Theva

ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்குத் தேவையான சிறுவர் அரங்கு

In கட்டுரை on ஒக்ரோபர்14, 2007 at 5:44 முப

– தே.தேவானந்த்

யாழ் மாவட்டக் கல்வி வலயங்கள் சில ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சிறுவர் அரங்கப் பயிற்சிகளை வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆரம்பப் பாடசாலைகளின் கற்பித்தல்களில் இன்று விளையாட்டு முனைப்புப் பெற்றுள்ளது. காண்பிய ரீதியிலான கற்பித்தல் செயற்பாடு, செயல் ரீதியான கற்பித்தல் செயற்பாடுகள் பற்றிப் பேசப்படுகின்றன. கல்விச் சீர்திருத்தக் கொள்கை மேற்சொன்ன விடயங்களை உள்ளடக்கியதாகப் பல ஆண்டுகளுக்கு முன், முன்மொழியப்பட்டது. ஆனால் இன்றும் இதனைச் செயற்படுத்த முடியாமல் பல பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். இவர்களின் சிரமத்தைப் போக்குவதற்கான வழியாக சிறுவர் அரங்கப் பயிற்சிகள் அமைவதாகக் கல்வி அதிகாரிகள், பணிப்பாளர்கள் எண்ணுகிறார்கள். இதற்காகத் தமது வழமையான வழிகளில் இல்லாது வௌ;வேறு நிறுவனங்களின் உதவிகளுடன் இந்தப் பணியை மேற்கொள்கின்றனர்.

பல ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் தாளப்பிடிப்பு இல்லாதவர்களாக, பாடல் ஆடல் விளையாட்டுக்கள் தெரியாதவர்களாக உள்ளார்கள். அவர்களுக்கான தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. இதனால் ஆரோக்கியமான சிறுவர் உளவிருத்திச் செயற்பாடுகள் ‘பாடசாலை வெளி’க்குள் அமைவது குறைவாக உள்ளது. சிறுவர் நாடக முயற்சிகள் பாடசாலைகளில் நடைபெறுகின்றன. அவை ஆரோக்கியமான முன்னெடுப்புக்களாக அமையவில்லை என்று கூறலாம். குறிப்பாகப் பெற்றோர் தின விழா, பரிசளிப்பு விழா, பாடசாலைத் தினம் போன்றவற்றிற்காக அவசர அவசரமாகச் சிறுவர் நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனைவிட தமிழ்த் தினப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காகச் சிறுவர் நாடகங்கள் பாடசாலைகளில் பழக்கப்படுகின்றன.

அண்மைக் காலத்தில் சிறுவர் நாடகவிழா என்ற போர்வையில் போட்டி மனப்பான்மையோடு சிறுவர் நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்திலும் பிள்ளைகள் கவனிக்கப்படுவதில்லை. பிள்ளைகளின் மனங்கள் விருப்பு வெறுப்புக்கள் ஆற்றல்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பெரியவர்களின் விருப்புகளுக்கேற்ப பிள்ளைகள் உறுக்கப்பட்டும், அடித்தும், கிள்ளப்பட்டும், பயமுறுத்தலுடன் ஒன்றைச் செய்வதற்காக வற்புறுத்தப்பட்டும் நாடகங்கள் பழக்கப்படுகின்றன.

பெரியவர்களும் ஆசிரியர்களும் தமக்கேற்ப இயைந்து வடிவமைக்கின்ற பொருளாகவே பிள்ளைகளை நினைக்கின்றனர். இந்தப் படிமுறைக்குள் அகப்பட்டுக் காணப்படும் ஆசிரியர்களையும் சிறுவர்களையும் மீட்டெடுத்து புதிய படிமுறைக்குள் கொண்டுவரும் பணி சிறுவர் அரங்கக் களப்பயிற்சிகளில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றது.

ஒரு ஆசிரியர் சிறார்களோடு பழகுவதற்கு ஏற்றதான மனநிலையை உருவாக்குதல், இந்தப் பயிற்சியின் முதற்செயற்பாடு. பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கின்றோம் என்ற மனப்பாங்கில் இருந்து மாறி பிள்ளைகளோடு சேர்ந்து செய்கின்றோம் என்ற மனப்பாங்கிற்குக் கொண்டு வருவதற்கு விளக்கவுரைகள், அரங்க விளையாட்டுக்கள், தாள அமைவிற்கு ஏற்றதான அசைவுகள், ஆடல்கள், பாடல்கள் குழுச் செயற்பாடுகள் என்பன சிறுவர் அரங்கப் பயிற்சிகளில் கற்றுத் தரப்படுகின்றன.

ஆசிரியர்கள் சிறிய பாடல்களை இயற்றப் பழகிக்கொள்கிறார்கள். இசை ஒன்றிற்கு ஏற்ப பாடல்களை எழுதி, தமக்குத் தெரிந்த இலகுவான மெட்டுக்களைப் போடுதல், பாடிப் பார்த்தல், பாடல்களுக்கேற்ப அசைந்து பார்த்தல், பாடல்களுக்கேற்ப காட்சிகளை அமைத்தல் என்று படிப்படியாக வளர்ந்து செல்லும் படிமுறையூடாகப் புதிதாகப் பலவற்றை உருவாக்க ஆசிரியர்கள் கற்றுக்கொள்கிறார்கள். எப்போதுமே ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் கற்பனை வளம் உள்ளவர்களாக, சிறந்த முறையில் தொடர்பாடும் ஆற்றல் உள்ளவர்களாக (குரல், உடல்) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றார்கள். இந்தத் திறன்களை சிறுவர் அரங்கப் பயிற்சி வழங்குகிறது.

சிறுவர் நாடகத்தைத் தயாரிக்கின்ற போது தயாரிக்கும் படிமுறை முக்கியம் என்று கூறுகிறார்கள். நாடகத்தைவிடத் தயாரிப்புப் படிமுறையே முக்கியம். பிள்ளை தன்னம்பிக்கையுடன் செயற்படுவதற்குரிய களத்தைத் தயாரிப்புப் படிமுறை வழங்கவேண்டும். இந்த வகையிலான களத்தை வழங்குவதற்கு ஆசிரியர்கள் அந்தக் களத்தில் நின்று அதனைத் தொட்டு உயர்ந்து கொள்ளவேண்டும். ஆடவதால் கிடைக்கும் ஆனந்தம் என்ன என்பதை ஆசிரியர்கள் புரிதல் அவசியம். பாடுவதால் ஏற்படும் பரவசம் என்ன என்பதை அவர்கள் உணர்தல் வேண்டும். அதன் மூலமே அவரால் சிறுவர்களுக்குரியதான படைப்பாக்கக் களத்தை உருவாக்க முடியும். பல களப்பயிற்சிகளை நடத்திய போது முதல் முறையாக ஆடிய ஆசிரியர்களைப் பார்த்திருக்கின்றோம். அதில் அவர்கள் அடைந்த ஆனந்தத்தை உணர்ந்திருக்கின்றோம்.

சிறுவர் அரங்கு விநோதமானதாக, கற்பனையானதாக, வியப்பானதாக அமைய வேண்டும் என்பார்கள். அதற்கேற்ற கதைகளைத் தெரிவுசெய்தல் அவசியம். மிருகங்கள், பறவைகள், மரங்கள் என்று அமைவதான கதைகள் அதிகமாகச் சிறார்களால் விரும்பப்படுகிறது. இதனால் அறிந்த தெரிந்த கதைகளை அடிப்படையாக வைத்து எழுத்துருவொன்றினை எவ்வாறு உருவாக்கலாம் என்ற பயிற்சிகளும் சிறுவர் அரங்கப் பயிற்சிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தெரிந்த கதைகளை, கர்ண பரம்பரையாகக் கேட்கப்பட்ட கதைகளை மாற்றக்கூடாது என்று பல ஆசிரியர்கள் நினைப்பதுண்டு. அவ்வாறு இறுக்கமாக நினைக்கத் தேவையில்லை. தற்போதைய சிறுவர் கல்வியில் நல்லவற்றை, நேரானவற்றைச் சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். அதற்காக எம்மிடமுள்ள கதைகளில் மாற்றங்களைச் செய்யலாம். அவ்வாறு மாற்றப்பட்ட கதைகள் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு நாடகம் உருவாக்கப்படும். குழுக் கலந்துரையாடல்கள் மூலம் இது சாத்தியமாக்கப்படும். இங்கு பங்குபற்றுகின்ற எல்லோரும் எழுதவார்கள். மீண்டும் மீண்டும் தமக்குள் பேசிக்கொள்வார்கள். பலரது கருத்துக்கள் அடங்கிய ஒரு  பொதுவான எழுத்துருவை உருவாக்கிக் கொண்டு நாடகம் நடிக்க ஆரம்பிக்கப்படும். ஆசிரியர்கள், சிறுவர் நாடகங்களில் பாத்திரங்களை ஏற்று நடடித்திருக்க வேண்டும். ஒரு ஆசிரியர் சிறுவராகிப் பின் பாத்திரமாக மாறவேண்டும் என்பத நிபந்தனை இதனால் களப்பயிற்சியில் பங்கு பற்றும் ஆசிரியர் இரண்டு தள நிலையிலும் தன்னை நிறுத்துவார்.

சிக்கல்களையும் சாதகமான நிலைமைகளையும் புரிந்துகொள்வார். செயற்படுவதால், பயிற்சியின் முழுச் செயற்பாடுகளையும் அவரால் சிறப்பாக உள்வாங்க முடியும். இந்தப் படிமுறையில் பல ஆசிரியர்கள் தங்களிடம் காணப்பட்ட பயம், சபைக் கூச்சம், பேசுவதில் இருந்த தடங்கல், உணர்வு வெளிப்பாட்டுத் தடல்கல்கள் என்பன நீங்கியதாகச் சொன்னார்கள். தங்களில் அதிக நம்பிக்கை உடையவர்களாக, சிறுவர்களைப் புரிந்து கொள்ளும் மனநிலையைப் பெற்றவர்களாக இருப்பதாக உணர்ந்தார்கள்.

நான்கு நாள்கள் அல்லது ஐந்து நாள்கள் நடைபெறுகின்ற சிறுவர் அரங்கக் களப் பயிற்சிகளில் ஆசிரியர்கள், ஒரு நாடகத்தை எழுதித் தயாரிக்கக் கற்றுக் கொண்டிருப்பார்கள். களப்பயிற்சியின் இறுதி நாளன்று தாம் தயாரித்த நாடகங்களைப் பார்வையாளர்களுக்காக மேடையேற்றுவார்கள். பார்வையாளர்களின் முன்பாகத் தாம் நாடகம் ஒன்றை நடித்திருக்கின்றோம் என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கு ஒரு மிடுக்கைக் கொடுக்கிறது. இந்த மிடுக்கோடு தொடர்ந்து சிறுவர் அரங்க களப்பயிற்சிகள் தமக்கு நடத்தப்படவேண்டும் என்றும் சிறுவர் நாடகங்களில் நடிக்கின்ற வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தாருங்கள் என்றும் கேட்டார்கள்.

ஆளணிப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, நேரமின்மை, அதிகாரிகளின் கவனமின்மைகள் என்பவற்றால் அவர்களின் விருப்புக்கள் நிறைவேற்றப்படாமலேயே போய் விடுகின்றன.

யாழ்ப்பாணத்தில் சிறுவர் அரங்கு தொடர்பான கருத்தரங்குகள் களப்பயிற்சிகள், கலந்துரையாடல்களை ஆசிரியர்கள் மத்தியில் யாழ். செயல்திறன் அரங்க இயக்கம் யாழ். மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதற்குப் பிரதான வளாளராகக் குழுந்தை ம.சண்முலிங்கம் விளங்குகின்றார். சிறுவர் அரங்க முயற்சிகள் மேலும் பல்கிப் பெருகி நடைபெறவேண்டும். இதற்கு அரங்க நிறுவனங்கள் பல தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.logo-flat.jpg

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: