Theva

சிறுவர் அரங்கு, ஆரம்பக்கல்வி கற்றல் செயற்பாட்டுக்கான வழிகாட்டி!

In கட்டுரை on ஒக்ரோபர்17, 2007 at 5:19 பிப

மாகாணக் கல்வித் திணைக்களம் ஆண்டு தோறும் சிறுவர் நாடக விழாக்களைக் கல்வி வலய ரீதியாகக் கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மே, ஜூன் மாதங்களில் சிறுவர் நாடகங்களை தயாரிப்பதில் ஒரு சில ஆரம்பப் பாடசாலைகள் முனைப்பாக ஈடுபடுவதைக் காணமுடியும்.

தற்போது, 2004ம் ஆண்டு சிறுவர் நாடக விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இவ்வருடம் கூடுதலான பாடசாலைகள் சிறுவர் நாடக விழாவில் பங்கு பற்றுவதாக ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களே, சிறுவர் நாடக விழாக்களை நடத்துவதற்குப் பொறுப்புடையவர்கள். ‘கூத்தரங்கம்’ சார்பாக வலிகாமம், வடமராட்சி, யாழ்ப்பாணக் கல்வி வலயங்களைச் சேர்ந்த உதவிக்கல்விப் பணிப்பாளர்களை அணுகி சிறுவர் அரங்கு தொடர்பாகவும், சிறுவர் நாடக விழாத்தொடர்பாகவும் கலந்துரையாடினோம். அவர்களின் கருத்துக்கள் இங்கு தரப்படுகின்றன.

சிறுவர் அரங்கில் போட்டிகளுக்கு இடமில்லை.

சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் பாடசாலைகள் அவசியம் முன்னெடுக்கப்படவேண்டும். சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் ஊடாக மாணவர்கள் பல நன்மைகளைப் பெறுகிறார்கள். உள அழுத்தத்தில் இருந்து விடுபடுகிறார்கள். தன்னம்பிக்கையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

கற்பனைத் திறன் விருத்தியடைகிறது. இரசிப்பு, நயக்கும் திறன், மகிழ்ச்சி மிக்கவர்களாகக் காணப்படுகிறார்கள். சமூகத்துடன் ஒட்டி உறவாடுகிறார்கள், விட்டுக்கொடுத்து அன்பு செலுத்திப் பழகுகிறார்கள். சிறுவர் அரங்கு மூலம் வாழ்க்கைக்கேற்ற கல்வியை மாணவர்கள் கற்கிறார்கள்.

சிறுவர் அரங்கில் மகிழ்ச்சியுடன் கற்றல் செயற்பாடு நடைபெறுகின்றது. போட்டி மனப்பான்மை இன்றி நாடகவிழா ஒரு குதூகலமான, சுதந்திரமான, செயற்பாடாக விளங்குகின்றது. மாணவர்களின் சொற்கள் கூட்டாகச் சேர்ந்து எழுத்துரு ஒன்று வெளி வருகின்ற போது சிறுவர் அரங்கில் போட்டிகளுக்கு இடமில்லை.

சிறுவர்கள் தாம் வாழ்கின்ற சூழலை, தாம் வாழுகின்ற சமூகத்தை மதிக்கவும், விழுமியங்களை மதிக்கவும், கலாசாரத்தைப் பேணவும் கற்கின்றார்கள். நல்லவற்றைப் பின்பற்றக் கூடிய மனப்பாங்கையும் குழுவாகச் செயற்படக் கூடிய தன்மையையும், முரண்பாடுகளை சுயமாகத் தீர்த்துக் கொள்ளக்கூடிய திறமையையும் பெறுவதே இன்றைய கல்வியின் நோக்கம். அவற்றிற்கு அடிகோலி உதவுவது சிறுவர் அரங்கின் நோக்காக உள்ளமை சிறப்பானதாகும்.

சிறுவர் அரங்கச் செயற்பாடுகளைப் பாடசாலைகளில் முன்னெடுப்பதற்குச் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் வேண்டும்.

திருமதி கா.சுப்பிரமணியம்
உதவிக் கல்விப் பணிப்பாளர்
ஆரம்பக்கல்வி
யாழ் கல்வி வலயம்.

சிறந்த ஆசிரியர்களைச் சிறுவர் அரங்கு உருவாக்கும்

சிறுவர்களின் இயல்புக்கேற்ப கற்றல் செயற்பாடுகளை மாற்றி அமைத்து மாணவர்களை ஈடுபடுத்தக் கூடிய வழியை சிறுவர் அரங்கு தருகிறது. சிறுவர் அரங்கு ஊடாக மாணவர்கள் மத்தியில் சுயமாகச் சிந்தித்தல், உற்று அவதானித்தல், பாடும் ஆடும் திறன், சிறப்பாக செவிமடுத்தல், போலச்செய்தல், ஒற்றுமை மனப்பாங்கு போன்ற திறன்கள் விருத்தியடைகின்றன.

சிறுவர் அரங்கப் பயிற்சியை அனைத்து ஆசிரியர்களும் பெற்றிருத்தல் அவசியம். நம்மத்தியில் உள்ள கூடுதலான ஆசிரியர்கள் பேச்சு, மெய்ப்பாட்டு உணர்வுகளை வெளிக்காட்டல், அழகியல் செயற்பாடுகளில் ஈடுபாடு அற்றவர்களாக இருத்தல் போன்ற குறைகளை உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆசிரியர்களை சிறந்தவர்களாக மாற்றுவதற்கு சிறுவர் அரங்கு உதவும். புதிய கல்விச் சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கம் மாணவர்கள் தாமே குழுவாகச் செயற்பட்டுக் கற்க ஆசிரியர் வழிகாட்டியாக இயங்குதல் ஆகும்.

மாணவர்கள் தாமே செயற்பட்டு, திறன்களை அடைகின்ற வழிகளில் ஒன்றாக சிறுவர் அரங்கு இருப்பதனால் இது ஆரம்பக் கல்வியின் கற்றல் செயற்பாட்டுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.

திரு.கே.கமலநாதன்
உதவிக்கல்விப் பணிப்பாளர்
ஆரம்பக்கல்வி
வடமராட்சி கல்வி வலயம்

ஆசிரியர்கள் சிறுவர் அரங்கை கற்பித்தல் ஊடகமாகப் பயன்படுத்தலாம்

ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் சிறுவர்களுக்கு விருப்பமான சிறுவர் அரங்கச் செயற்பாடுகளை முன்வைத்து அதனூடாகக் கற்பித்தல் செயற்பாட்டை செயற்படுத்தினால் மாணவர்கள் கூடிய பயனைப் பெறுவார்கள். எமது பாடசாலைச் சூழலை எடுத்துக்கொண்டால் அங்கு பல விடயங்களை உரையாடல்கள் மூலமே எங்களால் விளங்க வைக்க முடிகின்றது. நல்ல விடயங்களைச் சொல்லும் போது மிருகங்கள் அல்லது மாணவர்களுக்குப் பிடித்தமான பாத்திரங்களை எடுத்து அதனூடாகச் சொல்லுவது பயனுடையதாக அமையும்.

ஆசிரியர்கள், சிறுவர் அரங்கை கற்பித்தல் ஊடகமாகப் பயன்படுத்தலாம். ஆகவே, ஆசிரியர்களுக்கு சிறுவர் அரங்கப் பயிற்சிகள் அவசியமானதாகின்றது. கடந்த காலத்தில் சிறுவர் நாடகப் போட்டிகளை நடத்தினோம். ஆனால், தற்காலத்தில் கல்விச்சீர்திருத்தத்தில் சொல்லப்பட்டதற்கு ஏற்ப போட்டிகளாக அல்லாமல் மாணவர்களுடைய திறன்களை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு விழாவாகவே நடத்துகின்றோம். மாணவர்களின் திறன்களை விருத்தி செய்வதென்பது ஒரு சில மாணவர்களுக்கு வரையறுக்கப்பட்டதல்ல. பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானதாகும்.

போட்டிகளாக நடாத்தும் போது அப்போட்டிகள் நல்லதிற்கு பயன்பட வேண்டுமேயொழிய வீணாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பாடசாலைகளுக்கும் இடையே விரோதங்களை வளர்ப்பதாக அமையக் கூடாது. எல்லா மாணவர்களையும் பங்குபற்றப் பண்ணுவதே எங்களின் நோக்கமாக இருக்கின்றது. அதாவது, ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுடைய திறமைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, போட்டியாக நடாத்தும் போது பல பாடசாலைகள் இதில் பங்கு கொள்ளாமல் விடுகின்றன. எனவே, இதனை நாம் போட்டியாக நடாத்தாமல் விழாவாக நடாத்துவது சிறப்புடையதாக அமைகின்றது.

நவீன கல்விச் சீர்திருத்தத்தில் வெறும் அறிவைப் பெறுவது நோக்கமல்லாமல் மாணவனுடைய ஆளுமை விருத்திக்கும் பாடசாலை வழிவகுக்க வேண்டும். இந்த வகையில், ‘தேர்ச்சி கருதிய மாணவர் மையக் கலைத்திட்டம்’ என்பதை நாம் சொல்லலாம். இதில், ஒவ்வொரு மாணவனும் குறித்த விடயங்களில் தேர்ச்சி பெறவேண்டும். இதற்கு, ஆசிரியர்களுக்கு சிறுவர் அரங்கப் பயிற்சி தேவையானதாகும். இச்செயற்பாட்டின் அவசியத்தை உணர்ந்து முதல் கட்டமாக 25 பாடசாலைக் குடும்பங்களிலிருந்து 50 ஆசிரியர்களைத் தெரிவு செய்து செயல்திறன் அரங்க இயக்கத்தினால் சிறுவர் அரங்க பயிற்சிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்தும் இவ்வாறான பயிற்சிகளை ஆரம்பப்பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

திரு. சின்னத்துரை மாதவகுமார்
உதவிக் கல்விப்பணிப்பாளர், ஆரம்பக்கல்வி
வலிகாகமம் கல்வி வலயம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: