Theva

சிறுவர் அரங்கு ஊடாக சமுதாய மேம்பாடு: மாதிரிச் செயற்திட்டம்.

In கட்டுரை on ஒக்ரோபர்20, 2007 at 9:53 முப

– இலக்கியா

நாடகம் வெறுமனே கண்டுகளிப்பதற்குரிய ஒன்று என்பதற்கு அப்பால், நாடகத்துறை சார்ந்த செயற்பாடுகள் விரிவடையத் தொடங்கியுள்ளன. மேற்குல நாடகத்துறை சார்ந்த அனுபவங்களும், ஈழத்தில் நாடகமும் அரங்கியலும் கற்கை நெறிக்குரியதாக்கப்பட்ட பின்பும் அரங்குசார் செயற்பாடுகளின் மூலம் – மனிதம், சமூகம், தேசம் பற்றிய மாற்றம், மேம்பாடுகள் கருதிய வேலைத் திட்டங்கள் நடைபெறுவது இயல்பான ஒன்றாகிவிட்டது.

children_kiramam.jpg

மனித விழுமியங்களுள் கலந்து கிடக்கின்ற அரங்கு சார்ந்த தன்மைகளுடாக இச்செயற்றிட்டங்கள் பெரும்பாலும் நடைபெறுகின்றன.  இவை வெறுமனே கலைநயத்துடன், இரசிப்புக்குரிய ஒன்றாக மட்டும் நின்று விடுவதில்லை. அவை மாற்றங்கள், அல்லது முன்னேற்றங்களை வேண்டி நிற்பதாகவே அமைகின்றன. குறிப்பாக, கலாநிதி. க.சிதம்பரநாதன் அவர்களின் ‘சமூக மாற்றத்திற்கான அரங்கு’ என்ற ஆய்வின் அத்திபாரத்திலிருந்து இவ்வரங்கச் செயலியக்கங்கள் யாழ்ப்பாணத்தில் முனைப்புப் பெறத் தொடங்கின என்று கூறலாம். இவை மானிட விடுதலைக்கான அரங்கு, பெண் விடுதலைக் கான அரங்கு, சமூக விடுதலைக்கான அரங்கு, எனப் பல வடிவங்களான போக்குக்களைக் கொண்டெழுந்துள்ளன.

இதேபோன்று சிறுவர்களிற்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் மாற்றத்திற்காகவும் சிறுவர் அரங்கு என்ற மூலத்திலிருந்து பெறப்பட்ட அரங்க மூலகங்களின் துணை கொண்டு அரங்க செயற்பாடு வடிவமைக்கப்படுகிறது. இது, சிறுவர் சமூகத்திற்கான அரங்கச் செயற்பாடாக அமைந்து கொள்கிறது. சிறுவர்களிற்கான செயல்முறைகளைக் கொண்டிருப்பினும் அவை கூட ஒரு சமுதாய மேம்பாடு நோக்கிய படிமுறையாகவே அமைந்து கொள்கின்றன.

இச்சிறுவர் அரங்கு ஊடான சமுதாய மேம்பாட்டிற்குரிய வேலைத்திட்டத்தை 2002ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் அரங்க செயற்பாட்டுக் குழுவினர் நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருந்தனர். இது ஓர் ‘மாதிரிச் செயற்றிட்டமாக’ அமைந்திருந்தது. ஆய்விற்குரியதாகவும், அதன் மூலம் கற்றுக் கொண்டதாகவும் அது அமைந்திருந்தது. திருநெல்வேலியில் அமைந்துள்ள முத்துத்தம்பி சிறுவர் இல்லத்தில் திரு தே.தேவானந்த் அவர்களின் ‘துணிவு’ எனும் நாடகம் பழக்கும் படிமுறைச் செயற்பாட்டினூடாக இச்சிந்தனை ஆரம்பிக்கத் தொடங்கியிருந்தது. ‘துணிவு’ – நான்சிபரன்ஸ் எழுதிய ‘குட்டி யானை துணிவு பெறுகிறது’ எனும் சிறுவர் உளவியல் கதையைத் தழுவிய சிறுவர் நாடகம். இச்சிறுவர் நாடகப் படிமுறைகளின் போது பிள்ளைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் யாழ்ப்பாண அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் வேலைத் திட்டத்திற்கு உந்து சக்தியாக அமைந்துகொண்டது.

அதனடிப்படையில் வட்டு-மேற்கு முதலிகோவில் என்ற கிராமம் சிறுவர் அரங்கு ஊடான ‘மாதிரி’ வேலைத் திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டது. இவ்வேலைத் திட்டத்திற்கு சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் அனுசரனை வழங்கியிருந்தது.

முதலி கோவில்    கிராமம் – வயலோரத்தில் அமைந்திருக்கின்றது. வயலுக்கு வெள்ளம் பாயும் வாய்காலே கிராமத்தின் பிராதான ஒழுங்கை. கல் வீடுகள் ஒருசில மட்டும்தான். பனங்காணிகளினுள் அமைந்த சிறிய சிறிய குடிசைகள், குச்சொழுங்கைகள், பனங்காணிகள், வயல்வெளிகள், சிறுவர்களின் பொழுது போக்கிடங்கள். பாடசாலை நேரம், நித்திரை நேரம் தவிர இவர்களின் வாழ்விடம் இவைதான். பாடசாலை நேரம்கூட பலரிற்கு விளையாட்டு இடங்களிலேயே கழிந்திருந்தன.

புறாப்பிடித்தல், மாபிள் அடித்தல், தாச்சி விளையாடுதல், பேணி அடித்தல், மாடு மேய்த்தல், புல் பிடுங்கச் செல்லுதல், அரிவி வெட்டச் செல்லுதல், தண்ணீர் அள்ளச் செல்லுதல், இளைய சகோதரர்களைப் பராமரித்தல் எனப் பிள்ளைகளின் வாழ்வு புரண்டோடிக் கொண்டிருந்தது. அப்போதைய யுத்த, இராணுவ நிலமை – அதற்குள் அகப்பட்டுப்போய் அநாதரவாகக் கிடந்த ஒரு கிராமம் அதனுள் வாழும் பெரியோர்களின் நடத்தைகள், இவையெல்லாம் பிள்ளைகளின் வாழ்வு முறையில் தாக்கத்தைச் செலுத்தியிருந்தன.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் அழைப்பின் பேரில் அவர்களுடன் யாழப்பாண அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரும் கிராமத்தை அடையாளம் காண்பதற்கு  சென்றார்கள். பிரதான ஒழுங்கை எங்கும் மக்கள் வேடிக்கை பார்த்தவாறு நிற்கிறார்கள். ஓர் ஒழுங்கை முகரியில் கைக்கலப்பு. இதனைத் தீர்க்க இராணுவத்தினர் பகிரதப்பிரயத்தனம். ஒரு இராணுவ வீரர்  இளம் குடும்பப் பெண் ஒருவரின் தலைமுடியில் பிடித்து இழுத்தவாறு நீண்ட கம்பினால் அடிக்கிறார். ஆங்காங்கே தகாத வார்த்தைகள், கைகளில் பாளைக் கத்திகள் – இந்நிலமையினுள் வாகனத்தில் சென்று இறங்கிய நிறுவனம் சார்ந்த இவர்களைக் கவனிக்க யாருமில்லை. நீண்ட நேரத்தின்பின் நிலைமை சீராகி வந்தது. பிள்ளைகள் – இடுப்பில் ஓர் பிள்ளையைக் காவியவாறு – இப்போ நிறுவன வாகனங்களை, ஆட்களை வேடிக்கை பார்க்கத் தலைப்பட்டார்கள்.

அதிர்ச்சியான பிரவேசம்தான். ஆயினும் அரங்கச் செயலாளிகள் தமது பணியை ஆரம்பிக்கத் தொடங்கினார்கள். பிள்ளைகளுடன் கதைத்து மகிழ்வை ஏற்படுத்தினார்கள். ஒன்று கூடுவதற்கு ஏற்ற இடம் ஒன்று பிள்ளைகள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது அக்கிராமக் குலதெய்வமான முதலிகோவிலடி முன்றல் – வயல்வெளியில் பெரிய ஆலமரநிழல். ஆலயச் சுற்றாடல் அருகே பிரதான ஒழுங்கை குளம். இவ்விடத்தில் வாராந்தம் ஞாயிற்றுக் கிழமைகளில் பிள்ளைகளும் அரங்கக் குழுவினரும் சந்திக்கத் திட்டமிடப்பட்டது. அது நடைமுறையில் வந்தது. ஞாயிறு தோறும் அரங்கக் குழுவினரின் வாகனம் கிராமத்தள் நுழைந்ததும் பிள்ளைகள் வாகனத்தில் தொட்டவாறே மேலங்கி ஏதுமின்றி, வீட்டில் நின்ற கோலத்தில் ஓடி வருவார்கள், கூச்சலிடுவார்கள், ஒரே களோபரமாக இருக்கும்.

ஆனால், நாளடைவில் அரங்கக் குழுவினரின் வாகனத்தைக் கண்டதும் பிள்ளைகள் வீடு நோக்கி ஓடுவார்கள். கழுவி, பவுடர் அப்பி, உடையணிந்து மெல்ல மெல்ல தமது சகாக்களையும் அழைத்தவாறு கோயில் முன்றலிற்கு வருவார்கள். முதலில் வந்துவிட்டவர்கள் ஏனையோரை அழைப்பதற்காக தாள வாத்தியங்களை முழங்குவார்கள். அது ஞாயிறு தோறும் கிராமத்தில் ஒலிக்கும் ஒலியானது. பிள்ளைகள் ஒன்றுகூடுவார்கள். இவர்களிற்கான அரங்கச் செயல் முறைகளாகப் பாடுதல், ஆடுதல், பாவனை பண்ணுதல், விளையாடுதல் எனப் பிள்ளைகளின் ஈடுபாட்டிற்கு ஏற்ப செயல்முறைகள் அமைந்து கொண்டன.

ஏற்கனவே உள்ள சிறுவர் அரங்கப் பாடல்கள் பாடப்பட்டன. தங்களைப் பற்றி, கிராமத்தைப் பற்றி, புனைகதை பற்றியெல்லாம் பாடல்களை பிள்ளைகள் இயற்றினார்கள். பாடியாடினார்கள். ஆடல்களின்போது பிள்ளைகள் மிக வேகங்கொண்டு ஆடுதல் ஆச்சரியமான ஒன்றாகவே இருந்தது. சினிமா ஆடல் முதல் கலையாட்ட/சாமியாட்டம் வரை அவர்கள் ஆடினார்கள். அரங்கு சார்ந்த ஆடல் முறைமைகள் சிலவற்றைத் தெரிந்து கொள்ள அவர்களுக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

தமது அன்றாட கிராமிய விளையாட்டுக்களை அரங்கியற் பண்புடன், ஓசைநயத்துடன் லயத்துடன் விளையாட வாய்ப்பு ஏற்பட்டது. புதிதாக அரங்க விளையாட்டுக்களையும் விளையாடத் தொடங்கினார்கள்.

இவை நடைபெற்றுவர அரங்கக் குழுவினருக்கும் பிள்ளைகள், பெற்றோர்களிற்கும் இடையேயான உறவு நெருக்கமடைந்து வந்தது. கிராமத்தைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வார்கள். தமது வீடுகளிற்கு அழைத்துச் செல்வார்கள். ஊரில் நடக்கும் பிரச்சினைகள் பற்றிக் கூறுவார்கள்.

பிள்ளைகளிற்கான நடிப்பாற்றலை ஏற்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் சிறுசிறு பாகமாடுதல் அளிக்கைகள் செய்யப்பட்டன. இதன்போது, பிள்ளைகள் தமது பிரச்சனைகளைத் தெரியப்படுத்தவும், அதற்கான தீர்வுபற்றி ஆராயவும் வாய்ப்புக்கள் இருந்தன.

ஆரம்பத்தில் பாகமாடுதல் செய்யும்போது மதுபோதை அடிபிடி சண்டை சச்சரவு என முரண்பாடுகளையே செய்து காட்டுவார்கள். இதற்கான தீர்வுகளைப் பற்றிக் கலந்துரையாடும் போதும் அவை தண்டனை மிகுந்தவையாகவே இருந்தன. பிள்ளைகள் தமக்கு வழங்கப்படுகின்ற ‘தீர்ப்புக்கள்’ பற்றிய தீர்வுகளையே சொன்னார்கள். ப+வரசம் மரத்தில் கட்டிவைத்து அடிப்போம், முழங்காலால் நடக்க விடுவோம், முள்ளினால் குற்றுவோம், பாளைக் கத்தியால் வெட்டுவோம் போன்ற பதில்கள் அவர்களின் அனுபவ வாயிலாக வெளிவந்தன.

இந்நிலையில் சில சிறுவர் நாடகங்களை அப்பிள்ளைகள் பெற்றோர் முன்னிலையில் மேடையேற்ற வாய்ப்புக் கிடைத்தது. ‘கூடிவிளையாடு பாப்பா’, ‘முயலார் முயல்கிறார்’ போன்ற சிறுவர் நாடகத் தீர்வுகள் பற்றியெல்லாம் பின்னர் கலந்துரையாடப்பட்டது.

இதன் காரணமாக நாளடைவில் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் இடையிலான உறவுநிலை பலமடைந்து வந்ததோடு சண்டைகள், முரன் நிலைகள் ஏற்படும்போது ஏனையோருடன் பகிர்ந்து அதற்கான தீர்வுக்காணும் வழிகளை ஆராயவும் அவர்கள் தலைப்பட்டனர். வீடுகளில் பெற்றோர்கள், மூத்த சகோதரர்கள் ஆகியோரின் தண்டிக்கும் முறைகளிலும் தளர்வுகள் ஏற்பட்டதனைப் பிள்ளைகள் எடுத்துக் கூறினார்கள். நாளடைவில் இவ்வேலைத் திட்டம் பிள்ளைகளின் குடும்பம் சார்ந்ததாகவும் விரிவாக்கம் பெற்றது.

பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளில் சிலவற்றைப் பூர்த்திசெய்ய சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் ஒத்துழைப்பு நல்கியிருந்தது. பிள்ளைகளிற்கான பாடசாலை உபகரணப் பொதிகள், உடைகள் என்பன வழங்கப்பட்டன. மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.

இக்காலப் பகுதியில் செயலூக்கமும் ஆர்வமும் உள்ளவர்கள் தங்கு நிலைக் களப்பயிற்சிகள் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் அழைக்கப்பட்டார்கள். புதியதொரு சூழலில் அரங்கக் களப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. அத்தோடு, பராயமடைந்துவரும் பெண் பிள்ளைகளிற்கான, உடல் உள சுகாதாரக் கருத்தரங்குகள் போன்றனவும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் கோயில் முன்றலில் ஞாயிறு தோறும் நடைபெறும செயற்பாடுகளில் வளர்ந்தோரும் பார்வையிடும், பங்கு கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. ஒரு வருடமாக இது நடைமுறையிலிருந்தது. ஒழுங்கைகள், வேலிகள் எங்கும் சிறுவர் அரங்கப் பாடல்கள் ஒலித்தன.

கிராமத்தில் நடைபெற்ற சனசமூக நிலையம் சாhந்த நிகழ்வுகளில் சிறுவர் குழு, இளம் பெண்பிள்ளைகள் முக்கிய பங்கெடுத்தார்கள். பல்வேறு நிறுவனங்களை இணைத்தும், அரச திணைக்களங்களுடாகவும் கிராமத்திற்கான உதவிகளைப் பெற ஒர் செயற்குழு தலைப்பட்டது. சனசமூக நிலைய நிர்வாக அமைப்புக்கள் நீண்டநாள் தலைமைகள் மாற்றம் பெற்று புதியவர்கள் இவ்வேலைகளில் ஈடுபாடு கொண்டார்கள். தொடர்ந்து மத, தொண்டர் அமைப்புக்கள் தமது பணிகளை முடக்கிவிடத் தொடங்கின. அரங்க செயலாளிகள் தம் பணியை மட்டுப்படுத்தினர்.

சமூகப் பொருளாதார மாற்றம் என்பது ஓர் நீண்டகாலப் படிமுறையினூடாக ஏற்பட வேண்டியது. அதற்கான படிக்கல்லாக சிறுவர் அரங்கு ஊடான இச்சமுதாய வேலைத்திட்டம் அமைந்து கொண்டது.

  1. very well your ardical

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: