Theva

ஐரோப்பாவில் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து

In ஆக்கம் on நவம்பர்24, 2007 at 10:04 முப

vaddukuthu.jpgஅ.விஐயநாதன்

புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழுமிடங்களெங்கும் தமிழர் தம் பண்பாட்டை, பாரம்பரியங்களைப் பேணிவருதல் என்பது தாய் நாட்டின் மீது அவர்கள் கொண்டிருக்கும் வேணவாவைக் காட்டுகிறது. புலம் பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து வளர்ந்துவரும் ‘தமிழ்ப் பிள்ளைகள்’ தமிழ் மண்ணின் பண்பாடுகளை, பாரம்பரியங்களை அறிய வேண்டும் அல்லது கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் அவாவாகும். இதன் காரணமாகப் பலர் தமிழ்ப் பற்றுறுதியுடன் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருவது குறிப்பிடக்கூடிய விடயமாகும். கலை, இலக்கியம், பண்பாடு தொடர்பான பல முயற்சிகள் வெளிநாடுகளில் பல்வேறு வடிவங்களில் தமிழ் மக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெறுகின்றன.

இந்த வகையில், ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் தமது பிரதேசத்து நாட்டுக்கூத்தை தாம் வாழும் நாடுகளிலும் அளிக்கை செய்து வருகின்றமை இங்கே குறிப்பிடப்படவேண்டியது.

வட்டுக்கோட்டை நாட்டுக் கூத்துக்கு நீண்ட வரலாறும், தனித்துவமும் உண்டு. இதனாலேயே அரங்கத்துறை சாhந்தவர்களைத் தன்பால் ஈர்த்துள்ளது. ஆயினும், அது பார்க்கவும், படிக்கவும், ஆய்வு செய்யவுமே அனுமதிக்கப்படுவதாகவுள்ளது. ஏனையோர் ஆடுவதற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. இதுபற்றி வாதப் பிரதிவாதங்கள் பலவுள்ளன.

அந்த நிலமையிலேயே ஐரோப்பாவில் வாழும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குறித்த பரம்பரையினரே இக்கூத்தை ஆட ஒருங்கிணைக்கப்பட்டுள்ளார்கள். வட்டுக்கோட்டையைச் சேர்ந்ததில்லை நடேசன் என்பவருக்கு திரு. தாசிசியஸ் அவர்கள் கொடுத்த ஊக்கம் காரணமாக இந்நாட்டுக் கூத்துக்குழு உருவாக்கம் பெற்றுள்ளது.

தில்லை நடேசன் அவர்கள் கவிதை, சிறுகதைகள் மூலமாக இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தவர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளிவருகின்ற சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (தேடல், உயிர்நிழல், ஓசை, எக்சில் போன்றவை) இவற்றின் ஈடுபாடு காரணமாக வட்டுக்கோட்டை நாட்டுக் கூத்தின் வரலாறு/பாரம்பரியம்/தனித்துவம் என்பன தொடர்பான இவரது ஆய்வு முயற்சிகள் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. (இனியும் சூழ் கொள்- தொகுப்புநூல், ஈழத்து வடமோடி இதுவரை இருந்து வந்த கருத்துக்களின் மறுபரிசீலனை – ஆற்றுகை, கட்டியம்)

vaddukuthu.jpg

தொண்ணூறுகளின் ஆரம்பப் பகுதியில் சுகன் என்பவருடன் இணைந்து நாட்டுக்கூத்துக் குழு உருவாக்கத்திற்கான முயற்சியில் தில்லை நடேசன் ஈடுபட்டார். பிரான்ஸை மையமாக வைத்து நோர்வே, ஜேர்மனி, சுவிஸ் போன்ற நாடுகளிலுள்ள நமது ஊரவர்களை ஒன்றிணைத்து ‘சங்கமம்’ வீடியோ சஞ்சிகைக்காகத் தயாரிக்கப்பட்ட கூத்து மீண்டும் பல்வேறுபட்ட நிகழ்வுகளில், வட்டக்களரி முறையில், முகப்பரங்கத்தில் ஆடப்பட்டதாக தில்லை நடேசன் குறிப்பிட்டுள்ளார்.வட்டுக் கோட்டையைச் சேர்ந்த தவலோக தயாபரன், ஆலாலகண்டன், தனபாலசிங்கன், ஜெயக்குமார், குணசேகரன், தங்கேஸ்வரன், சத்தியன், ஜெ ஜீவகன், தில்லைக்கூத்தன் போன்றோரின் ஈடுபாட்டுன் வட்டுக்கோட்டைக் கூத்துக்குழு இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘அர்ச்சுணன் தபசு’, ‘சடாசுரன் வதை’ போன்ற பாரம்பரிய நாட்டுக் கூத்தும் இதே ஆட்டமுறைமைகளைக் கொண்ட போராட்ட வரலாறு கூறும் ‘உயிர்ப்பு’ எனும் ஆற்றுகையும் இவர்களால் ஆடப்பட்டு வருகின்றது. மேதின ஊர்வலங்கள், ஒளிவிழாக்கள், நிதிசேகரிப்பு நிகழ்வுகளில் இக்கூத்துகள் ஆடப்பட்டுள்ளன. இவர்களின் கூத்தாட்ட அனுபவம் காரணமாக ‘குதிரையாட்டம்’, ‘பொம்மையாட்டம்’, ‘காவடியாட்டம்’ போன்ற ஊர்வல ஆடல்களையும் இக் குழுவினர் ஆடிவருதல் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2002ம் ஆண்டில் TTN நிகழ்த்திய கங்கை அமரனின் கூத்துமேடை என்ற நிகழ்வில் நடைபெற்ற களப்பயிற்சியில் வட்டுக்கோட்டைக் கூத்துப் பற்றிய தங்களது பங்களிப்பை இவர்கள் செய்துள்ளார்கள். தமிழ் நாட்டு நாட்டுக் கூத்துக்கும் ஈழத்து நாட்டுக் கூத்துக்குமான ஒப்பீட்டாய்வாக  இக் களப்பயிற்சி நடைபெற்றது.

புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர்கள் சந்தித்து கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளின் மத்தியிலும், ஒத்திகைக்கான இடப்பிரச்சினை, ஒன்றிணைப்பதில் உள்ள இடர்கள்  என்பனவற்றிற்கு மத்தியிலும் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து ஐரோப்பாவில் ஆடப்படுவது போற்றப்பட வேண்டிய  விடயமாகும்.

பின்னூட்டமொன்றை இடுக