Theva

உங்கள் அனுமதியோடு………… உங்களுடன் சில வார்த்தைகள்

In ஆய்வு on ஒக்ரோபர்17, 2007 at 5:37 பிப

children_kulanthai.jpgகுழந்தை ம.சண்முகலிங்கம்

யுத்தத்தை அடுத்து நடந்து கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில், சிறுவர்கள் மீது நாம் கூடுதலான கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதைப் பலரும் உணர்ந்துள்ளனர். சிறுவரை இலக்காகக் கொண்ட பல நடவடிக்கைகள் பலராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை யாவும் தொடர் நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் பலரும் உணர்ந்துள்ளனர். அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் சிறுவர் அரங்கும் பயனுள்ளதொரு நடவடிக்கையாக அமையும் என்பதையும் எல்லோரும் ஏற்கின்றனர்.

அரங்கச் செயற்பாடுகள் பல்வேறு வழிமுறைகளிலும், வடிவ அமைப்புக்களிலும் மேற்கொள்ளப்படுவதை நாம் அறிவோம். அந்தவாறே, சிறுவர் அரங்கச் செயற்பாடுகளும் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கு நாம் நியமமுறையில் அமைந்த ‘சிறுவர் அரங்க’ ஆற்றுகைக்கான முயற்சியில் ஈடுபட முற்பட்டுள்ளோம். ‘நியம முறை’ என்பதன் மூலம் நாம் எமக்குச் சில வரையறைகளை விதித்துக் கொண்டுள்ளோம். அதாவது, தனித்தோ பலர் கூடியோ, சிறுவர் அரங்குக்கான எழுத்துருவொன்றினை ஆக்கிக் கொள்வதும், அதனைச் சிறுவர்களுக்கு அல்லது வளர்ந்தவர்களுக்கு, நியமமான முறைமையில் ஆற்றுகை செய்வதற்குப் பயிற்சி அளித்து, சிறுவர்களைப் பார்வையாளர்களாகக் கொண்ட சபை முன் நிகழ்த்திக்காட்டுதல்.

நாடக எழுத்துருக்களின் அவசியத்தை முற்று முழுதாக நிராகரிக்கும் ஒரு போக்கு இங்கு எம்மத்தியில் காணப்படுகிறது. நாடக ஆற்றுகையொன்றினை எவ்வகையிலும் நாம் தயாரித்துக் கொள்ளலாம். தயாரிக்கப்படும் நாடகங்கள் அனைத்துமே எழுத்துரு வடிவிலும் அமைத்துக் கொள்ளப்படுவது அவசியம் என்பதை நாம் வலியுறுத்த முற்படுகிறோம்.

அத்தோடு, ஆசிரியத் தொழில்புரிகின்ற அனைவரும் நாடகத்தோடு சம்பந்தப்பட்டவர்களாகக், குறுகியகால அனுபவத்தையேனும் பெற்றவர்களாக இருப்பது அவசியம் என்பதை நாம் எமது அனுபவவாயிலாகக் கூறமுடியும். குறிப்பாக, ஆரம்ப வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ‘சிறுவர் நாடகம்’ ‘ஆக்க நாடகம்’, ‘சிறுவர் அரங்கம்’ என்பனவற்றில் கூடியளவு அனுபவமும் தேர்ச்சியும் பெற்றிருப்பது அவசியம் என உணரப்பட்டுள்ளது.

children_kulanthai_a.jpg

என்னைப் பொறுத்தவரையில் நீண்ட காலத்தின் பின் சிறுவர் அரங்க முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு எனக்கு இப்போ சில நாட்களாகக் கிட்டியுள்ளது. எனது நண்பர்கள் சிலரோடு கூடி இம்முயற்சியில்; பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது எவ்வளவு காலம் தொடரும் என்பது பற்றி நாம் எதையும் கூறமுடியாது. அது எமது நேர்மையிலும் நம்பிக்கையுறுதியிலும்தான் தங்கியுள்ளது.

அண்மையில் சிறுவர் அரங்கு பற்றிய கருத்தரங்குகள் சிலவற்றையும், களப் பயிற்சிகள் ஐந்தாறையும் நடத்தும் சந்தர்ப்பம் ‘செயல் திறன் அரங்க இயக்கத்துக்குக்’ கிட்டியது. அந்த நடவடிக்கைகளில் நானும் சேர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தக் களப்பயிற்சிகளில் ஆசிரியர்கள், குறிப்பாக ஆரம்ப வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பங்குகொண்டனர். இவற்றில் பெரும்பாலான களப்பயிற்சிகள், சிறுவர் நாடக மொன்றினை எழுதி, அதனைத் தயாரித்து மேடையேற்றுவதை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டன.

இக்களப்பயிற்சிகளில் பங்கு கொண்ட ஆசிரியர்களும், கோப்பாய் ஆசிரிய கலாசாலை, ஆரம்பக்கல்வி ஆசிரியமாணவர்களும் காட்டிய ஆர்வமும் அக்கறையும் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்தது. ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் சிறுவர் அரங்கச் செயற்பாடுகளில் அக்கறை கொள்வதென்பது மிக முக்கியமானதொரு விடயமாகும். சிறுபிள்ளைகள் அவர்களிடம்தான் வளர்கிறார்கள்.

நாடகம் சார்ந்த செயற்பாடுகள் அனைத்தும் சிறுவருக்கும் ஆசிரியருக்கும் இடையிலான உறவை மிகவும் நெருக்கமானதாக்கி விடும். அது, வீட்டில் காணப்படும் இரத்த உறவின் உறவு நெருக்கத்தை வகுப்பறையிலும் நிலவச் செய்யும். வகுப்பறை அன்னை மடியின் இதத்தைக் கொண்டிருக்கும். அங்கு கற்றல் – கற்பித்தல் என்பது இரு வழிப் பாதையாக அமையாது கூடிக் கற்றுக் கொள்ளும் ஒரு வழிப் பயணமாகவே அமையும். ‘நான் கலந்து’ பாடி ஆடி விளையாடிக் கற்கும், உணர்வு கலந்ததொரு அனுபவமாகவே அந்தக் கற்றல் அமையும்.

மூன்று நான்கு மாதங்களுக்குள் ஏறக் குறைய இருநூறு வரையிலான ஆசிரியர்களை, இக் களப் பயிற்சிகளில் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. இதனூடே, நாம் அதிகம் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. முக்கியமாக, பெரும்பாலான ஆசிரியர்கள் சிறுவர் நாடக எழுத்துருவொன்றினைத் தாமாக எழுதினர். குழுக்களாகக் கூடி ஒவ்வொருவரும் கலந்துரையாடலில் பங்கு பற்றித் தமது குழுவுக்காக ஒரு நாடகத்தை எழுதிக் கொண்டனர். ஒவ்வொருவரும் தமது கைப்பட நாடகத்தை எழுதினர். மேலும், “கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையாகவும், அரங்க நடவடிக்கையாகவும் தாம் தமது பாடசாலையில் நாடகத்தைப் பயன்படுத்துவோம்.” எனப் பல ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கூறினர்.

தம்மால் நாடகம் எழுதமுடியாது என்றும்,  நாடகம் நடிக்க முடியாது என்றும், நாடகத்தைத் தயாரிக்க முடியாது என்றும் நினைத்துக் கொண்டிருந்த பலர், தம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெற்றனர். தமது ஆற்றல்களைத் தாம் கண்டுகொண்டனர். அவர்கள் தொடர்ந்து இம்முயற்சியில்; ஈடுபட்டுவந்தால், சிறுவர் நாடகம், தான் வாழ வேண்டிய, வளரவேண்டிய இடத்தில் வளர்கிறது என திருப்தி கொள்ளமுடியும்.

இந்தவாறு நடத்தப்பட்ட தொடர் களப் பயிற்சிகளின் பேறாகப் பால நாடக எழுத்துருக்கள் படைக்கப்பட்டன. அவ்வாறு, கலந்துரையாடப்பட்டு வகுத்துக் கொள்ளப்பட்ட நாடகங்களில் ஒன்று ‘பஞ்சவர்ண நரியார்’ என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

இது ‘நிறம் மாறிய நரி’ என்ற கதையின் நாடக வடிவம்தான். இது அந்தக் கதையின் ஒரு வடிவம் எனவே கொள்ளப்பட வேண்டும். இந்தக் கதையை எத்தனையோ வகைகளில் எழுதிக் கொள்ளலாம். இந்தக் கதையை மட்டுமல்ல, எந்தக் கதையையும் எத்தனை விதமாகவும் எழுதிக் கொள்ளலாம். இந்தவாறு, சிறுவருக்கான கதைகள் காலத்துக்குக் காலம் பலப்பல மாற்றங்களைப் பெற்றுக் கதையாகக் கூறப்படுவதையும் நாடகமாக நடிக்கப் படுவதையும் நாம் கண்டு வந்துள்ளோம்.

கதைகளில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதற்காக மாற்றங்களை நாம் செய்யக் கூடாது. பிள்ளைகளது பல்வேறுபட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காகவே நாம் மாற்றங்களைச் செய்யவேண்டும். உ+ம் வன்முறைகள் மலிந்து போய்க் கிடக்கும் ஒரு சமூகத்துள் பிறந்து வாழும் பிள்ளையைப் பொறுத்தவரையில், வன்முறை என்பது வாழ்வில் ஒரு பகுதியாகிவிடும். வன்முறை மனோபாவம் பிள்ளையில் இயல்பாக குடிகொண்டுவிடும். எனவே, அத்தகைய தன்மைகளைக் கொண்ட கதைகளில் மாற்றங்களைச் செய்வது விரும்பத்தக்கது.

எங்களது பிள்ளைகள் இன்று பெருமளவுக்கு சுகாதாரமற்ற சூழலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இங்கு நான் பௌதிகக் சூழலை மட்டும் குறிப்பிடவில்லை. புறச்சூழலைவிட அகச்சூழல், மனச் சூழல் மிகவும் மாறுபடக் கூடிய நிலையில் உள்ளது. வளர்ந்தவர்கள், எல்லாத்துறைகளிலும், வகுத்துக் கொண்டிருக்கும் மனோபாவச் சூழல், குழந்தைகள் ஆரோக்கியமான மனோபாவங்களோடு வளர்வதற்கான சூழலாக இல்லை.

இலக்கினை அடைவதற்கு எதையும் செய்யலாம் என்றதொரு பாடத்தை நாம் எமது செயல்களின் மூலம், எமது சிறார்களுக்குப் பாடமாகப் புகட்டிக் கொண்டிருக்கிறோம். நாம் நெஞ்சறிந்த பொய்களைச் சொல்வதற்கும் செய்வதற்கும் இன்று அஞ்சுவதாகவே இல்லை. இலக்கு மிக உயர்ந்தது, உன்னதமானது, அது எப்படியேனும் அடையப்பட வேண்டியது என்றே நாம் சிந்திக்கிறோம். எத்தகைய உன்னதமான இலக்காக இருப்பினும், அதனை அடையும் மார்க்கம் பொய்கள் அற்றதாக, உண்மை நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதே சரியான மனோபாவமாகும். எனவே, இத்தகைய மாசுபட்ட மனோபாவச் சூழலில் வாழும் குழந்தைகளை நாம் எவ்வாறு மீட்டெடுக்கப்போகிறோம். குடத்தை மினுக்கிய பின்னரும் குப்பையில் தான் வைக்க வேண்டியுள்ளது. அதற்காக மினுக்காமல் விடமுடியுமா?

எதிர்காலச் சந்ததியேனும் நல்ல மனோபாவங்களோடு வாழவேண்டுமானால் நாம் இன்றைய குழந்தைகளில் கவனம் செலுத்தித்தான் ஆகவேண்டும். எனவே, எமது சிறுவர் நாடகங்கள் யாவும் மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய நிலையில்தான் இருக்கின்றன. இந்தப் ‘பஞ்சவர்ண நரியார்’ நாடகமும் இதற்கு விதிவிலக்கான ஒன்றல்ல. அதாவது, நாடகம் கூட மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

மார்ச் மாதத்தில் (2004) நண்பர் தார்சீசியசுடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தபோது சிறுவர் நாடகம் பற்றிய கதை வந்தது. சிறுவருக்கான எமது கதைகள் பலவும் குள்ளத்தனம், ஏமாற்றுதல், தந்திரம் புரிதல் என்பதையே சிறந்த பண்புகளாகக் காட்டி வந்துள்ளது என்று அவர் கூறினார். இன்றைய சூழலில், அவரது கூற்றில் பொதிந்துள்ள உண்மையை நாம் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகிறது எனவே நான் கருதுகிறேன். இந்த நிலையில் சிறுவர் மீது அக்கறை கொண்ட கல்வியியலாளர்களும், உளவியலாளர்களும், படைப்பாளிகளும், கலைஞர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், பெரியவர்களும் அடிக்கடி ஒன்று கூடி, சிறுவருக்கான நலத் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் ஒரு முகப்படுத்திச் செயற்படுத்துவது அவசியமாகின்றது. இந்த முயற்சிகள் யாவும் நன்கு திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவையாக உள்ளன.

இன்றைய சிறுவர்களைப் பொறுத் தவரையில் ‘ஓய்வு நேரம்| என்பதே அவர்களுக்குக் கிடைக்கப் பெறாத ஒன்றாக உள்ளது. நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் எமக்குக் கிடைத்த அந்த ஆனந்தமான ஓய்வு நேரத்தை, நாம் இன்று எமது பிள்ளைகளுக்கும் பேரர்களுக்கும் பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். ‘ஓய்வு வேளை’ என்பதும் மனித உரிமைகளில் ஒன்று என நாம் பிரகடனப்படுத்த வேண்டும். மனித உரிமையில் மட்டு மல்லாது சிறுவர் உரிமையிலும் இது சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

இந்த ஓய்வு நேரம் கிடைக்கப் பெற்றால் மட்டுமே அந்த ஓய்வு வேளையைப் பிள்ளைகள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது பற்றிச் சிந்திப்பதில் பயனேதும் இருக்கும். அவ்வாறு இல்லையேல் எமது முன்மொழிவுகள் யாவும் கருங்கற்குவியல் களுக்காற்றிய பேருரையாகவே அமைந்துவிடும். பிள்ளை சுயமாகத்தன் சுயத்தைக் கண்டறிய உதவும் ஒன்றாகவே ஓய்வுவேளைச் செயற்பாடுகள் அமையும். அந்த வேளையில் பிள்ளை தன் அண்ணன் தம்பி, அக்கை தங்கை, அம்மை அப்பன், பேரன் பேர்த்தி யோடும், அயல் சுற்றத்தோடும், நண்பர்களோடும் தன் பொழுதை ஆனந்தமாகக் களிக்கும். ஆடுதல், பாடுதல், கூடிவிளையாடுதல், கதைகேட்டல், காரியம் செய்தல் எனப் பலதையும் செய்து, பிள்ளை தன்னைத்தான் கண்டு கொள்ளும்.

இந்தவாறு, மாலை வேளைகளை ஓய்வு வேளைகளாகக் களிக்கும் பிள்ளைக்குப் பாடசாலைக் கற்றல் என்பது விருப்பமான ஒன்றாக அமைந்துவிடும். எனவே, பிள்ளை கல்வியை விரும்புவதற்காக, நாம் பிள்ளையை ஆடிப்பாடி விளையாட விடுவோம். இந்த ஆடல், பாடல், விளையாட்டு, கதைசொல்லல் என்பவற்றுக்குள்ளேதான் சிறுவர் நாடகமும் சிறுவர் அரங்கும் மறைந்துள்ளன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: