Theva

மக்கள் மௌனமாகச் சொல்லியதை ‘முடக்கம்’ மேடையேறிக் கூறிவிட்டது.

In விமர்சனம் on ஒக்ரோபர்2, 2007 at 6:45 முப

தேவானந்தின் நாடகம்
பற்றிய ஓர் அலசல்

நீடித்து வந்த யுத்தம் ஒரு கணம் ஓய்ந்துள்ளது. ஆனால் குண்டுகள் துளைக்காத மனித வடுக்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இழக்கப்பட்ட பெறுமதிகள் எவையெனப் புரியாமல் திணிக்கப்பட்டு வருகின்ற இன்னொரு வாழ்க்கைமுறை! இந்த இடைவெளிக்குள், உள்நுழைந்து, உருப்படியற்ற திட்டங்களை நிறைவேற்ற எத்தனையோ முதலீட்டாளர்கள்.  முடியவில்லை மக்களால் திரும்பிப்பார்ப்பதற்கு. எங்கோ ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்! ஆனால் எங்கிருந்தோ வருவார்கள். எம் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வாளர்கள், திட்டங்களை அமுல்படுத்துவார்கள்.  கோடிக்கணக்கான டொலர்கள் அள்ளியிறைக்கப்படும். ஆனால் மக்கள் வாழ்வு? “பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்”  என மக்களின் அவலம் தொடர்கதைதான்.  வறுமைக் கோட்டைக் கீறியவர்கள் இன்னமும் அதனை அழிக்க விரும்பாத பேரவலம்.

இவையொரு புறமிருக்க, படைநகர்த்தலின்றி முற்றுகைகள் இன்றி, கைதுகள் காணமால் போதல்கள் இன்றி – இன்னுமொரு யுத்த அவலம் தொடர்கிறது. அது புதைக்கப்பட்ட மிதிவெடிகளால் தொடர்ந்து வருகின்ற இழப்புக்கள்.  இதனால் யாருக்கென்ன கவலை.? பாதிக்கப்படுவது வறுமைக் கோடு கீறப்பட்டுவிட்ட குடும்பங்கள்தானே. யுத்தம் என்றாலும் அதன் வீச்சு இவர்களைத்தான் தாக்கும். இப்போ மட்டுமென்ன தப்பிவிட்டார்களா!  பொருளாதாரத் தடையில் யாழ் குடாநாடு முற்றுகையில் கிடந்த போது விறகு கட்டியிழுத்த துவிச்சக்கர வண்டிகள் என்ன ஓய்ந்து விட்டனவா? இன்னமும் அவர்களின் வாழ்க்கை அப்படியேதான்.  ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்யும் திட்டங்கள் எல்லாம் இவர்கள் மீதான தேவைப் பகுப்பாய்வின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன.  அவற்றிற்கு என்ன நடந்து விட்டது?

மேற்குறித்த சிந்தனா வேகத்தின் ஒரு பகுதியை குறுக்கு வெட்டுமுகமாகக் காட்ட விளைகிறது ‘முடக்கம்’ எனும் நாடகம்.  செயல்திறன் அரங்க இயக்கத்தினால் மிதிவெடி அபாயக் கல்விச் செயற்பாட்டிற்காக ஆற்றுகை செய்யப்பட்டு வருகிறது இந்நாடகம்.  பாடசாலைகள், கிராமங்கள் என பல தடவைகள் மேடையேறி மிதி வெடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த முடக்கம் நாடகம் சில தடவைகள் நாவலர் கலாசார மண்டபத்திலும் மேடையேற்றப்ப்ட்டமை இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பாடசாலைகள் கிராமங்களில் களம் தேடிய ஆற்றுகையாளர்கள் ஏன் நகர மத்தியில் நாவலர் கலாசார மண்டபத்தைக் களமாகத் தேடினார்கள். காரணம் பல இருக்கலாம்.  ஆயினும் குறிப்பாக ஒன்றைக்  கருதவேண்டியிருந்தது. மிதிவெடி அபாயக் கல்விய+ட்டலில் இருந்து சற்றே விலகி எமது சமூகத்தின், தேசத்தின் சமாதான முற்றுகைக்குள் புகுந்து விட்டிருக்கின்ற மறைக்க முடியாத, மறுக்க முடியாத அவலங்களை அளிக்கை செய்து காட்டுதல் என்பது ஓர் நோக்காகக் கருதமுடியும்.  அங்கே பிரசன்னமாகின்ற அல்லது அழைக்கப்படுகின்ற பார்வையாளர்களும் மிதிவெடிகள் வெடிபொருட்கள் பற்றி அறியப்பட வேண்டியவர்கள் அல்லர். பொதுவாகவே சமூகம் மீதான பிரக்ஞை கொண்டவர்களின் முகங்களே அங்கு தெரிந்து கொள்வது உண்மை தான்.  இவர்கள் மத்தியில் ‘நல்ல நாடகம்’ போட்டோம் என ஆற்றுகையாளர்கள் திருப்திப்படலாம். ஆனால் உண்மை அதுவல்ல. ஏற்பட வேண்டிய திருப்தியும் அதுவல்ல.

சுமார் நாற்பது நிமிடங்கள் ஆற்றுகை செய்யப்பட்ட இந்நாடகத்துள் பெரும்பகுதி மகிழ் நெறியாகவே (கோமாளித்தனத்துடன்) கழிந்ததாகவே பலர் கருதலாம். அங்கே ஆற்றுகையாளர்களின் அதீத திறன்கள் இந்நிலமையை ஏற்படுத்தியிருக்கலாம்.  ஆனால் அந்த மகிழ்நெறி/நகைச்சுவைச் செயலியக்கங்களிற்குள் புதைந்து போய்க் கிடந்த அவலங்களே மிகப் பேரவலங்கள்.  நாம் எம்மைப் பார்த்தே வாய்விட்டு நகைக்கப் பழகிவிட்டோம்.  நாம் சுமந்து விட்ட அவலங்கள் எல்லாமே இப்போ சிரிப்புக்கிடமாகிவிட்டன. பல இடங்களில் மேடை யேற்றப்படுகின்ற நாடகங்களில் யாழ் குடாநாட்டின் பாரிய இடப்பெயர்வு காட்சிப் படுத்தப்பட்டு வரும.; அவ்வேளையிலும் வாய்விட்டுச் சிரிக்கத் தயாராக இருந்தார்கள் பார்வையாளர்கள்.  இதற்கும் உளவியலாளர்கள் பல பாடவிதானங்களை முன்வைப்பார்கள். எல்லாம் நல்ல விளைச்சலும் அறுவடையும் உடையவைதான்.

‘முடக்கம்’ ஒரு இளம் குடுமபத்தின் வாழ்வியல் முரண் நிலைகளை சிறுகதைப் பின்னலூடாக விளக்குவதோடு தொடங்குகிறது, தொடர்கிறது. அந்த அப்பாவிக் குடும்பத்தின் மீதான யுத்தத்தின் தொடர் வடுக்களாக கால் ஒன்றை இழக்கிறான் குடும்பத்தலைவன்.  தொடர்ந்து வருபவை மிதிவெடி வெடிபொருட்கள் தொடர்பான ஓர் பிரச்சாரப் பாணியிலான காட்சிப்படுத்தல்கள். ஆனால் இந்த நிஜ/யதார்த்தப் பாங்கிலான காட்சிகளின் தொடர் வருகையாக விமர்சனப் பாங்கிலான காட்சிகள் அமைந்து கொள்கின்றன.  இதற்கு கைகொடுப்பது நகைச்சுவை நடிப்பின் தேர்ச்சிகள். மக்களின் மன நிலைகளை, அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்த இதுவும் ஒரு தகுதியான வடிவம்.

இங்கேதான் நாடகம் இன்னொரு பரிமாணம் எடுக்கின்றது.  தெட்டத்தெளிவாக, புண்பட்ட மக்களின் குரலாக நாடகம் சிலவற்றையாதல் பேச முனைவது கவனிக்கப்பட வேண்டியது. அதிகாரமுடைய மேலதிகாரிகளின் (ஐயாமணி ஐயா, நல்ல மேய்ப்பன் என நாடகத்தில் குறிப்பிடப்படுபவை) செயற்பாடுகளில் அமுலாக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களும், அவற்றின் அமையச் செலவுகள் தொடர்பான மக்களின் பார்வைகளும் – வயிறு குலுங்கும் சிரிப்புடன் பார்த்து ரசிக்கப்படும்.  அரங்கியற் தொழில் நுட்பங்களே மிஞ்சிவிட்டிருக்கின்ற இந்நெறியாளரின் ஏனைய நாடகங்கள் போலல்லாது சற்றே விலகி நடிகர்களின் நடிப்பில் நம்பிக்கை வைத்து தயாரிக்கப் பட்ட நாடகம் என்பது போல் தோற்றமளிக்கிறது. அவர்கள் நன்றாக நடிப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

mudakkam.jpg

பொதுவாகவே மக்கள் மத்தியில் மேற்படி நாடகம் கூறிய/விமர்சித்த கருத்துக்கள் தொடர்பான ஒரு கொதிப்பு நிலமையை பரவலாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அரசியலில் இருந்து வியாபாரம் வரை மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.  நாடகத்தில் மிதிவெடி அகற்றல் தொடர்பான திட்டம் பற்றி அலசி ஆராயப்பட்டிருப்பினும், அது குடாநாட்டின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அலசி ஆராய்தலாகவே இருக்க வேண்டுமெனக் கருதலாம்.  அதில் தவறுமில்லை.  மேற்குறித்த நிலை தொடர்பாக படித்தவர் முதல் பாமரர் வரை அலசுகிறார்கள், ஆராய்கிறார்கள், வாய்க்கு வாய் வந்த படியெல்லாம் கதைக்கிறார்கள்.  இப்போது காதோடு காதில்லாமல் மேடையேறியும் பேசியாயிற்று.  அதனை ‘முடக்கம்’ செய்து விட்டது.  இனியென்ன!

வாய்கிளியப் பிதற்றுகின்றோம். ஆனால் தட்டிக் கேட்டு, உரசிப்பார்த்து, உப்புப்புளி பார்க்குமளவிற்கு மக்களைக் கொண்டு வராதவிடத்து என்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது.  கைகளை உயர்த்திக் காட்டி மக்கள் பங்களிப்பு என அறிக்கைகள் விடும் திட்டமிடல்களிற்கு எல்லாம், இன்னமும் நாற்று மேடையாக எமது சமூகம் இருப்பதா? இதனை, சமாதானச் சூழலைச் சங்கு ஊதிக் கெடுப்பது எனப் பொருள் கொள்ளத்தேவையில்லை.

எமது இருப்பிடங்களையும் எமது தேசத்தின் வளங்களையும் எமது கைக்குள் நாம் பெறாதவரையில் எமக்கு உலைவைக்க இன்னொருத்தர் இருக்கும் நிலை மாறி விடாது.  முடங்கிக் கிடக்கின்ற மக்களின் முனகல் ஒலி தன்னும் வெளியே கேட்க இன்னொரு கட்ட நகர்வை செயலாளிகள் மேற்கொள்ள வேண்டும்.  ஏனெனில் இந்த நாடகம் கூட ‘நல்ல ஒரு திட்டம்’ என்ற அவலத்துக்குள் மூழ்கிவிடாமல் இருத்தல் வேண்டும்.  இல்லையேல் இன்னொரு திட்டம் வகுக்க பல்லாயிரம் ஐயாமணிகள் இங்கே அலை மோதுவார்கள். எம்மிற் பலர் மக்களின் பிரச்சினையை அலசி ஆராய்ந்து கொண்டேயிருப்பார்கள்.  மீண்டும்…………. மீண்டும்…………

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: