Theva

கிராம மட்டத்திலான நாடகப் போட்டி

In சொற்சித்திரம் on ஒக்ரோபர்20, 2007 at 9:51 முப

கியூடெக் நிறுவனத்தால் நடத்தப்பட்டது

யாழ் கியூடெக் நிறுவனத்தினரால் கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி கிராம மட்டங்களுக்கு இடையிலான நாடகப் பொட்டி யாழ் மறைக்கல்வி நடுவுநிலைய மண்டபத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் கலந்துகொள்வதற்கு 15 கிராமங்கள் பதிவு செய்துகொண்டன. ஆயினும் 12 கிராமங்களைச் சேர்ந்த நாடகங்களே போட்டியில் கலந்துகொண்டன. இந்நாடகங்களில் இன்றைய சிறுவர்கள் எதிர்கொள்ளும் உடல், உளத் தாக்கங்களே கருப்பொருளாக அமைய வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்தது. போட்டி விதியும் அதுவே. பங்குபற்றுனர்களுக்கு வயதெல்லை குறிப்பிடப்படவில்லை. நாடகத்தில் ஈடுபாடுள்ள எவரும் பங்குபற்றலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடகம் வாழ்வை வளம்படுத்திக் கொள்வதற்குச் சிறந்த ஊடகம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் 12 ஆற்றுகைகளும் மக்கள் தம் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு உருவெடுத்தன. அவை, அவர்களது சூழல், அறிவு நிலை என்பவற்றோடு இயல்பாக இயற்கையோடு ஒட்டிப் படைக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில நாடகங்களில் அரங்கியல் நுட்பங்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன.

உணவு – படிப்பு – பாதுகாப்பு – பாலியல் துன்புறுத்தல் – அரவணைப்பின்மை – ஒதுக்குதல் என்பன பேசு பொருள்களாக்கப்பட்டிருந்தன. இந்நாடகங்கள் வளர்ந்தோர்களை இலக்குப் பார்வையாளர்களாகக் கொண்டு பேசப்பட்டிருந்தன. பல நாடகங்கள் வார்த்தைகளை நம்பி இருந்தாலும், சில நாடகங்களில் உணர்வுபூர்வமான நடிப்புத் திறமையையும் காணமுடிந்தது. இந்நாடகங்களில் சில நடிகர்கள் இயல்பாக நடித்திருந்தார்கள்.

கேள்விக்குறிகள், கல்லறைப் பூக்கள், வெண்மை, வீட்டுக்கு நன்றி, மீட்சியே கிடைக்காதா?, கரை காணா ஓடங்கள், இவர்கள் பேசுவார்கள், விழித்தெழுவோம், மௌனத்தின் அலறல், மலராத மொட்டுக்கள், அமைதி தேடும் அரும்புகள், கருகிய மொட்டக்கள் ஆகிய நாடகங்கள் மேடையேறின. இவற்றில் கரை காணா ஓடங்கள் முதலாம் இடத்தையும் மீட்சியே கிடைக்காதா இரண்டாவது இடத்தையும் மௌனத்தின் அலறல் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

நாடகச் செயற்பாடுகளைக் கிராம மட்டங்களில் ஊக்குவிப்பதற்காக நாடகத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறந்த நெறியாளர், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்தோடு முதல் மூன்று இடத்தைப் பெற்ற நாடகங்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டமொன்றை இடுக