Theva

இந்திய அரங்கு பற்றி பேராசிரியர் வீ.அரசு அவர்கள்…….

In ஆக்கம் on நவம்பர்24, 2007 at 10:19 முப

arasu.jpgசென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் வீ.அரசு அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இவர் தமிழ் துறைப் பேராசிரியர் என்பதோடு நாடகத்துறை சார்ந்த ஈடுபாடு மிக்கவர். “கட்டியம்” நாடக இதழ் ஆசிரியராக இருந்து அதனை  வெளியிடுவதில் அரும் பணியாற்றி வருபவர். இவரது மனைவியாராகிய மங்கை அவர்களின் நாடக இயக்கம் சார்ந்த செயற்பாடுகளிற்கு உறுதுணையாக இருப்பதோடு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் நாடகச் செயற்பாடுகள் பற்றி நன்கறிந்திருப்பவர். தற்போது தமிழ் நாட்டிலும் மற்றும் மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்ற நாடக முயற்சிகள் பற்றி விமர்சனப் பார்வையுடன் நோக்குபவர். இவர் யாழ்ப்பாணம் வருகை தந்த போது பல விரிவுரைகளை, கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். அதில் நாடகத்துறை சார்ந்த விடயங்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்களை ‘கூத்தரங்கில்” தொகுத்துத் தருகின்றோம்.                                                                                                              (ஆ.ர்)

நாடக ஈடுபாடுகள்……………

நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1985ல் இணைந்து கொண்டேன். முற்போக்கு எழுத்தாளர்களுடன் ஈடுபாடு இருந்த போது கேரளாவில் கலைப்பயணம் சென்றோம். இக் கால கட்டங்களில் பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. ஒரு தேசிய இனத்துக்கும், மொழிக்கும், அவர்களிற்குள் உருவாகின்ற விடயங்களிற்கும், பண்பாட்டு நடவடிக்கைகளிற்கான உறவு, -இதனை எப்படிக் கண்டு பிடிப்பது, “தமிழ் அரங்கு” என்று சொல்லலாமா, அது எவ்வாறு இருக்கும் என்ற விடயங்களுக்கெல்லாம் தேடல்கள் இருந்தன. அந்தச் சமயத்தில் இளைய பத்மநாதன் அவர்கள் சென்னைக்கு வந்தார். நாங்கள் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுடன் தமிழ் நாடகம் பற்றிக் கலந்துரையாடியிருந்தோம். எல்.எ.பத்மநாதன் அவர்களும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களும் சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. நாடகம் செய்வதற்கு பேராசிரியர் சிவத்தம்பி முன்வந்தார்கள்.

அப்போ மாணவர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். அவர்கள் ஊர் வாத்தியங்கள் வாசிப்பார்கள். அந்த வாத்தியங்களுடன் பாடல்களும் இணைந்து ஒரு புதிய தயாரிப்புத் தொடர்பான வேலைகள் நடந்தன. ‘ஒரு பயணத்தின் கதை’, ‘இனிப்போர்’, ‘ஏகலைவன்’, ஆகிய மூன்று தயாரிப்புக்களும் நல்ல வெற்றிகரமான நாடகங்களாக அமைந்து கொண்டன.

இதேபோன்று மங்கையும் பிரசன்னாவும் செயற்படத் தொடங்கினார்கள். வசந்தன் கூத்தின் மோடி, தெருக்கூத்தின் மோட்டிகளை எல்லாம் இணைத்துக் குழுவாகத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டார்கள். நிறையப் பணம், சொந்தப் பணத்தில் செலவு செய்தோம்.  இருவரும் சம்பாதிப்பதால் அதன் தாக்கம் தெரியவில்லை. ஆனாலும் நாளடைவில் பணத்தேவை அதிகமாகியது.  அந்த சமயத்தில் மீனா சுவாமிநாதன் அம்மையார் அரங்க வேலைகளைத் திட்டங்களாக ஏற்றுக்கொண்டார். ‘மௌனக் குரல்கள்’ என்ற திட்டச் செயற்பாடு ஊடாக வேலை செய்த போது இன்குலாப்பின் ‘ஓளவை’ நாடகம் உருவாக்கம் பெற்றது. இதில் மங்கையின் பங்கு முக்கியமானது. இதில் நடிகர்களின் உடல்மொழி, பாடல்கள் எல்லாம் நன்றாக அமைந்து கொண்டன. எல்லா ஊரிலும் நன்றாக மேடையேற்றினோம். கடைசியில் ஒரு விபத்துக் காரணமாக எல்லாம் தடைப்பட்டுவிட்டது.

நாங்கள் ஆரம்பத்தில் நடிகர்களிற்கு கொடுப்பனவு எதுவும் கொடுக்கவில்லை. ஒரு சில ஆற்றுகைகள் முடிந்த பிறகு அதில் கிடைக்கும் பணம் மூலமாக சிறு தொகை வழங்குவோம். உண்மையில் வரமுடியாதவர்கள் போக்குவரத்துச் செலவுக்கும் பணம் இல்லாதவர்களிற்கு எமது பணத்தில் இருந்து கொடுத்தோம். அதுதான் உண்மையில் நடந்தது. ஒரு தயாரிப்புக்கு ஐம்பதாயிம் ரூபா வரை செலவாகும். பிரதானமாக வேட உடைகள், இசையமைப்புத் தேவைகளிற்காக அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இசைக் கருவிகளிற்கான வாடகை மிக அதிகம். நடிகர்களிடமிருந்தும் இசை சார்ந்த திறன்களைப் பெற முடியும். அதாவது தப்பு, உறுமி போன்றவற்றை நடிகர்களே வாசிப்பார்கள்.

arasu_stand.jpgதொழில் ரீதியாக இசைத்துறை சார்ந்தோரை நாடகத்துக்கு அழைக்கும் போது அவர்கள் அரங்கக் குழுவுடன் இணைய மாட்டார்கள். பணம் கிடைத்ததும் சென்று விடுவார்கள். ஆனால் சிலர் நல்ல வரவேற்புக் கிடைக்கின்றது என்பதால் ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்ந்து எங்களுடன் செயற்படுவார்கள்.

ஆதனால் பெரும்பாலும் ‘கூத்துப்பட்டறையில்’ நடிகர்களே எல்லா இசைகளையும்/ வாத்தியங்களையும் கையாள்வார்கள்.

நாடகத்துறையில் என்.ஜீ.ஓ. செயற்பாடுகள்

என்.ஜீ.ஓ.கள் வெளிப்படையாக அரசியல் இல்லாதவை. அரசு தவிர தனிப்பட்ட ரீதியில் என்.ஜீ.ஓ.கள் நிறைய நிதி வழங்குவார்கள். அதனூடாக காத்திரமான பிரச்சினைகளை நாடகமாகச் செய்யக் கூடியதாகவுள்ளது. மங்கை தற்போது எம்.எஸ்.சுவாமிநாதனுடைய நிறுவனத்துடன் (Stage Foundation) இணைந்து வேலை செய்கின்றார். அதில்  எம்.எஸ்.சுவாமிநாதனுடைய மனைவி சர்வதேச அரங்குகள் பற்றியெல்லாம் நன்கறிந்தவர். அவரும் நல்லதொரு அரங்கை நோக்கி நகர்கின்றார். அவருடன் சேர்ந்து மங்கையும் அந்தத் துறைகளில் வேலை செய்யக் கூடியதாகவுள்ளது. நாடகத்தை எப்படிச் செய்வதற்கு வேண்டியதான நூறு வீத சுதந்திரமும் உண்டு. நல்ல நாடகத்துக்கு (Theatre) உண்மையில் செலவழிக்காமல் செய்ய முடியாது. அரங்கில் உடம்பை வைத்துக்கொண்டு மட்டும் எல்லாம் செய்யலாம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. அரசியல் கருத்துக்களிற்காக சில விடயங்களை செய்து காட்டி விட்டுப் போவது வேறு. அவை பரீட்சார்த்த முயற்சிகளும் கூட.

நாடகக்காரருக்கு ஏற்படும் சிக்கல்கள் போல ஒரு எழுத்தாளர், சிறுகதை மற்றும் நாவல் எழுதுகிறவர்களுக்கு ஏற்படுவதில்லை. அந்த நிலைமையில்தான் கூத்துப்பட்டறை முத்துசாமி அவர்களிற்கு ஏற்பட்டிருக்கும் சோகத்தைப் பார்க்கலாம். அவர் மிகவும் உடைந்து போயுள்ளார். அவருடைய செயற்பாடுகள் அல்லது வழிமுறைகளில் தவறு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கக் கூடியது என நான் கருதுவது – மக்களுடைய பண்பாட்டு அடித்தளம், பண்பாட்டு மொழி ஆகியவற்றை தன்னுடைய அரங்க முறையாக மாற்றுகின்ற தன்மை அவரிடமில்லை. அது அவருக்குத் தெரியும். மக்கள் மேல் அவருக்கு நம்பிக்கையெல்லாம் கிடையாது. அந்தக் கொள்கை தான் அவருக்கு.

அவர் பிரமாண்டமான சிறுகதைகள் நிறைய எழுதியிருக்கிறார். அதனூடு கிடைக்கின்ற மனநிலையை அவர் நாடக அளிக்கைகளாக விரிவுபடுத்துகிறார். ஆனால் அவருடைய பார்வையாளர்கள் யார் என்ற கேள்வியும் எழுகின்றது. சென்னை போன்ற ஊர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எந்தவொரு உறவும்  கிடையாது. அது ஒரு பயங்கரமான, எல்லா விசயத்தையும் பார்த்துவிட்டுப் போய் செய்கிற ஒரு இடம். நாங்கள் பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்துவிட்டு பத்திரிகைகளிற்காக நாடகம் போட்டுக் காட்டுவதுதான் அங்கு நடக்கும். தமிழ் மக்களுடைய பண்பாட்டில் இருந்து அரங்கு எவ்வாறு வந்தது என்பதற்கான வரலாறு இன்றும் வரவில்லை. இந்த விசயங்களில் வீ.கே.சண்முகமும், பம்மலும் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவர்கள்.

‘கூத்துக்கட்டுதல்’ – தொழில்முறை அரங்கு

கூத்துக் கலைஞர் கண்ணப்பர் மானஸ்தன். வருடத்துக்கு கிட்டத்தட்ட 70 நாள்கள் கூத்துப் போட்டிருக்கிறார். அவர் மிக வயதானவர். அவர்களுடைய கூத்துக் கட்டுவதற்கு பெரிய முறைகளெல்லாம் உண்டு.

ஒரு வருடத்தில் குறிப்பிட்ட நாள்களில் ஒவ்வொரு கூத்தும் கட்டுவார்கள். இதற்கு முகவர் போன்று ஒருவர் இருப்பார். அவர் நடிகர்களை ஒப்பந்த அடிப்படையில் ஒன்றிணைப்பார். நடிகர்களிற்கு ஐம்பதினாயிரம், ஒரு லட்சம் என ஒப்பந்தத் தொகை வழங்கப்படும். அந்தக்குழு வருடாவருடம் அளிக்கை செய்து கொண்டேயிருக்கும். கூத்துக் கட்டிறவருடைய முதலீட்டிற்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் பணம் கையில் இருக்கும். ஒவ்வொரு அளிக்கையும் முடிந்தவுடன் நடிகர்களின் கூலிகள் வழங்கப்படும்.

இம்முறமையினால் கூத்துக் கட்டும் முகவருக்கு ஐந்து லட்சம் ரூபா வரையில் பணம் கிடைக்கும். இக் கூத்துக்களை மக்கள் காசு கொடுத்துப் பார்க்காவிட்டாலும், ஊர்த்திருவிழாக்காரர்கள், மற்றும் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்துவோர் மூலமாக பத்தாயிரம், பதினையாயிரம் ரூபா எனப் பணம் கிடைக்கும். மக்கள் ஊரின் பொதுப்பணத்தில் இருந்து இதற்காகப் பணம் செலவழிப்பார்கள். இந்நடைமுறை மிகவும் வெற்றிகரமாக நடைபெறுகின்றது.

கூத்துப் பயில பாடசாலை

தெருக்கூத்து தற்போது ஆய்வுகளுக்குரிய விடயமாக உள்ளது. நெதர்லாந்து பெண்மணி ஒருவர் கர்நாடக கூத்துக் குழுவில் ராஜகோபால் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அவர் ஒரு பெரிய கூத்துக்காரன். இவர்கள் காஞ்சிபுரத்தில் ஒரு பங்களாவில் பெரிய கூத்துப் பாடசாலை ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள். சிறுவர்களிற்கு பாடம் கற்பிப்பதும், கூத்துப் பழக்குவதும் இங்கு நாளாந்தம் நடைபெறுகின்றன. 20 மாணவர்கள் தற்போது அங்கு பயின்று வருகிறார்கள். சர்வதேச மட்டத்தில் பணம் பெற்று இரண்டு வருடமாக அந்தப் பாடசாலையை நடத்துகிறார்கள். அந்தப் பிள்ளைகளுடன் அளிக்கை செய்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து வருடங்களின் பின் அந்தப் பிள்ளைகள் படித்தவர்களாகவும் கூத்து நடிக்கிறவர்களாகவும் இருப்பார்கள். எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இசை நாடகத்துக்குச் சங்கம் அமைப்பார்கள்

இசை நாடகத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு ஸ்பெசல் நாடகம்தான். அதற்கு முகவர்கள் இருக்கின்றார்கள். மதுரை, தென் மாவட்டங்களில்தான் அதிகம் உண்டு. உதாரணத்துக்கு ஒரு தேநீர்க் கடையில் கூத்துப்பழக்கத் தெரிஞ்சவர், நாடக முகவரிடம் தனது பெயரைப் பதிவு செய்து கொள்வார். அவ்வாறு பதிவு செய்த நடிகர்கள் முகவர் தலைமையில் ஒரு சங்கம் அமைத்துக் கொள்வார்கள்.

இவர்களை அறிந்தவர்கள் அந்தச் சங்கத்திடம் நாடகம் போடக் கோருவார்கள். ஒவ்வொரு நடிகர்களிற்கும் ஒவ்வொரு விதமான கூலி. அவரவர் திறனுக்கு ஏற்ப பேரம் பேசப்படும். அரிச்சந்திரன் வேடமிடுபவருக்கு ஆயிரம் ரூபா, கட்டியக்காரனுக்கு ஐந்நூறு ரூபா எனப் பணத் தொகை வழங்கப்படும்.

நாடகத்தை அழைக்கும் ஊரவர்கள் தமது விழாவில் குறிப்பிட்ட நபர்தான் குறிப்பிட்ட பாத்திரம் ஏற்க வேண்டும் எனக் கோரிப்  பணம் செலுத்துவார்கள். நாடகம் மேடையேற்ற வேண்டியுள்ளது என்றால், யாழ்ப்பாணத்தைப் போன்றுதான் அங்கும் அந்த நேரம் நடிகர்கள் அழைக்கப்படுவார்கள், சேர்ந்து நாடகம் அளிக்கை செய்வார்கள். இதனால் இவர்கள் நடிப்பதில் மிகவும் தேர்ச்சியுள்ளவர்கள் ஆகின்றார்கள்.

நல்ல தேர்ச்சியுள்ள நடிகர்கள் பங்கு  கொள்ளும் இசை நாடகங்களில் நடிகர்கள் தமது திறமையை வெளிக்காட்டும் நோக்கினால் போட்டியேற்பட்டு விடும். பாடல்கள் தர்க்கம் நிறைந்ததாகவே நீண்டு கொண்டு செல்லும். இதனால் நடிகர் சங்கத்தில் சட்டம் வைத்திருக்கிறார்கள். குறித்த காட்சி, குறிப்பிட்ட பாடல்கள் என்பவற்றிற்கு நேர அளவுகள் நியமிக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் இசை நாடகங்களில் பண்பாடு சம்பந்தப்பட்ட நம்பிக்கைகளும் உள்ளன. உதாரணமாக வள்ளி திருமணத்தில் விடிவதற்கு முன்பு கல்யாணம் நடைபெறாவிட்டால் சகுணம் பிழைத்து விட்டதாக மக்கள் கருதுவார்கள்.

உண்மையில் நவீன அரங்க ஈடுபாட்டாளர்கள் எங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப எவ்வாறு விடயங்களைக் கையாள்வது என்பதில் மிகக் கவனம் எடுப்பதில்லை. எந்த இடத்தில் அந்த விடயங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் வரவேண்டும்.

பெரியாரின் வரலாறு நாடகமாக…

மு.இராமசாமி அவர்கள் நிறைய அரங்க வேலைகள் செய்து வருகிறார். ஆய்வு முயற்சிகள் எல்லாம் செய்திருக்கிறார். தற்போது கடைசியாக பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கியுள்ளார். இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. எல்லா இடங்களிலும் அளிக்கை செய்யப்பட்டு வருவதோடு நல்ல வருமானமும் கிடைக்கின்றது. அரசியலில் உள்ளவர்கள் பெரியார் நாடகத்தை போடுவதை தமது இலட்சியமாகக் கொண்டுள்ளதையும் காணக் கூடியதாகவுள்ளது.

பெரியாருடைய வாழ்வின் சம்பவங்களை வைத்து ஒரு யதார்த்தத் தன்மை கொண்டதாக அந்த நாடகம் அமைந்துள்ளது. பெரியாராக மு.இராமசாமி அவர்களே நடித்துள்ளார். அவர் மிகவும் திறமையானவர், நல்ல நடிகர். விக்ரம் நடித்த பிதாமகன் படத்தில் அந்த சுடுகாட்டுக் காவலாளியாக இவர் நடித்துள்ளார்.

இந்த நிலமைகளிற்குள் பலர் பத்திரிகையில், தொடர்புச் சாதனங்களில் செய்தி வெளிவர வேண்டும் என்பதற்காகவும் நாடகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: