Theva

அமுங்கிய மௌனங்களை உடைத்த பங்களிப்பும் குழந்தைக்கே உரியது.

In பொது on ஒக்ரோபர்14, 2007 at 7:04 முப

‘நாடக வழக்கு’ நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் சபா ஜெயராசா

saba-jayarajah.jpg

நாடக வழக்கு நூல் வெளியீட்டு விழாவில் ஆய்வுரை நிகழ்த்திய யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களது உரை வருமாறு:

குழந்தை சண்முகலிங்கம் அவர்களது அரங்கியற் கட்டுரையாக்கங்களும், நேர்காணல்களும் தனித்த ஒரு தொகுப்பு நூலாக இணுவில் கலை இலக்கிய வட்டத்தினரால் – கந்தையா ஸ்ரீகணேசன் அவர்களது முயற்சியினால் – வெளியிடப்பட்டுள்ளமை அறிக்கை நோக்கிலும், ஆய்வு நோக்கிலும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளதொரு புலமை நடவடிக்கையாகும்.

இலங்கையின் அரங்கியல் வளர்ச்சியில் ஆறுமுக நாவலர் பற்றிக் கூறப்பட்ட கருத்து (குழந்தை சண்முகலிங்கம் அவர்களாற் கூறப்பட்டது அன்று) இச்சந்தர்ப்பத்திற் குறிப்பிடப்படவேண்டியுள்ளது. அதாவது, புரெட்டெஸ்தாந்தினரது செல்வாக்கு ஆறுமுக நாவலரிடத்து காணப்பெற்றமையால் அவர் யாழ்ப்பாணத்திலே கூத்துக்கலையை வளர விடாது தடுத்தார் என்று அரங்கியலாளர் சிலரால் முன்வைக்கப்படும் கருத்து மீளாய்வுக்கு உரியது. கூத்து உள்ளிட்ட கவின்கலைகளின் வளர்ச்சியில் ஆறுமுக நாவலர் நேரடியாகப் பங்கு கொண்டமைக்குப் பின்வரும் சான்றுகள் உள்ளன.

1. தேவாரங்கள் பாடும் பொழுது வட இந்திய இசைக்கருவியான சாரங்கியை அவர் பயன்படுத்தினார்.

2. வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவியமையைத் தொடர்ந்து கோப்பாயிலும், இணுவிலிலும் சைவப் பிரகார வித்தியாசாலைகளை அவர் ஏற்படுத்தினார். இணுவிலில் நிறுவப் பெற்ற சைவப் பிரகாசவித்தியாசாலை முன்றலில் அவர் காலத்தில் வாழ்ந்த அண்ணாவியார் கதிர்காமர் என்பவரைக் கொண்டு பல கூத்துக்களை மேடையேற்றுவதற்குத் தூண்டுதல் வழங்கினார். ஆனால் பெண்கள் மேடையேறிக் கூத்தாடுவதற்கு அவர் அனுமதி வழங்கவில்லை. மாறாக பெண் பாத்திரங்களை ஆண்களே புனைந்து ஆடவேண்டும் என்பதும் அவரால் வற்புறுத்தப்படுகின்றது. (அண்ணாவியார் கதிர்காமரின் பேரன் சுப்பையா அவர்கள் இந் நாட்டின் பரத நடனத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது)

3. ஆறுமுக நாவலரின் சகோதரரே அக்காலத்தில் ஒரு சிறந்த கூத்துக் கலைஞராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட குறிப்புக்களோடு குழந்தை அவர்களின் அரங்கியல் அறிகையை நோக்க வேண்டியுள்ளது.

குழந்தை அவர்களது அரங்கியல் அளிக்கை ஒரு தனித்த நிகழ்ச்சி (single event) அன்று. எமது சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு என்ற அனைத்தினதும் இடை வினைகளை உள்ளடக்கிய பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட ஆற்றல்மிக்க விசை என்று குறிப்பிடுதலே பொருத்தமானது. அந்த விசைகளைத் தழுவிய அறிகை வெளிப்பாடுகளாக அவரது கட்டுரையாக்கங்கள் எழுந்துள்ளன.

தொன்மையான கிரேக்கச் சிந்தனைகளும் அவற்றோடு இணைந்த அரங்கியலும் பற்றிய ஆழமான உசாவலை இவர் மேற்கொண்டுள்ளார். உலக நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கிய கிரேக்கத்தின் அறிவியலோடும், அரசியலோடும் அரங்கு கொண்டிருந்த தொடர்புகளையும், அவற்றை அடியொற்றிய துன்பியற் புனைவுகளையும் நோக்கும் பொழுது தோன்றும் இவரது புலக்காட்சிகள் இதுவரை வெளிப்படுத்தப்படாத மாற்றுவகையான துலங்கல்களைக் கொண்டுள்ளன. பொதுவாக ஒரு நாடு உறுதியும் பலமும் பெற்றிருக்கும் துன்பியல் சுவை முன்னெடுக்கப்படுதலும் நாடு நலிவுற்றுள்ள வேளை நகைச்சுவை மேலோங்குதலும் குறிப்பிடக்கூடிய நிகழ்ச்சிகளாகும். ஆங்கில இலக்கிய மரபிலே தோன்றிய Happy ending novels மேற்கூறிய பண்பைத் தெளிவுபடுத்தும்.

shanmugalingams-book-relise.jpg

எறிக் புறோமினுடைய ஆளுமை வகைப்பாடு ‘வாழ்க்கை நயப்பினர்’, ‘வாழ்க்கை வெறுப்பினர்’ என்ற அமைப்பியலைக் குறிப்பிடுகின்றது. குழந்தை அவர்களும் அவர்களைச் சூழ்ந்த அரங்கியலாளர்களும் மேற்கூறிய வகைப்பாட்டில் வாழ்க்கை நயப்பினராக உருவாக்கம் பெறும் கோலங்கள் அவரின் எழுத்தாக்கங்களிலே விரவியுள்ளது. மாறாக, வாழ்க்கை வெறுப்பினர் அன்னியமாகும் கோலங்களில் இருந்தே கலையழகு முகிழ்த்தெழுவதாகக் கொள்வர்.ஒடுக்குமுறையும், ஒடுக்குமுறைக்குக் கருவிகளாகப் பயன்படுத்தப்படும் கல்வியும் கலை இலக்கியங்களும் சமூகத்தில் அடங்கியிருக்கும் ஒரு மௌனப் பண்பாட்டை (culture of silence) உருவாகிக் கொண்டிருக்கும் என மோலோ பிறேரி தமது எழுத்தாக்கங்களைக் குறிப்பிட்டுள்ளார். இத்தகையதொரு மௌனப் பண்பாடு எமது சூழலிலும் காணப்பட்ட வேளை  முரண்பாடுகளின் அடிப்படையாக எழும் இடை வினைகளை (Interactions)  அரங்கியலிலே துல்லியமாக வெளிப்படுத்தி, அமுங்கிய மௌனங்களை உடைத்த பங்களிப்பும் குழந்தை அவர்களுக்கே உரியது.

அரங்கை ஒரு பலமிக்க பல தள வழிமுறையாக (means)  விசையுடன் பயன்படுத்திய குழந்தை அவர்கள் தமது சுயபடிமத்தை மௌனமாகவே வைத்துக் கொண்டார். பல தளங்களில் பன்மை (Plural)  நோக்குடன் அரங்கை அவர் முன்னெடுத்தமையையும் மதிப்பீடுகள் மேற்கொண்டமையையும் இந்நூலில் இடம்பெற்றுள்ள 16 கட்டுரைகளும் தரும் புலக்காட்சிகளாகவுள்ளன.

எமது பண்பாட்டுக்கும் எமது சூழலுக்குமுரிய பொருத்தமான அரங்கை (Appropriate Theatre) உருவாக்குவதற்குரிய முனைப்பு அவரது அரங்கியல்  நிலையில் முன்னைய கட்டுமானங்களை குலைத்து மீள்கட்டுமானத்தை முன்னெடுத்துள்ளார். இவ்வாறு செய்யும்பொழுது ஒரு வித ஒருங்கிணைப்புத் தருக்கம் (Dialectics of Integration) அவரிடத்துக் காணப்படுகின்றது. இந்த தருக்கத்தினது அல்லது இயங்கியலினது அடிப்படையாகவே குழந்தை அவர்களது பரிசோதனைகளும், பரிசோதனைக் கருத்துக்களும் முகிழ்த்தெழுகின்றன.

ஒருங்கிணைப்பிலும், பரிசோதனைகளிலும் கலைப் பண்புகளையும் எதிர்க்கலைப் (Anti-Art) பண்புகளையும் அவர் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்கின்றார். இவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கும்பொழுது அவருடைய தனித்துவத்தை இனங்காணக் கூடியதாகவுள்ளது. குழந்தை அவர்களது அரங்கியல் சார்ந்ததனித்துவம் அரங்கை அவர் உணர்வுள்ள இயக்கமாக (Theatre as spirit) உருவாக்குவதிலிருந்தும் அழகியல் மூலகங்களாக சில மாயைத் தோற்றங்களைப் (Aesthetic illusions) புனைவதிலிருந்தும் வெளிப்படுகின்றது. இந் நிலையில் ஒத்திசைவும் ஒத்திசைவை மீறலும் (Homony and Dissonce) என்ற இரு நிலைப் பாங்கு சார்ந்த இறுக்கம் அவரிடத்தே எழுகின்றது. அவரது அரங்கியற் பார்வை ஆழ்ந்து செழுமை கொண்ட பழைமையிலே தோய்வதும், பழைமையின் இடைவெளியைக் கடந்து நவீனத்துவத்தின் சுவடுகளைத் தொடுவதும் என்ற இருநிலை வீச்சுக்களைக் கொண்டதாக அமைகின்றது. மேற்குறித்த இருநிலை கூட்டு உள்ளடக்கத்தை (collective content) அரங்கியல் ஆய்விலும், ஆற்றுகைகளிலும் முன்னெடுத்துள்ளார்.

இந்நிலையில் அவருக்குரிய அரங்கியல் சார்ந்த தனித்துவம் சமூகத்தோடு இணைந்து செல்வதும் சமூகத்திலிருந்து ஒருகணம் விடுபட்டுத் தனித்துவமாகச் சுயாதீனம் (Autonomy)  கொள்வதும் என்ற பரிமாணங்களைப் பெறுகின்றது. ‘வாழும் காலம் என்பது மனித வரலாற்றுக் காலம்| என அவர் தரும் விளக்கம் சமகாலத்துடன் இணைவதையும் மறுபுறம் அதிலிருந்து புறவயமாக விடுபடுவதையும் எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலையில் அவரது அசைவுகள் அரங்கினுக்கு வாழ்வையும், வாழ்க்கைக்கு அரங்கினையும் கொடுத்துவிடுகின்றன. அரங்கின் வழியாக அவர் முன்னெடுக்கும் தொடர்பாடல் அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கும் நம்பிக்கையிலிருந்து தேடலுக்கும் அசைந்து வருகின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: