்பப்படாத நிகழ்ச்சித் திட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை. அவை வெற்றியளிக்கப் போவதுமில்லை.

பொதுவாகவே நாடகக் காட்சிகள் அரங்க நுட்பம் சார்ந்தவையாகவும், காட்சிப்படிமங்கள் நடிகர்களினூடாக உருப்பெற்றவையாகவும் அமைந்திருந்தன. ஆழ்மன நினைவுகள் – மாறுதல்கள் சமூகத்தின் வக்கிர நினைப்புக்கள், இடப்பெயர்வுகள், குடிசை வாழ்வுகள் எனக் காட்சிச் சட்டங்கள் தெளிவாகவும் நேர்த்தியாகவும் அசைந்திருக்கின்றன. காட்சிகள் வர்ணஜாலம் மிகுந்தவை. அதற்குப் பொருத்தமான ஒளியூட்டல்கள் கிடைத்திருக்க வேண்டும்.

ஆற்றுகையின் நேர அளவு ஒரு மணித்தியாலமும் இருபது நிமிடங்களும் கொண்டிருந்தது. காட்சிகளின் நகர்வு மந்த கதியிலே இருந்து இடையிடையே வேகங்கொண்டது. இங்கே ‘வேகம்’ என்பது அசைவின் வேகத்தைக் மட்டும் கருதவில்லை. கதை, உணர்வு, வெளிப்பாடுகள், காட்சிகள் என்பவை அடங்கலாகவே நாடகத்தின் வேகம், லயம் புரிந்து கொள்ளப்படுகின்றது. காட்சிக் கோர்வைகளின் இணைப்பு ஆங்காங்கே காரண காரியத் தொடர்புடன் இணைக்கப்படுவதும் அவசியமாகின்றது. அப்படியாயின் நாடகக் கட்டமைப்பு மேலும் வலுவடைய வாய்ப்புண்டு.

எப்படியாயினும் எம்மத்தியில் வாழும் கதை, மறக்க முடியாத கதை, மறக்கவும் கூடாத கதை நாடகத்தில் வார்த்தெடுக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதே. ‘அக்கினிப் பெருமூச்சு’ சமதளத்தில் இன்னொரு நாடக ஆற்றுகையாக இந்நாடகம் பயணிக்க வேண்டும். பேசப்பட வேண்டியவை பேசப்படும்போது அதற்கெனப் பெறுமதியுண்டு. நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் வானோர்கள் வந்திறங்கிக் கொடுக்கும் விடயங்களல்ல. அவ்வாறு கிடைப்பினும் அவை வந்த வேகத்திலேயே திரும்பியும் விடும்.

எனவே, ஒவ்வொருவரினதும் தனித்துவத்துடன் அவர்களின் அடிமன வேண்டுதல்களின் பிரதிபலனாகப் பெறப்படுபவை அல்லது உருப்பெறுபவை நிஜமானவை. அதுவே, இன்று எம் சமூகத்திற்குத் தேவை. மருட்கை வாழ்வுக்காக மண்டியிட்டுக் கொள்ளாதிருப்பதற்காக நிஜங்களில் நிதானித்துக் கொள்வது அவசியமானதாகும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: