Theva

நிர்வாணம்: நாடக விமர்சனம்

In விமர்சனம் on பிப்ரவரி23, 2008 at 9:19 முப

nirvanam-copy.jpgநிர்வாணம் நாடகம் ஜனகரளய என்ற பல் இன இளைஞர்கள் அடங்கிய நாடகக் குழுவினரால் 01.12.2004 அன்று செயல்திறன் அரங்க இயக்க அலுவலகத்தில் மேடையேற்றப்பட்டது.

சிங்கள நாடக உலகிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நன்கு அறியப்பட்டவர்களான பராக்கிரம நீரியல்ல, H.A.பெரேரா ஆகியோர் இந்நாடகத்தை தயாரித்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பலர் ‘கலைப் பாலங்கள்’ அமைத்திருக்கிறார்கள். ஒன்று கூடல்கள், கருத்தரங்குகள், பட்டறைகள், புத்தக வெளியீடுகள் என்பன நடத்திருக்கின்றன. ஒரு சில ஆங்கில நாடகங்கள் வடக்கில் மேடையேற்றப்பட்டுள்ளன. இடையிடையே திரைப்பட விழாக்களும்கூட நடந்திருக்கின்றன. இவை அனைத்தும் சமாதானத்திற்கு வலுச்சேர்க்கும் முயற்சிகள் என்று சொல்லப்படுகின்றன. இந்த வரிசையில் ஜனகரலய செயற்திட்டமும் இணைந்து கொள்கிறது.

இவ்வாறான முயற்சிகளால் விளையும் பயன் என்ன? அரசியல்வாதிகள் மீதும் இனவாதிகள் மீதும் கலைச்செயற்பாடு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற விடைகளைக் காணமுடியாத கேள்விகள் உண்டு. இப்பினும் ஜனகரளய அமைப்பு எல்லா இனம் சார்ந்தவர்களும் ஓர் இடத்தில் ஒன்றாக ஒரு வேலையை செய்ய முடியும் என்பதை சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறது. இது முக்கியமானதும் குறிப்பிடக்கூடியதுமான அடைவு.

ஜனகரளய அமைப்பில் தமிழ், சிங்கள, முஸ்லீம் இளைஞர்கள் உள்ளார்கள். இவர்களுக்கு நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட அரங்கப் பயிற்சிகளுக்குப் பின் ‘நிர்வாணம்’ நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல தரமான நாடகங்களைத் தயாரித்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் மேடையேற்றுவதனூடாக நாடக இரசனையை அதிகரிக்க எண்ணியுள்ளது இந்தக் குழு.

‘நிர்வாணம்’ தமிழ் மொழியில் ஆற்றுகை செய்யப்பட்ட நாற்பத்தைந்து நிமிட நாடகம். பரிநிர்வாண தேசம் – சிங்கள தேசம் நிர்வாண தேசமாகிறது – இதற்கு என்ன செய்யப் போகிறோம் என்பதான தொனிப்பொருளை நாடகம் கொண்டுள்ளது. மிக இலகுவான கர்ண பரம்பரையாகக் கடத்தப்பட்ட கதையை சமகால அரசியலை விமர்சிப்பதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தேசத்தின் அரசன் ஆடைகள் மீது காணப்பட்ட அதீத விருப்பு காரணமாக எப்போதும் விதம் விதமாக ஆடைகள் அணி விரும்புகிறான். வெளிநாட்டுத் தையல்காரர்களை அழைத்து தனது மனதிற்குப் பிடித்த ஆடையொன்றை தைத்துத் தருமாறு கேட்கிறான். வெளிநாட்டுத் தையல்காரர் அரசனைத் தமது புத்திசாலித்தனத்தினால் நிர்வாணமாக்குகிறார்கள். ‘அரண் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே’ என்பதற்கேற்ப அமைச்சர்கள் மக்கள் அனைவரும் நிர்வாணமாக்கப்படுகிறார்கள் என்பதாக கதை அமைகிறது.

வெளிநாடுகள் இலங்கை போன்ற நாடுகளில் எவ்வாறு தமது பொருட்களை, எண்ணங்களை, சித்தாந்தங்களை வியாபார மூளைகளைப் பாவித்து தந்திரமாக, இலவசமாகத் திணித்து விடுகிறார்கள். அதனால், ‘சுயம்’ தொலைந்து நிர்வாணிகளாக இருக்கப் போகிறோம் என்பதை நாடகம் உள்ளுறை பொருளாகச் சுட்டுகிறது.

சிங்களப் பாரம்பரிய நாடக வடிவங்களில் ஒன்றான ‘கோலம்’ வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடக ஓட்டம் முழுவதும் ஹாசியப் பண்பு மேலோங்கி நிற்கின்றது. வார்த்தைகளும் அங்க அசைவுகளுக்கும் இடையில் இணைவுத்தன்மை காணப்படவில்லை. வார்த்தைகளும் அங்க அசைவுகளும் இணைந்த இலாவகத்துடன் கூடிய பூரணத்துவத்தை உணரமுடியவில்லை.

நாடகம் அடிப்படையில் ஐதீகத் தளத்தைக் கொண்டிருந்தது எனலாம். ஐதீகப் பண்பை துலக்குவதாக ஆடை அணிகள் காணப்பட்டன. இருப்பினும், இதனைக் குழுப்புவதாக அரசனின் நிர்வாண ஆடை அணிவிப்பு வைபவத்திற்கு சமூகம் தரும் பத்திரிகையாளர்களின் யதார்த்த உடை, வார்த்தைகள் அமைந்திருந்தன. இதேபோல், இரண்டு எடுத்துரைஞர் பாத்திரங்களின் உள்நுழைவுகளும் வெளியேறுகைகளும்கூட பொருத்தம் இன்றிக் காணப்பட்டன. எடுத்துரைஞர் பாத்திரங்கள் மேலும் இறுக்கமாக நாடகத்துடன் பிணைக்கப்படலாம்.

மூன்று பக்க பார்வையாளர்களை நோக்கியதாக நடிகர்களின்  ‘தெறிப்புக்கள்’ காணப்படவேண்டும். நாடக இறுதியில் வெளிநாட்டு தையல்காரர்கள் பார்வையாளர்களுக்கு நிர்வாண ஆடைகளைக் கொடுக்கிறார்கள். அவ்வேளை, பார்வையாளர்கள் அவற்றை வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. அதாவது, நாடக இறுதியில் பார்வையாளர்கள் பங்குகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்குரியதாக நாடகம் வளர்த்தெடுக்கப்படவில்லை. பார்வையாளர்களை பங்குகொள்ள வைப்பதற்கு சீரான முறையில் கடுமையாக உழைத்தாக வேண்டும்.

நாடகம் பெண்மைப் பண்பு கொண்ட ஆண் பாத்திரம் ஒன்றின் ஹாசியத்தின் ஊடாக நகர்த்தப்படுகின்றது. இங்கு, கருத்து அல்லது சொல்ல வருகின்ற விடயத்தை விட ஹாசியப் பண்பு மேலோங்கி நிற்பதும் நெருடலாக இருந்தது.

இருப்பினும் ஒரு சிறிய நாடோடிக் கதையை ஒரு நாடகமாக உருவாக்க முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது. தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் இந்நாடகத்தை மேடையேற்றி புத்திசாலித்தனத்தின் ஊடாக அளிக்கப்படுகின்ற எமது சுயத்தில் இருந்து எம்மைப் பாதுகாக்க நாம் வழிகளைத் தேடவேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைத்து அதற்கான தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அப்பணியை மக்கள் களரி அமைப்பு செவ்வனே மேற்கொள்ளும் என்று நம்புவோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: