Theva

இசை நாடகம் : அது வந்தவாறும் இருக்கின்றவாறும்

In கட்டுரை on ஒக்ரோபர்20, 2007 at 9:54 முப

– குழந்தை ம. சண்முகலிங்கம்

esai-nadakam_b.jpgஇலங்கைத் தமிழர், தம் பாரம்பரிய நாடக வகைகளுள் ஒன்றாக ‘இசை நாடகம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பல ஆண்டுகளும் ஆகிவிட்டன. – கவனிக்கவும் – பல ஆண்டுகளேயல்லாமல், பல நூற்றாண்டுகளோ, ஒரு சில நூற்றாண்டுகளோவல்ல. இதனால், பண்டுதொட்டு அல்லது நீண்ட நெடுங்காலமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்ததாக இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பை, வரைவிலக்கண விதியை ‘இசை நாடகம்’ நிறைவு செய்யவில்லை.

இசை நாடகம் 19ஆம் நூற்றாண்டில்தான் தமிழகத்தில் அறிமுகமாகி முகிழ்ப்பைப் பெற்றது. எமது, தேசத்திலும் அது, தமிழகமூடாக அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, ‘நீண்ட நெடுங்காலம்’ என்ற விதியை நாம் விட்டுவிட வேண்டியவர்களாக உள்ளோம். அதற்காக, ‘இசை நாடகம்’ எமது பாரம்பரிய அரங்குகளுள் ஒன்றல்ல என நாம் கூறிவிடத் துணியமாட்டோம். காரணம், இங்கு அவ்வரங்கு அறிமுகமான காலம் முதல் ‘தொடர்ச்சியான பேணுகையைக் கொண்டதாகவும், மக்களால் பற்றுறுதியோடு மதித்துப் போற்றப்படுவதாகவும்’ (உண்மையில் இது பெரும்பாலான மக்களால் பற்றுறுதியோடு மதிக்கப்படுகிறாதா? என்று சிலர் கேட்கக்கூடும். அவை ஆடப்படுகின்ற மக்கள் மத்தியில் இன்றும் அவை பார்க்கப்படுகின்றன – அந்த மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கக்கூடும் – எனினும் அவர்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.) உள்ளது. மேலும், பிறமக்கள் ‘இசை நாடகத்தை’ எமது பாரம்பரிய அரங்காகக் கருத முன்வந்துள்ளனர். இந்தக் காரணங்களால் நாம் இசை நாடகத்தை எமது பாரம்பரிய அரங்காகக் கொள்வதில் தவறில்லை என்போம்.

esai-nadakam_c.jpg

எமது பாரம்பரிய அரங்கு பற்றிய சிந்தனை, பேராசிரியர் சு.வித்தியானந்தன் அதன் மீது அக்கறை காட்டிய பின்னர் வலுவடைந்து வந்துள்ளது எனலாம். பலரும் இவை பற்றிச் சிந்திக்கிறார்கள். இவ்வாறு சிந்திப்பவர்கள் எல்லோரையும் ஒரே வகைக்குள் அடக்க முடியாதுள்ளது. அவர்கள் பல வகைப்பட்டவர்களாவே உள்ளனர்.

1. உண்மையிலேயே வழிவழியாக ஆடி வந்தவர்களில் நடுத்தர       வயதிற்கும் பிற்பட்ட சிலர்.
2. நாடக அரங்க வரலாற்றை ஓரளவேனும் கற்றறிய வாய்ப்புக் கிடைத்ததாலும், நாடகத்தில் ஈடுபாட்டோடு இருந்து வருவதாலும் எமது மரபு பற்றிய விழிப்புப்பெற்ற சில இளவயதினர். 
3. வித்தியானந்தன் வழி நின்று நாட்டார் கலைகளைப் பேணும் நோக்குடைய சிலர்.
4. எமது பாரம்பரியத்துள் அடங்கி வராத நாடகங்கள் எனச் சிலவற்றை வகைப்படுத்திக் கொண்டு அவற்றை ‘நவீன நாடகங்கள்’ எனக் கூறிக்கொண்டு, அவற்றின்பால் வில்லங்கப்பட்டு ஒருவித வெறுப்பையும் வளர்த்துக்கொண்டு, பாரம்பரிய அரங்கு, மற்றும் கலைகளை நாடிநிற்பவர்.
5. பட்டமொன்று (கௌரவப்பட்டத்தை நீங்கள் நினைத்து விடுவீர்கள் என்பதால், அதுவல்ல இது என்பதையும், படித்துப் பெறும் பட்டமே இங்கு குறிப்பிடப்படுகிறது என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்)  பெறுவதற்காக ஆரம்ப நிலை ஆய்வுகளை மேற்கொள்ளும் சில மாணவர்கள் – இவர்களில் பலருக்கு நாடகத்தின் பால் நாட்டமே இல்லை என்பது உலகறிந்த உண்மை.
6. ‘முதுகலை மாணி’ ‘கலாநிதி’ போன்ற பட்டங்களுக்காக ஆய்வினை மேற்கொள்ளும் சிலர்.
7. நாடகத்தின்பாலும் தமிழ் அரங்கின்பாலும் விருப்பார்வமுள்ள சிலர்.

இந்த வகைப்பாடு இத்தோடு முடிவு பெறாது. இன்னும் எத்தனையோ வகைகள் இருக்கும். பல்வேறுபட்ட கருத்துக்கள் இருப்பது நல்லது. முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களை எதிரிகளாகக் கருதுவது ஆரோக்கியமான அறிவு வளர்ச்சிக்கு உகந்ததல்ல. எதிரி வேறு, எதிர்க் கருத்தாளன் வேறு என்பதை உணர்ந்து கொள்வோமானால், மிகக் காத்திரமான, காரசாரமான விவாதங்களையும் நாம் முன்னெடுக்க முடியும். விவாதத்தில் ஈடுபடுபவர்கள் நாடகத்தை உண்மையாகவே நேசிப்பவர்களாக இருப்பார்களானால், நபர்களை முதன்மைப்படுத்தி நோக்காது, நேரெதிரே முன்வைக்கப்படும் கருத்துக்களை முன்நிறுத்தி நோக்குவதென்பது சாத்தியமாகும்.

இலங்கையில், பாரம்பரிய அரங்குகளின் பால் ஏற்பட்ட நாட்டம் என்பது ‘இலங்கைத் தேசியம்’ ‘தமிழ்த் தேசியம்’ என்ற சிந்தனைகளோடு தொடர்புபட்டதாகவே எழுந்தது. அரசியலைப் பொறுத்தவரையில் ‘இலங்கைத் தேசியம்’ என்பது பெரும்பாலான சிங்களத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளின் நினைப்பில் ‘சிங்களத் தேசியம்’ என்பதாகவே அமைந்திருந்தது. இதன் காரணமாக இலங்கையில் ‘தமிழ்த் தேசியம்’ என்ற சிந்தனை பல தமிழர் தம் நினைப்பில் வேர்விட ஆரம்பித்தது. இவையாவும் வரலாறு வகுத்தமைத்துச் செல்லும் வாய்க்கால் வழி வந்து சேர்ந்தவை. இவற்றின் சரி, பிழைபற்றி ஆராய்வது இங்கு எமது நோக்கமல்ல.

வித்தியானத்தன் நாட்டுக் கூத்துக்களின் மீது நாட்டங்கொண்டு, அவற்றையும், அவற்றை ஆடுபவர்களையும் முதன்மைப்படுத்த முற்பட்டபோது, ‘இசை நாடகத்தையும்’ தனது பரிவுப் பார்வைக்குள் கொணர்ந்தார். ‘சமூக நாடகங்களும்’ (பேசி நடிக்கப்படுபவை) ‘அரச நாடகங்களும்’ ‘நாட்டிய நாடகங்களும்’ மத்திய தரவர்க்கத்தினர்  மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த காரணத்தால், கிராமத்து அரங்குகளான கூத்துக்களும் இசை நாடகமும் காலகதியில் வழக்கிறந்து போய்விடும் என அவர் எண்ணினார் போலும். மேலும், எமது வேர்களை நாம் தேடவேண்டிய நிலையும் அன்று இருந்ததாலும், கலை வழியே இலங்கைத் தமிழர் தம் வேர்களைக் கண்டுகொள்ள முற்பட்ட வித்தியானந்தன், நாட்டார் கலைகளையும் நாட்டுக் கூத்தரங்கையும் எமது கலை வேர்களாக, எமது கலை முதுசமாக ஏற்றுக் கொண்டார். இவ்வாறு, நாட்டார் கலைகளையும் கூத்துக்களையும் பேணுவதன் மூலம் இலங்கைத் தமிழர்களது தேசியத்தை உறுதிப்படுத்த முடியும் எனக்கருதிய வித்தியானந்தன், இசை நாடகத்தையும் அதனுட் சேர்த்துக்கொண்டார். வேறு சில கூத்து மரபுகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிட்டார் என்று குறைப்பட்டுக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். நிற்க, வித்தியானத்தனது நாடகப் பணி பற்றியதொரு நடுநிலையான ஆய்வு இன்னமும் நாடகக் கல்விப்புலத்தால் மேற்கொள்ளப்படாதிருப்பதும் துரதிஷ்டமான ஒன்றாகும்.

esai-nadakam.jpg

வித்தியானத்தன் ஏன் இசை நாடகத்தை எமது பாரம்பரியக் கலையாக ஏற்றுக் கொண்டார்? தமிழ்நாடு ஏற்றுக் கொண்டிருப்பதால்தான், வித்தியானந்தனும், நாமெல்லோரும் ஏற்றுக் கொண்டோமா? இசை நாடகத்தை எமது பாரம்பரிய நாடகமாகக் கொள்ளலாமா? இல்லையா? என்ற பிரச்சினையை இப்போது தோற்றுவிப்பதே ஒரு அபத்தமான விஷயம் எனக் கொள்ள முடியாதா? இப்போ, இதை ஒரு பெரிய பிரச்சினை போலக் காட்டமுற்படுவதில் ஏதேனும் உள்நோக்கம் உண்டா? நாமறியாக் காலம் முதல் எமது பாரம்பரிய நாடகம் என எமது முன்னோரும் இன்று நாமும் கருதி வரும் ஒன்றை இப்போ  ஏன் நாம் விவாதத்துக்கு உட்படுத்தவேண்டும். காரண காரிய விளக்கங்களோடா நாம் எல்லாவற்றையும் பற்றிய முடிவுகளை எடுக்கிறோம். வாழ்வில் பலவற்றை முன்னோர் சொல்லக் கேட்டு அந்தவாறே அவற்றை நாம் ஏற்றுக் கொள்வதுண்டு. இந்தவாறுதான் இசை நாடகமும் எமது பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்றானது.

அவ்வாறாயின், எமது மனங்களில் அதாவது இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் உளவியலில் இசை நாடகம் என்பது தமது பாரம்பரியத்தின் ஒரு கூறு என்ற நினைப்புத் தன்னெழுச்சியாகவே வந்த ஒன்றா? சிலர் ஏற்க மறுத்தாலும் ‘சமூக உளவியல்’, ‘சமூக அறிவுணர்வு’ என்பன இருக்கத்தான் செய்கின்றன. தன்னெழுச்சியாக நடைபெறுபவை யாவும், எக்காரணமும் இல்லாது நடப்பவையல்ல. தன்னெழுச்சியான செயற்பாட்டுக்கு உந்துதலாகப் பல காரணிகள் அமையும் பழக்கம், பரிச்சியம், பண்பாட்டுத் தொடர்ச்சி, அறிவு, அனுபவம், சிந்தனைப் போக்கு, கொள்கைகள், வளர்ப்பு முறை, வளர்ந்த சூழல் என இன்னும் பலவற்றையும் கூறமுடியும். எனவே, தன்னெழுச்சியாக நடப்பவற்றுக்கு உந்து காரணிகளாக, உடனடிக்காரணிகள் மட்டுமல்லாது சேய்மைக் காரணிகள் பலவும் இருக்கும்.

இந்தவாறுதான், இலங்கைத் தமிழர் தம் பாரம்பரிய அரங்காக இசை நாடகம் வருவதற்கும் பலப்பல காரணிகள் துணை நின்றிருக்கின்றன. அதனால்தான், 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிமுகமான இக்கலை வடிவம் தமிழ் நாட்டிலும் இலங்கைத்தமிழர் மத்திpயிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிலேயே முக்கியமான தொரு இடத்தைப் பிடித்துக் கொண்டது போலும். இரு நாடுகளிலும் இவ்வரங்கம் எல்லா மக்களின் மனங்களிலும் இடம் பிடித்துக் கொண்டதா என்பது வேறு விஷயம். எவ்வாறாயினும், இவ்வரங்கு யாருடைய மனங்களைக் கவர்ந்ததோ, அது அவ்வாறு கவர்ந்தமைக்கான காரணங்களை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். இவைதான் காரணங்கள் என்று நாம் அறுதியிட்டுக் கூற முன்வரவில்லை. அவற்றை ஊகங்களாகவே முன்வைக்க விரும்புவோம்.

தமிழ்நாட்டின் நாடகமல்ல ‘இசை நாடகம்’ இருப்பினும் அது மிகவிரைவில் தமிழ்நாட்டின் நாடகமாகிவிடுகிறது. தமிழ்நாடு, இசை நாடகத்தைப் பண்பாட்டு மயமாக்கலுக்கு உட்படுத்திவிடுகிறது. கர்நாடக இசையே தமிழர் தம் இசையல்ல என்றதொருவாதம் ஒருபுறம் இன்றுவரை இருக்க, கர்நாடக இசையின் சேர்க்கை எவ்வாறு ‘பார்சி’ அரங்கைத் தமிழரங்காக்கி ‘இசை நாடகம்’ எனப் பெயரையும் அதற்குக் கொடுத்தது என்பது என்றென்றும் விடை காண முடியாத முரணணியாகவே இருக்கும். வாழ்வே முரணணிகளின் குவியலல்லவா? இந்துஸ்தானி இசை மெட்டுக்களும், இலகுபடுத்தி/ஐனரஞ்சகப் படுத்தப்பட்டுப் பாடப்பட்ட கர்நாடக இசை இராகங்களும் தமிழ் மயமாக்கப்பட்டன.

கூத்துக்களினூடாகவும், கதைப்பாடல்களினூடாகவும் மக்கள் அறிந்து வந்த புராண, இதிகாசக் கதைகளையே தமிழ்நாட்டின் இசை நாடகங்களும் பாடி ஆடின. கதையோடு கலந்து வந்த கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசைப் பாடல்கள் மக்களின் நயப்பைப் பெற்றன. கர்நாடக இசை மக்கள் மத்தியில் பரவுவதற்கு இசை நாடகங்கள்தான், இசைக் கச்சேரிகளை விட மிகப் பெரும் பங்காற்றின என்பதை எவரும் மறுக்கார்.

எனவே, தெருக் கூத்தாகப் பார்த்து வந்த மக்கள் இப்போ இசை நாடகமாகவும் பார்க்கத் தலைப்பட்டனர். அது இயல்பாகவே தமிழ் அரங்காகிவிட்டது. அதன் ஒரு பக்கப் பார்வையாளர், ஆடம்பரமான காட்சியமைப்பு என்பன, தமிழ் நாட்டுக்குப் புதியதாக இருப்பினும், அது மக்களின் கண்களையும் மனதையும் உறுத்தவில்லை. அதில் இருந்து கர்நாடக இசையும், பரிச்சயமான கதைகளும் மக்களின் கண்ணையும் கருத்தையும் மறைத்து விட்டன. இதனால், இசை நாடகம் தமிழ்நாட்டின் பாரம்பரிய நாடகமாக இடம் பிடித்துக் கொண்டுவிட்டது.

தமிழ் நாட்டிற்குள் என்ன நடக்கிறதோ அதுதானே இலங்கைத் தமிழ் நாட்டுக்கும் என்ற நிலைதானே பலகாலமாக இருந்து வந்தது. தமிழ்நாட்டில் உரத்துத் தும்மினால் இங்கு தூவானமடிக்கும். தெருக்கூத்து எப்படி இங்கு நாட்டுக்கூத்தான தென்பது இன்னமும் ஆய்வு செய்யப்படாத பரப்பாகவே உள்ளது. இசை நாடகம் இங்கு வந்தவாறு எல்லோரும் அறிந்த ஒன்று. தமிழ் நாட்டவரைப் போலவே நாமும் இசை நாடகத்தை எமது பாரம்பரிய நாடகமாக உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டோம்.

இசை நாடகத்தை திறம்பட ஆடவல்லார் ஒரு சிலரே இருக்கின்றனர். ஏனையோர், ஏனோ தானோ என்று ஆடிவிட்டுச் செல்கின்றனர். இசை நாடகம கர்நாடக இசையோடு தொடர்புடையது. இங்கு இசை என்பது பாடப்பட வேண்டியதாக உள்ளது. ஹார்மோனியமும் மத்தளமும் பாடலுக்குத் துணை நிற்கும். இசை என்றால் சுருதியும் தாளமும்தான் அடிப்படை. இவையிரண்டும் சரிவராதவர்கள் பாட முன்வரக்கூடாது. இசை நாடகம் மிடற்றிசையைத் தனது வெளிப்பாட்டு சாதனமாகக் கொண்டுள்ளது. எனவே, இசை நாடகத்தில் பாத்திரமேற்று நடிக்க வருகின்ற யாவரும் முதலில் சுருதி சுத்தமாகவும் தாளம் பிசகாதும் பாடப் பயின்று கொள்ளவேண்டும். அன்று இந்தியாவின் பல சிறந்த இசை மேதைகள், இசை நாடகங்களைக் காணச் (கேட்டு இசை நயம் பருக) சென்று வந்தனர். மிகச் சிறந்த இசை வாணர்கள் இசை நாடகங்களில் நடித்து வந்தனர். சுத்த கர்நாடக இசை மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றது. மக்கள் நயக்கின்ற இசையாக அது இருந்து வந்தது.

ஆகவே, இசை நாடகத்தை எங்களது செழுமைமிக்கதொரு பாரம்பரியச் சொத்தாக எப்படிப் பேணுவது என்பதுதான் இன்றுள்ள பிரச்சினை. குழந்தை பாடினால் தாய் இரசிப்பாள். அது எப்படிப் பாடினாலும் அவள் இரசிப்பாள். காரணம், அது அவள் குழந்தை. யார் பாடினாலும் கேட்போம், யார் ஆடினாலும் பார்ப்போம், அவர்கள் எப்படிப் பாடினாலும், ஆடினாலும் நாம் நயப்போம் என்று கூறிக் கொள்வதற்கு மக்கள் தாயரும் அல்ல, பாடி ஆடுபவர்கள் குழந்தைகளுமல்லர்.

கூத்துக்குள், இசை நாடகங்களில் மிகவும் தரமான நிலையை அடைந்துவிட்ட சில கலைஞர்கள் கூட, ஆடவும் பாடவும் வராது நின்று தவிக்கும் சிலரோடு மேடையில் நின்று தவிப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இளங்கலைஞர்களை இவ்வாறு ஊக்குவிக்கிறார்கள் என்றால் உங்களைப் போற்றலாம். செத்தாலும் சுருதியும் தாளமும் வராது என்ற நிலையில் உள்ள முதியவர்களோடு ஏன் இப்படி மேடையில் நின்று உங்கள் அரிதாரத்தை வியர்வையில் கரைக்கிறீர்கள்? நீங்கள் நல்லவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நல்லவர்களாகிய உங்களுக்கும் ஒரு சமூகப் பொறுப்பு இருக்கிறதல்லவா? நீங்கள் மட்டும் சிறப்பாகப் பாடி ஆடிவிட்டால் இசை நாடகம் நின்று நிலைத்து விடாது. உங்களோடு சேர்ந்து நடிப்பவர்களும் சிறப்புறப் பாடி ஆடவேண்டுமல்லவா?

எனவே, இன்று இசை நாடகத்தில் கைதேர்ந்த நடிகர்களாக உள்ளவர்கள் (சுருதி சுத்தமாகவும் தாளப்பிடிப்போடும் பாடி நடிக்கத் தெரிந்தவர்கள்) தம்மைப் போன்ற நல்ல நடிகர்களை உருவாக்க முன்வரவேண்டும். உங்கள் மூலம் மீண்டும் கர்நாடக இசைப்பாடல்கள் மக்கள் மத்தியில் பரவவேண்டும். கர்நாடக இசைக் கலைஞர்கள் உங்களது நாடகங்களை விரும்பி வந்து பார்க்கும் நிலை இங்கு மீண்டும் வரவேண்டும்.

அத்தோடு, உங்களைப் போல ஏனைய இளைஞர்களையும், இசை நாடகத்துக்கென அமைந்து வந்துள்ள நடிப்பு முறைமையினைச் செவ்வனே செய்யப் பயிற்றுங்கள். இசை நாடக நடிப்புப் பாணி ஒன்று இலங்கைத் தமிழர் தம் இசை நாடக ஆற்றுகைப் பாரம்பரியத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அந்த நடிப்பு மோடி தொடர்ந்து கையளிக்கப்பட வேண்டும். புதிதாக வருபவர் ஒவ்வொருவரும் தாம் தாம் விரும்பிய பாணியில் நடித்துவிட்டுப் போக முடியாது. கூத்து நடிப்பு வேறு, இசை நாடக நடிப்பு வேறு. எனவே, நாம் இசை நாடகத்தின் மரபுவழி நடிப்பிலும் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

இசை வல்லுனர்களும் நடன வல்லுனர்களும், ஏனைய நாடக வகைகளில் வல்லுனர்களும், கூத்தர்களும், இசை நாடக வல்லுனர்களும், இலக்கியவாதிகளும், கவிஞரும், ஓவியம் வல்லாளரும் ஏனைய கலைவல்லாரும் தனித்தினயே தத்தம் துறைகளில் ஈடுபடுவதோடு இடையிடையே இணைந்து நின்று ஒருவர் மற்றவரது துறையைச் செழுமைப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும். இது வெறும் கனவல்ல, சாத்தியமான யதார்த்தம். எமது இசை நாடகம் மட்டுமல்ல, கூத்தும் ஏனைய நாடக வகைகளும் வளர்வதற்கும், வாழ்வதற்கும் இத்தகைய இணைந்த செயற்பாடு மிகவும் அவசியமாகும்.

இது சாத்திமாவதாக இருந்தால், நாம் முதலில் மனிதர்களாக மாற வேண்டும். கலையை மதிக்க வேண்டும், எமது பாரம்பரியங்களை மதிக்கவேண்டும். எமது மக்களை மதிக்க வேண்டும். அரசியல்வாதிகளின் போலித்தனங்களை நாமும் புனைந்து கொள்ளாது, சத்தியம் நிறைந்தவர்களாக இருக்கவேண்டும், சுயநலம் மறக்க வேண்டும், விமர்சனத்துக்குப் பழக்கப்படவேண்டும், பொய்மையை விட்டு மெய்மையைத் தரிசிக்க வேண்டும், இப்படி நாம் ஆனபிறகுதான் எமது கலைப் பாரம்பரியம் செழித்து வளரும்.

esai-nadakam_a.jpg

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: