Theva

சிரிக்க வைப்பதே ஒரே நோக்கம்

In ஆக்கம் on நவம்பர்24, 2007 at 10:07 முப

sireeppu_santhirakumar.jpgஅரியாலையூரில் நகைச்சுவை நாடகக் குழு

– இலக்கியா

யாழ்ப்பாணத்தில்  அரியாலைக் கிராமத்தில் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் உள்ளார்கள். ஆண்டு சித்திரைப் புத்தாண்டையொட்டி நடைபெற்று வருகின்ற சுதேசிய விழாவின் பேறுகளாக, அதில் முக்கிய ஈடுபாடு கொண்டவர்களாகவும், இந்நாடகத்துறை ஈடுபாடு கொண்டவர்கள் அறியப்பட்டுள்ளார்கள். 

அதேபோல் தொடர்ந்து தமது நாடகத்துறை சார் ஆர்வம் காரணமாக பலர் பல உள்ளுர் மன்றங்கள்/கழகங்களின் பெயர் கொண்டு தமது நாடகப் பணிகளில் முயன்று வருகிறார்கள். தற்போதும் தொடர்ந்து நகைச்சுவை நாடகங்களை மேடையேற்றி வருபவருள் திரு. சந்திரகுமார் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.

பொதுவாகவே அரியாலைக் கிராமத்தில் நடிப்பில் ஆர்வங் கொண்ட இளைஞர்கள் இவருடன் இணைந்து கொள்வார்கள். அதன் மூலம் ஒரு நகைச்சுவை நாடகம் அளிக்கை செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. இந்நடைமுறை பல வருடங்களாகவே காணப்பட்டுள்ளது.

sireeppu_santhirakumar.jpg

யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் கடமையாற்றும்  சந்திரகுமார் நாடகத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாகத் தனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார். குறிப்பாகத் தமது கிராமத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளில் நகைச்சுவை நாடகத்தையும் ஒரு அம்சமாக அமைத்துக் கொள்வதோடு, வலிகாமம் பகுதி, வடமராட்சிப் பகுதிகளில் ஆலய விழாக்களிலும் தமது நகைச்சுவை நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வருகின்றமையை சந்திரகுமார் அவர்கள் மகிழ்வுடன் குறிப்பிட்டுக் கூறுகிறார்.தமது நாடகத்தின் நோக்கமே பார்வையாளரை மகிழ்விப்பதுதான் என்கிறார் அவர். அதாவது சிரிக்க வைப்பது ஒன்றே நோக்கம். அதேவேளை பார்வையாளர்கள் சிரிப்பதனூடாக சில விடயங்களை/  கருத்துக்களை புரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கின்றார் சந்திரகுமார். இதன் காரணமாக, இந்நடிகர்கள் நீண்ட நாட்களை நாடக ஒத்திகைக்காகச் செலவழிக்கும் நிலை காணப்படுவதில்லை. பொதுவாகவே ஊரில் காணப்படுகின்ற சம்பவங்கள், பிரச்சினைகளை நகைச்சுவை கலந்து அளிக்கை செய்கின்றனர்.

இவர்களது நாடகங்களில் எழுத்துரு முக்கியம் பெறுவதில்லை. குறிப்பிட்ட சம்பவங்களை அதன் கோர்வையை அனைவரும் இருந்து கதைத்து வடிவமைத்த பின்பு மேடையில் ஏறுவார்கள். அதில் தமது வசனம் பேசும் திறனாலும், வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பை ஏற்படுத்தும் திறனாலும் நாடகத்தை நகர்த்திச்  செல்வார்கள். நாடகத்தில் நடிப்பவர்கள் மையப்பொருளை விட்டு விலகினும் அவர்களை மையப் பொருள் நோக்கி ‘இழுத்து’ வருவதில் முக்கிய பணியைச் சந்திரகுமார் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இது எவ்வாறு சாத்தியமாகிறதெனில் அனைத்து நாடகங்களிலும் அவரே முக்கிய பாத்திரமேற்று நடித்து வருவதாலாகும்.

நாளடைவில் ஒரு நகைச்சுவை நாடகம் பல மேடைகளில் அளிக்கை செய்யப்பட்டு வரும் பட்சத்தில் அதனை எழுத்துரு வடிவில் கொண்டு வந்து மெருகூட்டும் பணியைச் செய்யவும் சந்திரகுமார் தவறுவதில்லை.

இவரால் பல்வேறு நகைச்சுவை நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வந்திருப்பினும் ‘கனடாக் கலியாணம்’, ‘பரியாரியார் பரமசிவம்’, ‘அமுக்க வெடி ஆறுமுகம்’ போன்ற நாடகங்கள் அண்மைக் காலங்களில் பேசப்படுகின்றவையாக அமைந்துள்ளன. இவ்வகையான நாடகங்களில் பெரும்பாலும் வகை மாதிரிப் பாத்திரங்கள் பயன்பாட்டில் உள்ளமையும், அவை பார்வையாளருக்குப் பழக்கப்பட்டுப் போனவையாகக் காணப்படுவதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.

பெரும்பாலும் நாடகம் ஊர் மேடைகளில் அளிக்கை செய்வதை விரும்புகின்ற இளைஞர்கள் நகைச்சுவை செய்வதையும் விரும்புகிறார்கள். இதற்குக் காரணம் நாடக வசனங்களை கஸ்டப்பட்டு மனனம் செய்ய வேண்டியதில்லை என்பதும், நீண்டகாலங்களை ஒத்திகைகளிற்காகச் செலவழிக்க வேண்டிய நிலைமையில்லை என்பதுவுமாகும்.

இந்நாடகங்களில் வருகின்ற பெண் பாத்திரங்களையும் ஆண்களே நடிக்கிறார்கள். அவ்வாறான நடிகர்கள் பலரின் பாராட்டைப் பெறுவதும், அவர்கள் தொடர்ந்தும் அப்பாத்திரத்தில் ஈடுபாடு காட்டி வருதலும் வழமையானதாகும்.

sireeppu_santhirakumar_a.jpg

இந்நாடகங்களின் வேட உடைகள் பெரும்பாலும் அன்றாட மனித வாழ்வுக்குரியனவாகக் காணப்படுவதோடு தட்டுமுட்டுப் பொருட்களும் அன்றாடப் பாவனையில் உள்ள ஏனைய பொருட்களுமே அரங்கிற்கு கொண்டுவரப்படுகின்றன. பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த அல்லது அரச நாடகங்களின் மேடையேற்றத்தின் இடையே நகைச்சுவை நாடகமும் மேடையேற்றப்பட்டு வருவதால் தட்டிகள், காட்சித் திரைகள் யாவும் அவற்றின் பின்னனி கொண்டதாவே அமைந்து விடுகின்றன. ஆனால் இவை எவற்றையும் பார்வையாளர்கள் முரணாகக் கருத்தில் எடுப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நகைச்சுவை நிரம்பிய வசனங்களையேயாகும்.இந்நிலமையுள் சந்திரகுமார் அவர்கள் தாம் தொழில் முறை சார்ந்ததாக நகைச்சுவை நடிப்பை மேற்கொண்டு வந்திருப்பதாகவும், அதில் போதியளவு வரவு இல்லாவிட்டாலும் தமக்கான செலவுகளை ஈடுசெய்யவும் நடிகர்களிற்கான ஊக்குவிப்பாகவும் அது அமைந்து கொள்கின்றது எனவும் தெரிவிக்கின்றார்.

நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர் போன்றோர் தொடர்ந்தும் தமது முயற்சிகளை மேற்கொள்வதோடு நகைச்சுவை நாடத்தை சிறந்த படைப்பாக்கமாக மெருகூட்டவும், ஒரு முறைமைப்படுத்தப்பட்ட பயில் முறையூடாக நல்லதொரு நகைச்சுவை நாடகத்தை படைத்துக் கொள்ளவும் முன்வரவேண்டும். அதற்கான முயற்சியே இவர்களின் இத்தனை கால உழைப்பின் பேறாக அமைந்து கொள்ளுமெனக் கருதுகிறோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: