Theva

சுவிற்ஸர்லாந்தில் தமிழ் அரங்கு

In ஆக்கம் on நவம்பர்24, 2007 at 10:46 முப

anton-ponrajah.jpgஅன்ரன் பொன்ராஜ்  அவர்களுடனான உரையாடல்.

தே.தேவானந்த்

யாழ்ப்பாணத்தில் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாடக அரங்கக் கல்லூரியின் செயற்பாடு ஈழத் தமிழ் அரங்க வளர்ச்சியில் முக்கியமான திருப்புமுனையாக உணரப்படுகிறது. நாடக அரங்கக் கல்லூரி எழுபதுகளின் பிற்பகுதி எண்பதுகளின் முற்பகுதியில் நடத்திய தொடர் அரங்கக் களப்பயிற்சிகள் முக்கியமானவை.  அவற்றில் பங்கு கொண்ட பலர் தொடர்ந்து அரங்கத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். திரு அன்ரன் பொன்ராஜ் அவர்கள் நாடக அரங்கக் கல்லூரி நடத்திய பயிற்சியில் பங்குபற்றியவர். இன்று சுவிஸ்ஸில் தொழில்முறை நடிகராக 1987ம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவருபவர்.

சுவிற்ஸர்லாந்தில் தொழில்முறை நடிகராக செயற்படுவது என்பது இலகுவான காரியமல்ல. பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் ஐந்து வருடங்கள் படித்திருக்க வேண்டும். அதன் பின்பே தொழில்முறை நாடகக்காரராக முடியும்.

அன்ரன் பொன்ராஜ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தான் பெற்றுக்கொண்ட நாடகப் பயிற்சி தனக்கு தொழில்முறை நடிகராவதற்கு உதவியாதாக குறிப்பிடுகிறார். இதனைவிட, ஒரு தமிழன் தான் வாழும் இடத்தைவிட்டு ஏன் இங்கு வந்தான் என்பதை சுவிஸ்காரர்களுக்கு விளக்க வேண்டிய தேவையிருந்ததாலும் தான் மிகுந்த சிரமத்தின் மத்தியில் கடுமையான பயிற்சிகளை எடுத்து தொழில்முறை நடிகராக இணைந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார். 

தமிழர்கள் சுவிஸ்ஸிற்குச்  சென்றபோது வேண்டாத விருந்தாளியாகவே கருதப்பட்டார்கள். இதனால், பல்வேறு அழுத்தங்கள் காணப்பட்டன. கறுப்புத் தலைமயிருடன் பிறவுண் நிறத்தில் தமிழர்களைக் கண்டதும் சுவிஸ்காரர் விசித்திரமாகப் பார்த்தார்கள். இந்த நிலையை மாற்றித் தமிழர்களின் நிலைப்பாட்டை விளங்கவைக்க  தான் அரங்கில் நின்றதாகக்  குறிப்பிடும் அன்ரன் பொன்ராஜ் அவர்கள், தனக்குப் புலம்பெயர்ந்து அகதியாக வாழும் காலத்தில் அ.தாஸிஸியஸ் அரங்கத்துறையில் ஈடுபட ஊக்கம் தந்ததாகக் குறிப்பிடுகிறார்.

anton-ponrajah.jpgதமிழ் அரங்க முயற்சிகளை சுவிஸ்ஸில் ஆரம்பித்து வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் செயற்படும் இவர், இதற்காக நடிகனாக, தயாரிப்பாளனாக,  நாடக எழுத்தாளனாக, பயிற்சியாளனாக செயற்படுகிறார். சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியை அமைத்துப் பலருக்கு பயிற்சிகள் அளித்து பல நாடகங்களை தயாரித்து மேடையேற்றியுள்ளார். மூன்று வகையான பார்வையாளர்களுக்காக நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.

(i) சுவிஸ் பார்வையாளர்களை நோக்கிய தமிழ் நாடகங்கள்.
(ii) சுவிஸ் பார்வையாளர்களை நோக்கிய சுவிஸ் நாடகங்கள்.
(iii) தமிழ் பார்வையாளர்களை நோக்கிய தமிழ் நாடகங்கள்

சுவிஸ் பார்வையாளர்களை நோக்கிய சுவிஸ் நாடகங்களாக ஐயோ, புரூணஸ்சக் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ‘புரூணசக்’ என்பது ‘பிறவுண்சாக்கு’. இது தமிழர்களுக்கு எதிரான ஒரு சொல். இதனை அடிப்படையாகக் கொண்டு நாடகம் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள், கடலம்மா, அம்மையே அப்பா ஒப்பிலா மணியே போன்ற தமிழ் நாடகங்களையும் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் அதிகமான நாடகங்களையும் தமிழப் பார்வையாளர்களுக்காக மேடையேற்றியுள்ளார்கள்.

புதிதளித்தல் அரங்க முறைமையூடாகப் பலர் இணைந்து கூட்டாக நாடகங்களை எழுதி தயாரிக்கும் படிமுறைகளையும் இவர்கள் கொண்டுள்ளார்கள்.

நாடக ஆற்றுகைகளில் (உ-ம்: சிறிசலாமி) தமிழ், டொச், ஆங்கிலம் போன்ற பல மொழிகளை பாவிக்கின்ற முறைமையும் இவர்களிடம் காணப்படுகின்றது.

இதனைவிட தேவைகருதி ஒரு விடயம் பற்றிய கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்காக ஆய்வரங்க (Forum Theatre) அரங்க நடவடிக்கைளிலும் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறார்.  கண்ணுக்குப் புலனாகா அரங்கு பற்றி அன்ரன் பொன்ராஜ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்.

கண்ணுக்குப் புலனாகாக அரங்கு மிகுந்த ஆபத்தானது (Risk) எந்த நேரத்திலும் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாhராக இருக்க வேண்டும். பர்வையாளர்கள் நாடகம் நடக்கிறது என்ற உணராதவாறு செயற்பட வேண்டும். நாடகம் நடக்கிறது என்று பார்வையாளர்களுக்குத்  தெரிந்தால் நம்பிக்கை உடைந்து அபாயமான ஒன்றாகிவிடும். கண்ணுக்குப் புலனாகாக அரங்கில்தான் நிறையச் சவால்கள் இருக்கின்றன.  நடிகனுக்கு நிறைய ஆற்றல் வேண்டும்.

மேலும், மேற்கில் தொழில்சார் அரங்கில் காணப்படுவதான நடிகனின் ஆற்றல் ஈழத்து அரங்கில் இல்லை. குறிப்பாக, தொழில்சார் நிலைக்கு செல்வதற்குத் தேவையான பயிற்சிகள் ஈழத்து அரங்கில் இல்லை. அதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதில் கவனம் செலுத்தப்படுவதால் மட்டுமே தொழில்சார் நிலையை நோக்கி நகர முடியும். தொழில்சார் குழு ஒன்றை உருவாக்கி ஈழத்தில் செயற்படுவதைவிட வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதே சிறந்தது என்றும் குறிப்பிடுகின்றார்.

அன்ரன் பொன்ராஜ் அவர்களின் முயற்சியால் உலகத் தமிழர்களின் நாடக விடயங்களை ஒன்றிணைப்பதை நோக்காகக் கொண்டு ‘கட்டியம்’ என்ற உலகத் தமிழ் அரங்க ஆய்விதழ் வெளிவருகின்றது. தமிழ் அரங்கத் துறை சார்ந்தோருக்கு மிகப் பயனுள்ள பல விடயங்களை தாங்கிவரும் ‘கட்டியம்’ இதழுக்கு பேராசிரியர்  வீ.அரசு பிரதம ஆசிரியராகச் செயற்படுகிறார். அன்ரன் பொன்ராஜ் அவர்கள் நிர்வாக அசிரியராக இருந்து நிதி நிர்வாக விடயங்களைக் கையள்கிறார். ஈழத்தமிழ் அரங்கவியலாளர்களிடமிருந்து போதியளவு ஆக்கங்கள் கிடைக்கப்பெறுவதில்லை என்ற ஆதங்கம் இவருக்கு உண்டு.

சுவிஸில் தமிழர்களில் அரசியல் விடுதலைப் போராட்டச் செயற்பாடுகளிலும் நாடகச் செயற்பாடுகளிலும் முனைப்புடன் ஈடுபட்டுவரும் திரு அன்ரன் பொன்ராஜ் அவர்கள் ஈழத்தமிழ் அரங்க வரலாற்றில் கணிப்பிற்குரிய ஒருவர். இவரது பணி மேலும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு  தமிழ் அரங்கை (சர்வதேச தரத்திற்கு) வளர்க்கும் என்று நம்பலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: