Theva

பெண்கள் மீதான அழுத்தங்களுக்கு எதிரான உணர்வெழுச்சியே ‘கல்லின் கசிவு’

In விமர்சனம் on ஒக்ரோபர்14, 2007 at 6:46 முப

நாடகம் பற்றிய கருத்தியல் பார்வை

kallin-kasivu.jpg

– இலக்கியா

அரங்கின் பல்பரிமாணப் பிரயோகப்போக்கின்படி அது சாதிக்க விளைவன பற்பல. புரையோடிக்கிடக்கின்ற சமூக நியமங்களுள் (Social nomes)  அரங்கு தன்னகத்தே எல்லைப்படுத்தப்பட்ட, புலனாகா நியமங்களைத் தாங்கி வந்திருக்கின்றது. ஈழத்தைப் பொறுத்தமட்டில் கூத்துப் பாரம்பரியம், பின்வந்த இசை நாடகப் பாரம்பரியம் என்பனவெல்லாம் அரங்கப் பாரம்பரியங்களாகக் கொள்ளப்பட்ட வேளைகளில் இவ்வளிக்கைகளில் பெண்கள் பங்கு பற்றுதல் என்பது இயலாத அல்லது விரும்பப்படாத ஒன்றாகவே இருந்திருக்கின்றது. இவை மீறப்பட்ட சந்தர்ப்பங்களிலும் அவை புறநடைகளாகவே (Exception) கருதப்பட்டிருக்கின்றன. எனினும் மேற்குலக அரங்கின் தாக்கங்கள் இங்கு எட்டப்பட்ட வேளைகளில், குறிப்பாக ‘நவீன நாடகங்கள்’ என மக்களால் குறிப்பிடப்பட்டு வந்த அரங்க அளிக்கைகள் ஈழத்தில் தலைகாட்டத் தொடங்கிய வேளைகளில் பெண்களும் பாத்திரமேற்றல் எனும் நிலைமை மெல்ல அங்கீகாரம் பெறத்தொடங்கியது எனலாம். ஏழுபதுகளின் பின்பகுதி, எண்பதுகள் என்பவற்றில் இந்நிலைமையைப் பெரும்பாலும் அவதானித்திருக்கலாம். யதார்த்தவாத நாடக வடிவம் (Realistic style)  அதன் கட்டமைப்பு வடிவம் என்பன இதற்கான சந்தர்ப்பத்தை அளித்திருக்கலாம். உண்மையில் ஒரு மத்தியதர வர்க்கத்தின் அரங்கியல் ஈடுபாடு என்பது இதுவரை இருந்து வந்த அரங்க மரபுகளைத் தாண்டி முன்னேற வழிவகுத்தது என்றே கருதவேண்டும்.

இவ்வாறு பெண்கள் அரங்க அளிக்கையில் ஈடுபட விளைந்த வேளையிலும் அந்நாடகங்களின் கருப்பொருள் பெரும்பாலும் பெண்ணை, அவளது பிரச்சினையை மையப்படுத்தியதாகப் பின்னப்பட்டிருந்ததில்லை. ஆயினும் பெண்நிலை வாதக் கோட்பாடுகள் எம்மத்தியில் பரவத் தொடங்கிய வேளையில் அரங்கும் தன் போக்கில் நெகிழ்வைக் கொண்டுவர முயற்சித்துள்ளது. இங்கே முற்போக்குச் சிந்தனாவாதங்கள் உறுதுணை அளித்து நின்றிருக்கின்றன. அதன்படி, எண்பதுகளின் பின் பெண்கள் பற்றியும் அவர்கள் சார்ந்த பிரச்சனைகள் பற்றியும் ‘அரங்கேறிப் பேசுதல்’ சாத்தியமானதாகவும், சகஜமானதாகவும் அமைந்துள்ளன. ஆயினும் தனிமனித நிலையிலும், குடும்ப, சமூக அழுத்த நிலையிலும் அரங்கில் பெண்கள் ஈடுபடுதலும் அதனால் ஏற்படுகின்ற எதிர் விளைவுகளும் (Reaction) நீண்டு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதனால் உறவுகள் – சனசமூக நிலைய மட்டத்திலும், பாடசாலை மட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும் நின்று அதாவது தமக்கான ஒரு, ‘வரன்முறை பாதுகாப்புத் தளத்தில்’ நின்றே பெண்கள் அரங்க ஆற்றுகைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது கண்கூடு. இவ்வாறான அரங்கில் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் அதன் அரங்கப் பிரிவுடன் இணைந்து மேடையேற்றி வருகின்ற ‘கல்லின் கசிவு’ எனும் நாடகம் தன்னை இனங்காட்டிக் கொள்ள விளைகிறது.

பெண்கள் மேம்பாட்டுத்திட்டம் அல்லது கிராமமட்ட பெண்கள் அமைப்புக்களை வலுப்படுத்தும் திட்டம் எனும் செயற்பாட்டின் கீழ் அறியப்பட்ட, அரங்கு தொடர்பான ஈடுபாடு கொண்ட யுவதிகள் ‘கல்லின் கசிவு’ எனும் நாடக ஆற்றுகையாளராகச் செயற்பட்டு வருகிறார்கள். அறிவுசார் நிலையில் நின்று சிந்திக்கின்ற யுவதிகள் (படித்தமட்டம்) அரங்கில் ஏறி நடிக்கத் தயங்கும் அல்லது அச்சப்படும் நிலைமையின் வீதம் குறைந்தளவேனும் இருக்கும் இக்காலகட்டத்தில், ‘கல்லின் கசிவு’ ஆற்றுகையாளர்களான யுவதிகள் கிராமங்கள் தோறும் சென்று, மக்களின் முன் நெற்றிக்கு நேரே தமது பிரச்சனைகளைப் புடம்போட்டுக் காட்டும் திறன் படைத்தவர்களாக விளங்குவது குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.

மேடையேறி நடிப்பதையே பிரச்சினையாக எண்ணும் பெண்கள் மத்தியில் (இங்கே மேடையேறுதல், நாடகம் நடித்தல் என்பது பல்கலைக்கழக அரங்கு, கற்றவர்கள் கண்டுகளிக்கும் அரங்கு என்பன பெரும்பாலான பெண்களுக்கு பிரச்சினையாக இருப்பதில்லை. இவ் அரங்குகளுக்கு ஓர் அங்கீகாரம் அல்லது சமூகப் பெறுமானம் இருப்பதனால் ஆகும்.) கிராமமட்டத்தில் உள்ள பெண்கள் ‘கல்லின் கசிவு’ மூலமாக தங்கள் பிரச்சினையை – பெண்கள் பிரச்சினையைப் பேசிவருதல் வியக்கப்பட வேண்டியதே.

kallin-kasivu-a.jpgபெண்கள் பிரச்சினைபற்றி பல நாடகங்கள் பல்வேறு காலங்களில் மேடையேற்றப்பட்டிருக்கலாம். எனினும், நான் அறிந்த மட்டில் பெண்கள் பிரச்சனையை நேரடியாகப் பேசியது ‘கூர்’ என்ற நாடகமாகும். இது திருமதி ஞா.ஜெயரஞ்சினி அவர்களால் பல்கலைக்கழக பட்டப்படிப்புத் தேவைக்காக 1995ல் அளிக்கை செய்யப்பட்டது. ‘கல்லின் கசிவு’ இந்நாடக ஆற்றுகைச் சாயலைக் கொண்டிருப்பதும், அதன் கருத்தியல் சித்தாந்தத்தைப் போன்றே இருப்பதும் தவிர்க்க முடியாததாகவே காணப்படுகின்றது. ஏனெனில் பேசப்படும் விடயம், அதனைப் பேசும் உள்ளங்கள்-உணர்வுகள் ஒன்றாகவே இருக்கின்றன. உண்மையில் இதனைச் செழுமை மிகுந்த நாடக வடிவமாக ஆராய வேண்டிய நோக்கமே தேவையற்றதாக அமைகிறது. அது அவ்வாறு அமைய வேண்டிய தேவையுமில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. பெண்கள் ஓர் அரங்க நடவடிக்கை மூலமாகத் தங்களது பிரச்சினையைப் பேசிப் பறைகிறார்கள் என்பதே யதார்த்தம். அதற்கு அரங்கின் நெகிழ்ச்சித்தன்மை இடங்கொடுத்துள்ளது. அரங்க மூலகங்கள் அவர்களிற்குத் துணை நிற்கின்றன.

அன்றாடம் பெண்கள் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு பிரச்சினையையும் வீட்டிலோ, அல்லது தெரிந்தவர்களிடமோ கூறத்தயங்குபவர்கள், மேடையில் ஏறிப் பல்வேறு தரப்பினர் மத்தியில் அளிக்கை மூலம் கூறிவிடுகிறார்கள். இங்கே ஊர் வார்த்தைகள் பெரும்பாலும் அப்படியே பயன்படுத்தப்படுகின்றன. செயலியக்கம் சிக்கன வீரியத்தோடு நகர்ந்து செல்கிறது. இவற்றிற்கு மேலே பாத்திரங்களாகப் பாவனை செய்வோரின் உணர்வுகள் இங்கே முக்கியம் பெறுகின்றன. அது அவர்கள் அனுபவிக்கும் அழுத்தங்களிற்கு எதிரான உணர்வெழுச்சியென்றே எண்ணத் தோன்றுகின்றது. ‘பெண்ணியம்’ பற்றிப் பெரிய பெரிய கருத்துக்களை அறியாத, அல்லது சிந்திக்காத கிராமமட்டத்திலுள்ள இளம் பெண்கள், பெண்களின் பிரச்சினைகளை, அவர்களின் உள்மன உணர்வுகளை வெளிப்படுத்தி வருதல் என்பது பெண்கள் தம் உரிமைகளை அடைவதற்கான படிநிலை வளர்ச்சி என்றே கொள்ளவேண்டும்.

பெண்களிற்கான அரங்கக் களப்பயிற்சிகளின் போது அரங்க விளையாட்டுக்கள், பாடல்கள், ஆடல்கள் என்பவற்றில் அவர்கள் ஈடுபடுதல் இக்கால நடைமுறையாக இருந்து வருகிறது. ஆயினும் அது ஓர் மூடிய – தனிமைப்படுத்தப்பட்ட – புறத்தடங்கல்கள் அற்ற சூழ்நிலையிலேயே சாத்தியமானதாக அமைந்து கொள்கின்றது. இந்நிலைமைகளினுள் ‘கல்லின் கசிவு’ ஆற்றுகையாளர்கள் பெண்கள் கைதட்டி ஆடுதல் என்பதனைப் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்த்து, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அந்நோக்கு எய்தப்படுகையில் அல்லது முயற்சிக்கப்படுகையில் பலவீனமான ஒன்றாகவே அமைந்து கொள்கிறது.

கைதட்டிப் பாடி ஆடுதல் என்பது உடல், உள விடுதலைக்கான செயற்பாடு என்பதும், ஆற்றுகையின் கருத்துடன் ஒத்திசைவு கொள்வதற்கான சுட்டி என்பதும் உண்மையே. ஆயினும், இவைதான் பார்வையாளர்களான பெண்கள் ஆற்றுகையின் கருத்தை அங்கீகரித்தார்கள் அல்லது உணர்ந்து கொண்டார்கள் என நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக கருதிப் பார்வை
யாளரை ஆடவைக்க எடுக்கும் பகீரதப் பிரயத்தனங்கள் ஏனைய அனைத்து முயற்சிகளையுமே பலவீனப்படுத்துவதாகவே அமைந்து விடுகின்றன. நல்லூரில் நாவலர் கலாசார மண்டபத்தில் மகளீர் தினத்திற்காக ‘கல்லின் கசிவு’ ஆற்றுகை செய்யப்ட்டபோதும் அது சாத்தியமாகவில்லை. கிராமமட்டத்தில் ஒன்று திரட்டிய பெண்கள் மத்தியில் (சரசாலை – மட்டுவில் வடக்கு) ஆற்றுகை செய்யப்பட்ட போதும் அது சாத்தியமாகவில்லை. இதற்காக, எந்தத் தரப்புப் பெண்களும் தமது தளைகளை விடுவித்து அரங்க ஆடலில் ஈடுபட மாட்டார்கள் என்றும் பொருள் கொள்ள முடியாது. இங்கே அதற்கான சூழ்நிலையை, அதற்கான உணர் வெழுச்சியை சமூகப் பரிமாணங்களின் பெறுமதியை உணர்ந்து உருவாக்கும் பட்சத்தில் அது கைகூடும். இவ் விடயம் பற்றி நாடகத்தின் இணை நெறியாளர்களாகப் பணியாற்றும் துறைசார் பட்டதாரிகளான பெண்கள் அனுபவத்தின் ஊடாகக் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என எண்ணத் தோன்றுகின்றது.

‘சமூகம்’ நிதானமானது. அது எதையும் ஏற்கும், எதையும் நிராகரிக்கும். அது சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களையும் தேவைகளையும் பொறுத்தே தீர்மானிக்கப்படும். எனவே, ‘கல்லின் கசிவு’ பெண்ணியக் கோட்பாடுகளின் ‘பெரும்சமாக்களுக்கு’ மத்தியில் தன்னை நிலை நிறுத்தி நிதானமாக அடியெடுத்து வைத்து நகர வேண்டும். அதுவே ஆரோக்கியமான பெண்கள் வேலைத்திட்டமாகவும் அமைந்து கொள்ளும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: