Theva

தீனக்குழந்தைகள் நாடகம்: ஒரு பார்வை

In ஆக்கம், விமர்சனம் on பிப்ரவரி23, 2008 at 9:24 முப

இ.விஜி

சமூகத்தில் இன்று அரங்கு பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. போர்க்காலத்தில் போரின் உடனடித் தேவைகளைப் பேசிய அரங்கு போர் சற்று ஓய்ந்திருக்கும் வேளையில் போரினால் பாதிக்கப்பட்ட மனிதமனங்களைப் ஆற்றுப்படுத்த முற்படுகின்றது. போரினால் நாம் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளை அரங்கு பேசி வருகின்றது. அந்த வகையில் தே.தேவானந்தின் ‘நெஞ்சுறுத்தும் கானல்’, ‘இடர்கள் கெடுக’, ‘முடக்கம்’ போன்ற மிதிவெடி விழிப்புணர்வு நாடகங்கள் கடந்த ஆண்டுகளில் பாடசாலைகளில் மேடையேற்றப்பட்டன. அந்நாடகங்கள் பெரும்பாலும் மதிவெடியினால் ஏற்படும் பாதிப்புக்களையும் அப்பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பாதிப்புக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிகளையும் கூறுகின்றன. இப்பொழுது ‘தீனக் குழந்தைகள்’ எனும் நாடகம் தே.தேவானந்தினால் எழுதி, நெறியாள்கை செய்யப்பட்டு பாடசாலைகளில் மேடையேற்றப்படுகின்றது.

‘தீனக் குழந்தைகள்’ எனும் நாடகம் மிதிவெடியினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் உள நெருக்கீடுகளையும் அந்த நெருக்கீடுகளில் இருந்து அவர்கள் எவ்வாறு விடுபட முடியும் என்பதனை ஒரு சிறுவனை மையமாகக் கொண்டு கூறுகின்றது. மதிவெடியினால் தனது காலை இழந்து நிற்கும் சிறுவனை பொய்க்கால் போடுமிடத்திற்கு அழைத்து வருகின்றார் அவனது தந்தை. பொய்க்கால் போடுமிடத்தைப் பார்த்ததும் சிறுவன் “ஐயோ…. தசை….. இரத்தம்…..” எனக் கதறி மயங்கி விழுகிறான்.

தந்தை செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளையில் தனது பொய்க்காலை மாற்ற வந்த சிறுமி ஒருத்தி அவரிடம் சென்று உரையாட முற்படுகிறாள். அந்த நேரத்தில் தந்தை நடந்த சம்பவத்தை சிறுமிக்கு கூறுகிறார். அவ்வேளை, தந்தையின் மனக்கண் முன் நடந்த காட்சி நிழலாடுகிறது. சிறுவர்கள் பலர் சேர்ந்து விளையாடுவதும், சிறுவன் தனது காலை இழந்து கதறும் சம்பவமும் காட்சிகளாகின்றன. இக்கதையைக் கேட்ட சிறுமி அச்சிறுவனது மன நிலையை மாற்றுவதற்காக தான் சந்தோ~மாக இருப்பது பற்றியும், தாங்கள் சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் பற்றியும் கூறுகின்றாள்.

“ஆனை ஆனை ஆனை
அசைந்தாடும் ஆனை
உன்னானை என்னானை
நாம் விளையாடும் ஆனை”

என்ற பாடலுடன் யானை ஒன்று கட்டப்பட்டு சுவாமி வீதி வலம் இடம்பெறுகின்றது. அவ்வேளையில் மதிவெடி பற்றிய அறிவித்தலும் இடம்பெறுகின்றது. வீதி உலாவில் பங்குகொள்ளும் அடியவர்கள் பிரசாதம் வேண்டும் நேரத்தில் அவசரமாக ஒற்றைக் காலுடன் எழுந்த சிறுவன் பிரசாதம் வேண்டுபவர்களை மிதிவெடி இருக்கும் பிரதேசத்திற்குள் சென்றுவிட வேண்டாம் என்று ஒலி பெருக்கியை வாங்கி அறிவித்தல் செய்வதும் இறுதியில் அவனும் அதில் இணைந்து கொண்டு ஆடிப்பாடுவதுமாக நாடகம் முடிவடைகின்றது.

பிள்ளைகள் பலர் சேர்ந்து விளையாட்டுப் பொருள் செய்வதும், வாகனங்கள் செய்து விளையாடுவதும், வீதிவலம் நடத்துவதும், தம்மைத் தாமே அலங்கரித்து அழகு பார்ப்பதும் சிறுவர் விளையாட்டுக்குரிய அம்சங்களே. இந்தத் தன்மைகள் உள்ளடக்கப்பட்டு நாடகம் படைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். நாதஸ்வரம், மேளம், காவடி, ஒலிபெருக்கி என அனைத்துக் கைப்பொருட்களும் சிறுவர்களுக்குரிய விளையாட்டுப் பொருட்களாகவே மேடைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கு சிறுவர்கள் சேர்ந்து ஆட்டோ கட்டி விளையாடிய நிலை, யானை ஊர்வலக் காட்சிகள் என்பன சந்தோ~மான சூழலுக்கு சிறுவர்களை இட்டுச் செல்கின்றன.

இந்நாடகத்தில் ஆடல், பாடல், அசைவுகள் என அனைத்துமே ஆசிரியரால் பொருத்தமான வகையில் கையாளப்பட்டிருக்கின்றன. ‘சங்குப்பித்தளை, சருகுப்பித்தளை…’ எனும் பாடலுக்குரிய அவர்களது அசைவுகளும் அபிநயங்களும் பெரிய நடிகர்களையும் சிறுவர்களாக்கியிருக்கின்றது.

ஊஞ்சாலே ஊஞ்சப்பனே
மாவு றொட்டி சுட்டுத்தாறேன்
வேணுமென்றால் தந்திடுவேன்
வேண்டாம் என்றால் எறிந்திடுவேன்

எனும் கிராமியப் பாடலை ஆசிரியர் இதில் பொருத்தமாக கையாண்டுள்ளார். இப்பாடல் நாடக முடிவின் போது பல சிறுவரையும் சேர்த்து பாடி ஆட வைத்தது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: