Theva

பள்ளி எழுந்துவரும் பஞ்சவர்ண நரியார்

In ஆக்கம் on ஒக்ரோபர்17, 2007 at 5:30 பிப

pachnchavarna-nariyar.jpgஅரங்கக் குறிப்பு

குழந்தை ம.சண்முகலிங்கம்

“வளரும் பயிருக்கு முளையில் உதவும்” செயல்திறன் அரங்க இயக்கத் திட்டத்தின் தயாரிப்பான இச்சிறுவர் நாடகம் எமது பாடசாலைகளில் மேடையேற்றப்படுகிறது.

தமிழ்த்தினம், ஆங்கிலத்தினம் போல எமது பாடசாலைகளில் ‘சிறுவர் அரங்கமும்’ ஒரு தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. இது ஒரு முக்கியமான விடயம். ஏனெனில், இங்குதான் எமது ‘சிறுவர் அரங்கம்’ தொடர்பான சிந்தனைகளுக்கு ஒரு சிறிது இடம் கிடைக்கின்றது. இந்நிலையில், ‘பஞ்சவர்ண நரியார்’ எமது பாடசாலைகளுக்கு வருகை தருவது மேலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு ஊக்கமாக அமையும். ஏனெனில், தமிழ்தினம், ஆங்கில தினம் போல் ‘சிறுவர் அரங்கம்’ ஓர் வளமுடையதாக எமது பாடசாலைகளில் இன்னமும் இல்லை. ‘வேண்டத்தக்க’ அறிவாக அது இன்னமும் எம்மால் விளங்கப்படவில்லை. ஏன்? விரும்பப்படவில்லை என்றும் கூறலாம்.

‘இசையும் அசைவும்’ – ‘அழகியல்’ என்று எத்தனையோ வருடமாகக் கூறினும் இன்னமும் அது மாணவர் எழுந்து நின்று பாடும் வாய்பாடாகவே எமது வகுப்பறையில் நிகழ்கிறது. இன்றும் எமது பாடசாலைகளில் சிறுவர் அரங்கு கற்றல் கற்பித்தலுக்கு வேறானதாகவே உள்ளது. “படிக்கிற பிள்ளையைப் பழுதாக்கக் கூடாது.” என்பது ஊரில் ஒரு சில பெற்றோரின் அறியாமை மட்டுமல்ல அது பிரசித்த – புலமைப்பரிசில் – அதிபர்கள் – ஆசிரியர்களிடமும் உண்டு.

இந்நிலையில் இன்று மகிழ்ச்சிகரமான கற்றல் கற்பித்தலில் ‘சிறுவர் அரங்கம்’ எவ்வாறு முக்கிய இடம்பெறுகிறது என்பதனை நாம் மனம் கொள்ளவேண்டும். அரங்கின் வளர்ச்சியில் ‘பங்குகொள்வோர் அரங்கு’ என்ற ஒன்று இன்று பேசப்படுகிறது. இந்தப் பங்கு கொள்வோர் அரங்கின் ‘நதி மூலம்’ சிறுவர் அரங்காகக் கொள்ளலாம் என எமது நாடக ஆசிரியர் குழந்தை ம.சண்முகலிங்கம் இங்கு குறிப்பிடுகின்றார். இங்கு மாணவரோ அல்லது ஆசிரியரோ தாம் பங்குபற்றும் விடயத்தில் போதிய விளக்கம் உடையவராக இருப்பது முக்கியமாகின்றது. இவ்வாறு இணைந்த பங்குபற்றுதல் ஊடாக பெறும் அறிவு – அனுபவம் என்பதும் நமது கல்வியே அன்றி வேறல்ல. இங்கு கல்வி என்பது மேல் இருந்து திணிக்கப்படாத ஒன்று என்பதையும் நாம் மனம் கொள்ளுதல் நன்று.

pachnchavarna-nariyar_a.jpg

குழந்தை கருவிலேயே கற்கத் தொடங்குகின்றது என்பர். ஆம்! சூழல் மனிதனை உருவாக்குகின்றது. எனில், ஊர், அயல், உறவு, கோயில், குளம், தோட்டம், தொழில், விளையாட்டு என்ற ஒரு நெருக்கடி அற்ற ‘ஊர்மனை’ வாழ்வில் ஒரு குழந்தை தானாகக் கற்பதும் உண்மையான கல்வியே. ஆயின் அது ஆரோக்கியமாக அமையும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் இன்று இல்லை.

முன்பு எமது ஊர் தன்னழகு கெடாமல் இருந்தது. முன்பு ஊரில் எல்லோரும் நமக்கு அறிந்தவர், தெரிந்தவராக இருந்தனர். இன்று இந்த நிலைகள் இல்லை. அச்சம் அதிகம். அசைதல் குறைவு. எல்லாம் வுஏ முன்னெனில், எமது தேர் விளையாட்டும், ஊர்விளை யாட்டும் தெரியாமல் போகின்றது. இந்நிலையில் ‘பஞ்சவர்ண நரியார்;’ முக்கியமாகின்றார். பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்றே இந்நாடகத்தின் கதையும். ஆயின், அக்கதையை நகர்த்துகின்றபோது எம்மண்ணுக்கே உரித்தான பண்புகள் இவ்வாற்றுகையில் சேர்வது ஏன்? எவ்வாறு? என்பதையும் நாம் தெரிந்திருத்தல் அவசியமாகின்றது.

‘கூடிவிளையாடு பாப்பா’ இல் தொடங்கி இற்றை வரையில் சிறுவர் அரங்கப் பாடல்களாக ஆசிரியர்களது பாடல்களே எமது வாயிலும் மனத்திலும் உள்ளன. செயல்திறன் அரங்க இயக்கக் குழுவினரது முன்னைய சிறுவர் அரங்க செயற்பாடுகளிலும் இதனை அவதானித்திருக்கலாம். இன்றும் அது ஒரு பங்குகொள்வோர் அரங்காக நமது பாடசாலைக்கு வருகின்றது.

முன்னமும் ‘கூடிவிளையாடு பாப்பா’வில் எம் மாணவர் பங்கு கொண்டு இன்புற்றதை நாம் இவ்வேளை நினைவிற் கொள்ளலாம். இத்தகு ஈடுபாட்டினோடு எம் மண்ணின், மரபின் அம்சங்களான நாட்டார் பாடல்கள் கதைகள் இனிய சந்த ஒசைகள், ஆடல் முறைகளை எம் மாணவர் எளிதில் பயில இயலும். இத்தகு அறிவு – அனுபவங்கள் இன்று எம் எல்லோர்க்கும் அவசியமாகின்றது. உண்மையில் இவை எம் கல்வியாய் இங்கு இணைகின்றன.

மேலும், இன்று எமது ஆரம்பக் கல்வியில் விளையாட்டின் மூலம் கற்றல் எனும் ஓர் பண்பு கூறப்படுகிறது. இது எம்மண்ணில் முன்பு அதிகம் நிகழ்ந்துள்ளது. (ஆலையிலே சோலையிலே நாட்டார் பாடல்) இங்கு வரும் கிட்டிப்புள்ளும் பம்பரமும் இன்று நாம் அறியாத பொருள் ஆயின. ஆயின் அளத்தல் என்ற எண்ணக்கரு அன்றே ‘மறைமுகக் கல்வியாய்’ எம் மண்ணில் இருந்துள்ளது. இந்நிலையில் எவை? எவை எமதென்பதை அறிந்து செல்வதற்கும் ‘அரங்கம்’ எமக்கு உதவும்.

இங்கு ‘பஞ்சவர்ண நரியாரில்’ வரும் ஆடல் பாடல் விளையாட்டு எல்லாமே எமக்கே உரியன. இதில், எமக்காக எங்கிருந்தோ அறிமுகம் செய்யப்படுபவை எதுவும் இல்லை. உதாரணம், வர்ண நரியாரைக் காணச் செல்லும் ஏனைய மிருகங்களின் அணி வகுப்பில்
“லெவ்ற் றைற்….
இடம் வலம்………
ஓலைக்காலை முன்னே வை..
சீலைக்காலைப் பின்னே வை…”
என வரும் சந்தர்ப்பங்கள் ஒரு வகையில் விளையாட்டாக அமைந்தாலும் இன்னோர் வகையில் எமது மண்ணின் கல்வி தொழில் முறைகள் எவ்வாறு மாற்றம் அடைந்து வந்துள்ளன என்பதை அறியவும் ஏற்ற ஓர் உதாரணமாகவும் அமைகின்றது. இன்னமும், இங்கு சிறுவர்களாக வளர்ந்தோர்கள் பங்கு கொள்வதும் கவனதிற்குரியது. இன்மும் சிறுவரை உளங்கொள்ளாது. சிறியோரையும் பெரியோராகச் சித்திரிக்கும் எமது சூழலில், வளர்ந்தோர்கள் சிறுவர்களாக மகிழ்ந்துபாடியாடும் காட்சியை எம்மவர் நிச்சயம் அறிய வேண்டும். தம்மைப் பெரிதாகக் கருதாத தன்மையும், தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழவைக்கும் சிந்தையும் சிறுவர் அரங்கில் நாம் கற்கும் பாடங்கள்.

இன்று, ஆசிரியர் வெற்றிடத்தில் ஆரம்பக் கல்வியே அதிகமாக உள்ளது. இவ்வெற்றிடத்தை ஏனைய பாட ஆசிரியர்களே நிரப்புகின்றபோது- அங்கு சிறுவர் உளநலத்தோடு ஒன்றித்து கற்பித்தல் இல்லாமற் போகின்றது. இடையில், வழங்கும் பயிற்சிகள் கூட இவ்வாறே அமைகின்றது. இந்நிலையில், சிறுவர் அரங்கு என்பது தனியே ஓர் சிறுவர் நாடகம் தயாரிப்பது மட்டுமல்ல. அது ஒரு சமூக உறவுச் சாதனம் என்பதையும் உளங்கொள்ள இவ்வாற்றுகை நமக்கு உதவும்.

இங்கு, இவ்வாற்றுகையில் தனித்த போதனைகள் (ஏமாற்றக் கூடாது) எதுவும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை. மேலும், அது சிறுவருக்கான விடயமும் அல்ல. ஆயின் இதைக் கூட விளங்காது, இன்னமும் புத்திமதி சொல்லும் வெற்றுக் கருத்துக் கோவைகளையே சிறுவர் நாடகமாகச் சொல்லும்-செய்யும்-சிந்தனை- இன்னமும் எம்மை விட்டு நீங்கவில்லை. “முடிவு என்ன சொல்கிறது?” என்றே இன்னமும் எம் நடுவர்கள் கேட்கின்றார்கள். “அரங்கு சொல்வது அல்ல செய்வது” என்பதனை விளங்கவும் இத்தகு நாடகங்கள் எமக்கு உதவும். இங்கு சிறுவர்களின் மனமகிழ்ச்சி அவர்களின் பங்குகொள்ளுதல் என்பதே முக்கியமாகும்.

இதனூடு இவர்கள், தமக்குத் தேவையானதைக் கற்றுக் கொள்கின்றார்கள். இது ஒரு நேரசூசிக்குள் அவதிப்பட்டுத் திணிக்கும் விடயம் அல்ல. சீர்த்திருத்தம் என்ற சிந்தனைச் சூழலுக்கு அமைய மாறுபடும் கல்வியும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்று எம் மாணவர் மனநிலை பல்வேறு நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இதற்கு-இதுதான் விடை- என்றில்லாது, இன்னும் நாம் கண்டறியும் தேவை உள்ளது. இதற்கும் எம் ‘சிறுவர் அரங்கம்’ துணை செய்யும். முக்கியமாக- இன்று நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் கல்வியில் எம் அரங்கின் செயற்பாடாகவே அமையும்- ‘வளரும் பயிருக்க முளையில் உதவுதல்’ என்பது, அதனை வேரோடு வைத்திருந்து விளைவு காணும் முயற்சியாகவே அமையும். இன்னும் ‘வளரும் முன் காப்பதும்’ இவ்வரங்கின் முயற்சியாகும்.

இனி, எம் பாடசாலையில் மேடையேற்றப்பட்ட ‘பஞ்சவர்ண நரியார்| பற்றி இன்னொரு செய்தியும் முக்கியமாகும். அதாவது, இந்நாடக எழுத்துருவில் நாடகம் நிகழ்த்தும் இடம், பாடசாலையின் வளநிலை (இடம், பொருள்)க்கு அமைய முற்றம், மரநிழல் என எந்தவொரு வெளியிலும் ஆற்றுகை செய்யலாம் என்ற ஒரு கருத்துக் கூறப்படுகிறது. ஆயினும் இங்கு இவ்வாற்றுகை படச்சட்ட மேடையிலேயே நிகழ்த்தப்படுகிறது. ஆயின், ‘நாடகம் நல்லாயிருக்கு எண்டாலும் எங்களால் உப்பிடிச் செய்ய ஏலுமே’ என்றவாறும் எம்பாடசாலை நிலைமைகள் உண்டு என்பதையும் நாம் மறுத்தல் இயலாது. மேலும், இவ்வாற்றுகையின் ஆரம்பத்தில் வீட்டிற்கு வர்ணம் பூசுகின்றவேளை ‘மழைவரும் கோலம்’ மனக் காட்சியாகப் பதியவில்லை. மழைக்கு ஒதுங்க இடம் தேடும் நரியின் வருகையே மாணவர்க்கு ஆரம்பமாகத் தெரிகின்றது.

மேலும், மிருகங்களின் அணிநடைக் காட்சியில் “சரி சரி ஓடிப்போய் ஓலையும் சீலையும் எடுத்து வாங்கோ”, “யானையாருக்கு ஆரும் கட்டிவிடுங்கோ” என வரும் உரையாடலுக்கேற்ப அக்காட்சி, உண்மைப் பொருள்கள் இன்றி ஊமத்தில் நிகழ்வதும் சிறுவர்க்கு பொருந்துமா என்று சிந்திக்க வேண்டி உள்ளது.

மேலும், நரியார் புழுகத்தில் ஆடிப்பாடும் இடங்கள் இரண்டிலும் (தத்தித் தகணக தொம்தரி கிடதக -2 தந்தத் தகிர்த தகிர்த தாம்.. ) பாடல் ஒத்த கருத்தைக் கொண்டு இருப்பினும் “தந்தத்தகிர்த..” நடையின் காட்சி மாணவர்க்கு மனப்பதிவாகவுள்ளது. மேலும், நீரில் வீழ்ந்து “சாயம் கழண்ட” பின்னும் நரியின் வால் பஞ்சவர்ணமாகவே இருந்ததையும் (இது பெருந் தவறு அல்ல) சிலர் அது ஏன்? அப்படி…? எனக் கேட்கின்றனர். ஆயினும் இவ்வாற்றுகை மனம் கொள்ளும் சிறுவர்களைப் பொறுத்த வரை இதுவே அவர்கள் காட்சியாகக் கற்கும் ஒரு சந்தர்ப்பம் என்பதனை எவரும் மறுத்தல் இயலாது.

இவ்வேளை, இவ்வாற்றுகையின் முன்னரும், அதன் பின்னரும். ஆன நேரங்களை அரங்கின் பொழுதாகவே (தேடல்) எம் பாடசாலைகள் ஆயத்தம் செய்யுமாயின் அது எம்மாணவர்க்கு மிக்கப் பயனுடையதாக அமையும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: