Theva

செய்திகள்

தமிழ் இலக்கிய விழா

வடக்கு – கிழக்கு மாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு நடத்திய தமிழ் இலக்கியப் பெருவிழா கடந்த ஒக்ரோபர் மாதம் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நடந்தது. முத்தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடகத்துறை சார்ந்த நிகழ்வுகளும் துறை சார்ந்தோருக்கு விருது வழங்கிக் கௌரவிக்கும் நிழகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாளில் முள்ளியவளை தமிழ் வித்தியாலய மாணவர்கள் வழங்கிய ‘பண்டாரவன்னியன்’ நாட்டுக் கூத்தும் யாழ். திருமறைக் கலாமன்றம் வழங்கிய சத்திய வேள்வி இசை நாடகமும் நிகழ்த்தப்பட்டன.

இரண்டாம் நாள் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களும் கன்னங்குடா மரபு வழிக் கூத்தக் கலைஞர்களும் இணைந்து கூத்து லயம் எனும் ஈழத்தமிழ்க் கூத்துக்களின் ஆடல், பாடல், லயம், மோடி தொடர்பான விளக்கவுரை ஆற்றுகையைச் செய்து காட்டினர். அத்தோடு வயாவிளான் ம.ம.வி. மாணவர்களின் ‘குருபக்தி’ தாளலயக் கதையும் வட்டுக்கோட்டை நாட்டுக் கூத்து அபிவிருத்திக் குழுவினரின் வடமோடிக் கூத்தும் இடம்பெற்றன.

மூன்றாம் நாள் – கலாநிதி நடிகமணி வி.வி.வைரமுத்து அரங்கில் – பாரம்பரிய மேம்பாட்டுக் கழகம் வழங்கிய நாடக மேடைப்பாடல்களும் இடம்பெற்றன. நாடக இலக்கியத்திற்கான சிறப்பு விருதுகள் தே.தேவானந்தின் ‘நெஞ்சுறுத்தும் கானல்’ எனும் நாடக நூலுக்கும் அருணா செல்லத்துரையின் ‘பண்டார வன்னியன் குருவிச்சி நாச்சியார்’ நூலுக்கும் ஞா.ஜெயரஞ்சினியின் ஈழத்து அரங்கில் பெண் என்ற நூலுக்கும் வழங்கப்பட்டன. அத்தோடு, ஈழத் தமிழ் நாடக உலகின் தாய் குழந்தை ம.சண்முகலிங்கம் ஆளுநர் விருத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனினும் அவர் அந்த விருதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தேசிய நாடக விழா -2004

கலாசார அலுவலர்கள் திணைக்களம் மற்றும் இலங்கைக் கலைக்கழகம் தேசிய நாடக சபையின் ஏற்பாட்டில் தேசிய நாடக விழா 2004, டிசெம்பர் 02ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை கொழும்பு, ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கில் நடைபெற்றது.

sellathurai-3.jpgஇந்த விழாவில் 2003ஆம் ஆண்டு அரச குறுநாடக விழாவில் தெரிவான காமினி ஜெயக்கொடியின் ‘நிவன் யனகங்’, லசந்த பிரான்ஸிசின் ‘கோச்சிய எனகங்’, சஞ்ஜீவ உபேந்திராவின் ‘ரோசமல’ ஆகிய நாடகங்களும் 200ம் ஆண்டு அரச நாடக விழாவில் தெரிவான சிறந்த நாடகமான சரத் கொத்தலாவலையின் ‘சூக்கரயெக சமக’ நாடகமும் மேடையேற்றப்பட்டன. இவற்றோடு, கே.மோகன்குமாரின் ‘வெள்ளைச் சிறகுகள் விரிகின்றன’, ஜெஹான் எலோய்சியஸ்ஸின் ‘த ரிச்சுவல்’, பொன் கிருஸ்ணமூர்த்தியின் ‘மனு விலங்கு’, ஜோன்சன் ராஜ்குமாரின் ‘கொல் ஈனும் கொற்றம்’ ஆகிய நாடகங்கள்  சிறப்பு ஆற்றுகைகளாக மேடையேற்றப்பட்டன.

மேலும் நாடக விழா – 2004இன் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான கீழ்வரும் நாடகங்களும் மேடையேற்றப்பட்டன. ஜெரோம் லெக்ஸ்மனின் ‘ஆயெத் என்னே நே’, ரிச்சர்ட் மான முதலியின் ‘சாகுந்தல’, சாமல் ரணசிங்கவின் ‘கலுச மனல்லு’, காவ்ய இந்திரஜித்தின் ‘குவேனி’ நாடகம், ருவன் மலிக் பீரிஸ் மற்றும் கலன ஜயநாத் குணசேகரவின் ‘தாச மல்லிகே பங்களாவ’ மக்கள சேனாநாயக்கவின் ‘யூலிமெனவிய’ பிரியங்கர ரத்நாயக்கவின் ‘ஈடியஸ்’ ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

1976ஆம் ஆண்டிற்குப் பின்னர் தற்போதுதான் தேசிய நாடக விழா நடந்திருக்கிறது. நாடகக் கலைஞர்களுக்கிடையில் போட்டி மனப்பாங்கை உருவாக்கி விருதுகளுக்காக கலைஞர்கள் முண்டியடிப்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடக விழாப் போட்டிகள் நடைபெறுகின்றன. நாடகப் போட்டியில் தமிழ் பகுதிகளில் இருந்து எந்தவொரு நாடகமும் பங்கு பற்றவில்லை.

வடக்கு – கிழக்கு நாடகக் கலைஞர்கள் பங்குகொள்வதற்கு வாய்ப்பான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. இதனை நிவர்த்தி செய்வதற்காக தேசிய நாடக சபை உறுப்பினர்களான கலாபூஷணம் கலைச்செல்வன், வ.ஆ.தங்கவேலாயுதம் (தேவரண்ணா) ஆகியோரின் முயற்சியால் வடக்கு, தலைநகர் போன்ற பகுதிகளிலிருந்து மூன்று தமிழ் நாடகங்கள் விசேட அழைப்பின் பேரில் மேடையேற்றப்பட்டன.

தேசிய நாடக சபை உறுப்பினர் கலாபூ~ணம் கலைச்செல்வன் அவர்களின் முயற்சியால் இம்முறை நாடக விழாவில் விளம்பர நோட்டீஸ் தொடக்கம் விழாவில் நாடக அறிவித்தல் வரை தமிழுக்கு முக்கியம் கொடுக்கப்பட்டதாக அறிகிறோம். இதற்கு முன் நடந்த நாடக விழாக்கள் சிங்கள நாடக விழாக்களாகவே நடைபெற்றன.

தேசிய நாடக விழாவின் விருது வழங்கும் வைபவம் 2004, டிசெம்பர் 19ஆம் திகதி ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலாசார, தேசிய மரபுரிமை பற்றிய அமைச்சர் கௌரவ விஜித ஹேரத், பிரதமர் மஹிந்த ராஜபக்~ ஆகியோர் கலந்துகொண்டனர். மஹிந்த ராஜபக்~ அவர்கள் பரிசில்களை வழங்கி கலைஞர்களைக் கௌரவித்தார்.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சிங்கள மூத்த கலைஞர் ஒருவருக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு நிகரான கௌரவம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடகத்துறையில் ஈடுபட்டு வரும் கலைஞர் நவாலியூர் நா.செல்லத்துரை அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு விருதுக் கேடயமும் ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது. நடிப்புத் திறமைக்காக திருமதி மணிமேகலை ராமநாதனுமும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2005 மார்ச் மாதம் அரச நாடக விழா ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிடப்படுவதாகவும் அறியக்கிடக்கின்றது.

‘பாஞ்சாலி சபதம்’ நாட்டிய நாடகம்

2004 ஆம் ஆண்டு ‘பாஞ்சாலி சபதம்’ நாட்டிய நாடகம் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட தமிழ்த்தினப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் இந்நாட்டிய நாடகத்தை நெறிப்படுத்தி இருப்பவர் பே.பிரியதர்சினி. பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’ நாடகத்தை தொகுத்து இருப்பவர் குழந்தை ம.சண்முலிங்கம். இந்நாடகத்திற்கான இசை அமைப்பை சக்திதேவி சிவகுமார் மேற்கொண்டுள்ளார். நட்டுவாங்கம் சு.பிரவாசினி. கொழும்பில் நடைபெற்ற போட்டியில் சான்றிதழ் வழங்கி கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பே.பிரியதர்சினி பிரபல நடனக் கலைஞர் சாந்தினி சிவநேசனின் மாணவி ஆவார். அண்மையில் நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த ‘ஆர்கொளோ சதுரர்’ நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று ஆடியவர். ‘ஆர்கொளோ சதுரர்’ நாடகம் நாட்டிய நாடகப் படைப்பாக்கத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் அரங்கக் களப்பயிற்சி

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் வருடந்தோறும் நடைபெறுகின்ற ஆசிரியர்களுக்கான சிறுவர் அரங்கக் களப்பயிற்சியினை நாடக அரங்கக் கல்லூரி நடத்தி வந்தது. இதில், செயல்திறன் அரங்க இயக்க அங்கத்தவர்களும் கலந்துகொள்வர். இந்த வருடம் 29.10.2004ஆம் திகதி தொடக்கம் 03.11.2004ஆம் திகதி வரை நடைபெற்ற இக்களப்பயிற்சியினை செயல்திறன் அரங்க இயக்கம் நடத்தியது.

ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இக்களப்பயிற்சியில் 105 ஆசிரியர்கள் பங்குபற்றினார்கள். பயிற்சியில் அரங்க விளையாட்டுக்கள், சிறுவர் பாடல்கள், பாத்திர அசைவுகளோடு கதைசொல்லல், எழுத்துரு எழுதுதல், எழுதிய எழுத்துருக்களை நாடகமாகத் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் நடைபெற்றன. அத்தோடு, செயல்திறன் அரங்க இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் ஜனகரளய ஆற்றுகைக் குழுவினரின் ஆற்றுகை ஒன்றும் இறுதிநாள் மேடையேற்றப்பட்டது.

ஏழு குழுக்களாகப் பிரித்து எழுதப்பட்ட எழுத்துருக்கள் ஏழும், நாடகங்களாக தயாரித்து இறுதிநாள் மேடையேற்றப்பட்டன. பார்வையாளராக முதலாம் வருட ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள்.

நாடகத்தை அரங்கேற்றுவதில் இறுதிநாள் ஆசிரியர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். சிறிய குழந்தைகள் போல் வீட்டில் இருந்து தமது பாத்திரத்திற்கு பொருத்தமான மிருகத்தினுடைய வால், செவி, உடை மற்றும் கைப்பொருட்கள் என்பவற்றைக் கொண்டு வந்திருந்தார்கள். அத்தோடு, பாத்திரத்திற்கு ஏற்ற ஒப்பனைகளை தமக்குத்தாமே மேற்கொண்டார்கள்.

ஆபத்திற்கு உதவுவோம், வீரச்சிறுவன் யம்போ, ஆபத்தை விலக்குவோம், உயிர்களிடத்தில் அன்பு, உறவுகளை வளர்ப்போம், ஒற்றுமையே பலம், குட்டிஆடாரும் குள்ளநரியும் ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

கூட்டாஞ்சோறு நிகழ்வில் தெருவெளி அரங்காற்றுகை

கிராமங்கள் தோறும் பல முன்னேற்றச் செயற்பாடுகளில் முனைப்புடன் செயற்பட்டு வரும் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் மற்மோர் முயற்சியாக பின்தங்கிய கிராமங்களின் தேவைகளைக் கண்டறியும் நோக்கிலே ‘ஊரோடு உறவாடுவோம்’ என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெறுமனே கலந்துரையாடல் ஊடாகவோ, கூட்டங்கள், சந்திப்புக்கள், கருத்துப் பரிமாற்றங்கள் மூலமோ மக்களின் தேவைகளைக் கண்டறிதல் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. இதனை நிவர்த்தி செய்ய மக்களோடு மக்களாகி மக்களின் தேவைகளைக் கண்டறிவதற்கு அரங்கைப் பிரயோகித்தது இங்கு முக்கியமாகக் கவனத்திற் கொள்ளத்தக்கது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தில் பெண்கள் அபிவிருத்திப் பிரிவினரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு புதியதொரு அரங்க ஆற்றுகை வடிவத்தையும் வெளிக்கொணர்ந்தது.

இதில் செயல்திறன் அரங்க இயக்கம் தெருவெளி ஆற்றுகை ஒன்றை ஒழுங்குபடுத்தி அரச ஊழியர்களது அசமந்தப் போக்கும், சமூகத்தின் பொறுப்பானவர்களின் பொறுப்பற்ற தன்மைகளும் வெளிவருவதற்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இதனை இனம்கண்ட மக்கள் ஆற்றுகை என்பதனையும் மறந்து தங்கள் ஆதங்கங்களை மனம் திறந்து வெளியிட்டனர். இந்நாடகம் 6.11.2004, 15.11.2004, 19.11.2004 ஆகிய திகதிகளில் கரம்பைக் குறிச்சி, நாவற்குழி கைதடி, கோவிலாக்கண்டி கைதடி ஆகிய இடங்களில் போடப்பட்டது.

அழகெழல்-விழா.

பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் உயிர்ப்பான கற்றலுக்கும், ஆளுமை வெளிப்பாடுகளுக்கும் அழகியல் துறைகளான சித்திரம், சங்கீதம், நடனம், நாடகம் என்பன உந்துதல் அளிக்கின்றன. இவற்றால், மாணவர்களின் திறமைகள் படைப்பாற்றல்கள் வெளிப்படுகின்றன.

இந்த வகையில், யாழ் மாவட்டப் பாடசாலை மாணவர்களிடையே சித்திரம், கிராமிய நடனம், தனிநடிப்பு, சிறுவர் நாடகம், ஆசிரியர்களுக்கான ஓவியப்போட்டி என்பனவற்றை தேசிய கல்வியியல் கல்லூரி நுண்கலை மன்றம் அண்மையில்  நடத்தியது. இப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட கலைகள், கலைஞர்களுக்கான பரிசளிப்பு விழாவினையும் கண்காட்சியையும் 05.09.2004 அன்று அழகெழல் என்ற பெயரில் கல்லூரி நடத்தியது.

இந்த விழாவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தனிநடிப்பு, கிராமிய நடனம், சிறுவர் நாடகங்கள் ‘அழகெழல்’ விழாவில் மேடையேற்றப்பட்டன. வெற்றி பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் அந்தந்தத் துறை சார்ந்தவர்களால் சான்றிதழ்கள், சிறப்புச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் கலந்துகொண்ட பெரும்பாலான நாடகங்கள் மிகவும் சிறப்பானதாகவும், தரமானதாகவும் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் போட்டி என்ற அடிப்படையில் முதல் மூன்றிடத்தைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தின் பேரில் தெரிவுகள் இடம்பெற்றன.

சிறுவர் நாடகத்தில் நெல்லியடி மெ.மி.த.க. பாடசாலை, அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம், யாழ் நவாலி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றி பெற்றன. தனிநடிப்பில்  தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி, சென்Nஐhன்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார்கள். ஒரு சில மாணவர்கள் சில காட்சிப் பொருட்களைப் பயன்படுத்தி மிகச் சிறப்பாக தனிநடிப்பினை ஆற்றுகை செய்தார்கள். 

சிறுவர் அரங்கில் வெற்றியீட்டுகின்ற நாடகங்களைத்தயாரிக்கின்ற ஆசிரியர்கள் ஏதோவொரு வகையில் சிறுவர் அரங்கு தொடர்பான பயிற்சி பெற்றவர்களாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அழகெழலில், பிரதம விருந்தினராக திரு சு.தியாகலிங்கம்  (செயலர்,  கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு கிழக்கு, சிறப்பு விருந்தினர்களாக திரு க.பாலசுப்பிரமணியம்  (உதவிப் பொதுமுகாமையாளர் வடபிராந்தியம்),  கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம்  (தலைவர்,  நாடக அரங்கக் கல்லூரி)  ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

ஓவியப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரினதும் கைவண்ணங்கள் மண்டப வெளிச் சுவரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ்வாக்கங்கள் ஒவ்வொன்றும் தற்கால சூழலையும் கடந்த காலத்துப் போரின் தாக்கங்களையும் உணர்வுடன் பிரதிபலிப்பனாக இருந்தன.

அழகெழல் மண்டபம் அனைத்துப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், துறைசார்ந்தோரால் நிறைந்திருந்தது. இப்படியான அரிய சந்தர்ப்பங்களை நாம் இழந்துவிட்டோமே என மண்டபத்தில் இருந்து ஒரு சிலர் ஆதங்கப்பட்டதைக்கூட அவதானிக்க முடிந்தது.

தற்கால நவீன கல்விச் சீர்த்திருத்தத்திற்கேற்ப தேவையை உணர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் பலர் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்காலச் சந்ததிக்கான அத்திபாரம் பலமாக அமைக்கப்பட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிந்தது.  (கஜீ)
 

இந்து விழிப்பு விழாவில் நாடகம்

இலங்கை சின்மயாமிஷன்  நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம் 24, 25ம்  திகதிகளில் இந்து விழிப்பு என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை மட்டத்தில் பல்கலையுருவங்கள் கலைநிகழ்வுப் போட்டி ஒன்றை நடாத்தியிருந்தது.  போட்டிகள் யாழ்/வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 12 பாடசாலைகள் கலந்து கொள்ளவதற்கு அனுமதி பெற்றிருந்த போதிலும், 08 பாடசாலைகளே போட்டியில் கலந்து கொண்டன. போட்டியில் பாரம்பரிய கூத்து, வில்லுப்பாட்டு, சமூக நாடகங்கள் எனப் பல்கலைகளையும் ஒன்றுசேர நோக்கப்பட்டது. இந்துவிழிப்பைக் கருப்பொருளாகக் கொண்டு அதனை வெளிப்படுத்த கலை நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என்ற அடிப்படையில் தெரிவுகள் இடம்பெற்றன. 

இவற்றில்  வில்லுப்பாட்டு (கதம்ப நிகழ்வூடாக நிகழ்த்தியிருந்தனர்) மாதுரு பிதிரு தேவோபவ – நாடகம்,  மெய்ப்பொருள் காண்போம்- நாடகம் ஆகிய  நிகழ்வுகள்  தெரிவுசெய்யப்பட்டு 29.08.2004 அன்று நல்லூர் பின்வீதியில் நடைபெற்ற விழாவில் மேடையேற்றப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன.  போட்டியில் முதல் இடத்தினைப் பெற்றுக்கொண்ட வில்லுப்பாட்டுக் கதம்ப நிகழ்வு தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்கு பற்றவுள்ளது.  (றஐனி) 

நாடகப்போட்டி
 
மானிப்பாய் பனைதென்னை வள கூட்டுறவு அபிவிருத்தி கொத்தனியினால் கடந்த ஓகஸ்ட் மாதம் 23ம் திகதி நாடகப் போட்டியொன்று நடாத்தப்பட்டது. சங்கங்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக என மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடே இந் நாடகப் போட்டி.

இப் போட்டியில் கலந்து கொள்வதற்கு 9 சங்கங்கள் பதிவு செய்து கொண்டன. ஆயினும், மானிப்பாய் பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கம், மானிப்பாய் பனை தென்னைவள கொத்தனி ஆகிய இரண்டுமே போட்டியில் கலந்து கொண்டன. நாடகம் பனை தென்னைவள கூட்டுறவு அபிவிருத்திச் சங்கங்களின் சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நாடகங்களில் சொல்ல வந்த விடயம் கலைத்துவத்தோடு பேணப்படுவதில் சில இடர்பாடுகள் ஏற்படத்தான் செய்தன. வெறும் வார்த்தைகளைக் கோர்வையாக்கி நாடகங்கள் நகர்ந்து சென்றன. நடிப்பை இயல்பாக்குவதற்கு நடிகர்களுக்கு அரங்கப் பயிற்சிகள் தேவை என்பதை இந்நாடகங்களைப் பார்க்கும் போது தோன்றுகின்றது.

நாடக அனுபவம், அரங்கியல் பயிற்சிகள் மூலமாக இச்செயற்பாடுகளின் விடாமுயற்சிகளோடு சிறந்த அரங்கப் படைப்புக்களை உருவாக்குவதற்கு முயல வேண்டும். (றஐனி)

 

 

சிறுவர் நாடக விழா

வடமராட்சி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளுக்கான சிறுவர் நாடகவிழா 12.06.2004 அன்று யாழ் வட இந்து மகளிர் கல்லூரியிலும், யாழ் நெல்லியடி திரு இருதயக் கல்லூரியிலும் நடைபெற்றது. பருத்தித்துறை, கரவெட்டி ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த 18 பாடசாலைகள் இவ் விழாவில் கலந்து கொண்டன. இரண்டு பிரிவாக நடத்தப்பட்ட இச்சிறுவர் நாடக விழாக்கள், பருத்தித்துறைக் கோட்டப் பாடசாலைகள் யாழ் வட இந்து மகளிர் கல்லூரியிலும் கரவெட்டிக் கோட்டப் பாடசாலைகள் யாழ் நெல்லியடி திரு இருதயக் கல்லூரியிலும் நடைபெற்றன.

ஒவ்வொரு நாடகத்திற்கும் 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. சிறுவர்களின் உளவியல் வளர்ச்சிக்கு ஏற்றதான கதைகளையும், விளையாட்டுக்கள், ஆடல், பாடல், சிறுவர்களின் ஒன்றிப்பு என்பன நாடகத்தில் எதிர்பார்க்கப்பட்டன. இந்தவகையான நாடகங்கள் ஒரு சிலதையே இவ்விழாக்களில் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. சில நாடகங்கள் சிறுவர்களுக்கான நாடகத் தன்மையை விட்டு விலகி கொடூரம், அழிவுகள், இறுக்கமான நிலமை என்பவற்றைக் கொண்டிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

தெரிவு செய்யப்பட்ட நாடகங்களில் சிலவற்றில் பிள்ளைகளின் ஒன்றிப்பும், இயல்பான ஆற்றல் வெளிப்பாட்டையும் காணக்கூடியதாயிருந்தது. ஆசிரியர்களின் சிறுவர் நாடகம் தொடர்பான ஈடுபாட்டின் வெளிப்பாடுகளே அவற்றின் பெறுபேறுகள் எனக் கருதலாம். இவ்விழாவில் இரண்டு கோட்டங்களில் இருந்தும் 6 நாடகங்கள் தெரிவு செய்யப்பட்டன. இதன் இறுதி நிகழ்வு 19.06.2004 யாழ் வட இந்து மகளிர் பாடசாலையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்துகொண்ட நாடகங்களின் பெயர்கள் சில வருமாறு:- நட்பின் உயர்வு, மனமாற்றம், வல்லவன் வாழ்வான், யார் பெரியவன், சமாதானப் பண்ணை, சமாதானம், மகாநாடு.

இசை நாடக விழா!

ஜுலை மாதம் 2,3,4ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தினர் இசை நாடக விழாவினை நடத்தவுள்ளனர். இவ்விழாவில் இசை நாடகம் தொடர்பாக பல்வேறு தரப்புக்களில் கருத்துரைகளை துறைசார் புலமையாளர்கள் வழங்கவுள்ளார்கள். அத்தோடு யாழ். குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள சிறந்த இசை நாடகங்கள் அந்தந்தப் பிரதேசக் கலைஞர்களால் மேடையேற்றப்படவுள்ளதும் முக்கியமான நிகழ்வாக அமைந்து கொள்ளவுள்ளது. 

2,3ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் கருத்துரைகள் நடைபெறவுள்ளன. 2,3,4ஆம் திகதிகளில் மாலை 7.00 மணிக்கு திருமறைக் கலாமன்ற அரங்கில் இசை நாடக அளிக்கைகள் இடம்பெறவுள்ளன. அதில் ‘சிறிவள்ளி சத்தியவான்’ ‘சாவித்திரி’ ‘பக்த நந்தனார்’, ‘ப+தத்தம்பி’, ‘அரிச்சந்திரா’ – அயோத்தியா காண்டம், காசி காண்டம், மயான காண்டம், ஆகிய இசை நாடகங்கள் அளிக்கை செய்யப்படவுள்ளன. 

ஈழத் தமிழ் அரங்கப் பாரம்பரியத்தில் 19ஆம் நூற்றாண்டில் அறிமுகமாகி எமது மரபுக் கலைகளுக்குள் முகிழ்தெழுந்து இன்று பெருமளவில் நசிந்து காணப்படும் இசை நாடகம் (ஸ்பெசல் நாடகங்கள்) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும் இக்கலைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்குடனும் இவ்விழா நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இசை நாடகம், கூத்துக்கள் தொடர்பான ஆய்வரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் அதிக அக்கறை காட்டி சூடான விவாதங்கள் நடப்பதற்கு இவ்விழாக்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன. ஆனால், இவை வெறும் விவாதங்களுடனும் கட்டுரைகளுடனும் நின்று விடாமல் அழிந்துவரும் பாரம்பரிய அரங்கக் கலைகளை மீட்பதற்கு உதவவேண்டும் என்பது அனைவரதும் அவா!

திருப்பாடுகளின் காட்சி

mass.jpgயாழ் நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய மைதானத்தில் ‘கல்வாரி கண்ட கடவுள்’ என்ற திருப்பாடுகளின் காட்சி, பக்தி இசை உரை நாடகச் சித்திரம் மேடையேற்றப்பட்டுள்ளது. பொதுவாகவே, பங்குனி மாதத்தில் கிறிஸ்தவ மக்களின் தவக் காலத்தை முன்னிட்டு திருப்பாடுகளின் காட்சி பிரமாண்டமான தயாரிப்பாக மேடையேற்றப்பட்டு வருகின்றது.

அண்மைக் காலங்களில் திருமறைக் கலாமன்றத்தினர் நூறுக்கும் மேற்பட்ட நடிகர்களை கொண்டு இதனை மேடையேற்றுவதும் பெரும் திரளான மக்கள் இதனைத் தரிசிப்பதும் வழமையான நிகழ்வாகிவிட்டது.

இவ்வருடம் சுமார் 20 வருட காலங்களுக்கு பின்னர் யாழ். நாவாந்துறை மக்களால் திருப்பாடுகளின் காட்சி மேடையேற்றப்பட்டமை குறிப்பிடவேண்டிய அம்சமாகவுள்ளது. என்.எம். பாலச்சந்திரன் அவர்களின் கதை வசனம், பாடல், இயக்கம் என்பவற்றோடு எம்.எக்ஸ். கருணரட்ணம் அடிகளாரின் தயாரிப்பில் உருவான இவ்வாற்றுகை 150 அடி மேடையில் சுமார் 200 நடிகர்களுடன் மேடையேற்றப்பட்டது. 

நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய பங்குத்தந்தை அவர்கள் – “இது ஒரு நாடகமல்ல இது இறைவனின் வாழ்க்கை வரலாறு” என்றார். உண்மையில் திருப்பாடுகளின் காட்சி ஓர் பக்தி நிறைந்த தரிசனத்திற்குரிய கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைச் செய்து காட்டும் ஆற்றுகையாகவே அமைந்து கொள்கின்றது. அரங்கின் பிரமாண்டமான காட்சிப்படுத்தல் மருட்கையுடன் தவக்காலத்தின் இறை சிந்தனையை வலுவூட்ட கிறிஸ்தவ மக்களுக்கு இவ்வாற்றுகை உதவுகின்றன. ஊரே திரண்டு வந்து அரங்க வெளியை நிறைத்து நிற்பது இதற்கு சான்று பகர்கின்றது. 

2004 மே இதழ் செய்திகள் 

‘கருஞ்சுழி’ நாடகம்     

பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.ஆறுமுகம் அவர்களின் ‘கருஞ்சுழி’ நாடகம் கூத்தாடிகளினால் கனடாவின் ரொரன்டோ நகரில் ஏப்பிரல் 10, 2004இல் மேடை யேற்றப்பட்டது. இந்நாடகத்தை திரு. ஞானம் லம்பேர்ட் அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார். இந்நாடகம் உடல் மொழிக்கே அதி முக்கியத்துவத்தை அளிக்கின்றது. 

மனிதனே மனிதனுக்கு விரோதி. மனித சிந்தனை மனிதனை வளப்படுத்தவில்லை. மனிதனை மீட்பதாய் கூறும் கருத்தியல்கள் மீண்டும் மனிதனை இன்னொரு வலைக்குள் சிக்க வைக்கின்றது என்ற கருத்துக்களை முன்வைக்கின்றது.  இந்த நாடகத்தில் கிருபா கந்தையா ரெஐp மனுவல்பிள்ளை, ஸ்ரீபத்மநாதன், பாபுபரதராஐh, குகன், குமார், ரமேஸ், தனபதிபாபு, ஆரணியபாபு, ஞானம் லம்பேர்ட் ஆகியோர் நடித்துள்ளார்கள். இத்தகைய நாடக முயற்சிகள் கனேடிய தமிழ் நாடகச் சூழலை வழம்படுத்தி வருவது குறிப்பிட வேண்டியது.

பா.அ.ஐயகரன்-ரொரன்டோ, கனடா
 

அ.தாசீசியஸின் யாழ். வருகை

ஈழத்தமிழ் நவீன நாடக வரலாற்றில் முக்கியமானதொரு நெறியாளராக கருதப்படுகின்ற அ.தாசீசியஸ் அண்மையில் யாழப்பாணம் வந்திருந்தார். அவர் 26.03.2004 அன்று காலை 10 மணிக்கு செயல்திறன் அரங்க இயக்கத்தில் சிறுவர் அரங்கப் பயிற்சியில் பங்கு பற்றும் மாணவர்களை சந்தித்து நடிகனுக்கு தேவையான பயிற்சிகள் பற்றி உரையாடினார். அத்தோடு தனது நாடக அனுபவங்கள் பற்றியும் தற்போது ஒரு ஊடகவியலாளனாக ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொண்டார். ஒரு நாடகன் ஊடகனாகச் செயற்படும் விந்தை கண்டு மாணவர்கள் வியந்தார்கள். ‘கோடை’, ‘புதியதொரு வீடு’, ‘பொறுத்தது போதும்’, ‘கூடிவிளையாடு பாப்பா’ போன்ற சிறந்த நாடகங்களின் நெறியாளரான இவர் யாழ்ப்பாணத்தில் நவீன நாடகத்துறையை அறிமுகம் செய்தவர்களில் முதன்மையானவர். யாழ் நாடக அரங்கக் கல்லூரியின் தோற்றத்திற்கு குழந்தை ம.சண்முகலிங்கத்திற்கு பெருந்துணையாக நின்றவர். நாடகத்திற்கு பயிற்சி தேவை என்பதையும் நாடகம் கற்பதற்கான ஒன்று என்பதையும் வலியுறுத்தி அதற்காக உழைத்தவர்.
 

 2004 மார்ச் இதழ் செய்திகள்

koothu-copy.jpgபாரம்பரிய கலை பண்பாட்டுக் கழகத்தின் கூத்துப் போட்டிகள்

பாரம்பரிய கலை பண்பாட்டுக் கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ் வருடம் தை, மாசி மாதங்களில் கூத்து, இசை நாடகம், கிராமியப் பாடல்கள், வாத்தியம் ஆகியவற்றின் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் கலை மன்றங்கள் ஊடாகவும், தனித்தும் போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள். 

போட்டிகள் பிரதேச செயலர் பிரிவு ரீதியாக நடைபெற்றுள்ளது. இப்போட்டிகளில் காத்தவராயன் கூத்து தனியான ஒரு போட்டியாக நடத்தப்பட்டது. இசைநாடகப் போட்டிகளில் ‘சத்தியவான் சாவித்திரி’, ‘ஸ்ரீவள்ளி’, ‘மயானகாண்டம்’, ‘வீரத்தின் விளைநிலம்’, ‘பூதத்தம்பி’, ‘அதியரசன்’, ‘ஏழுபிள்ளை நல்லதங்காள்’ போன்ற நாடகங்கள் பங்குகொண்டன. குடாநாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பாரம்பரிய கூத்துக்களில் ஆர்வம் கொண்டோர் இப்போட்டிகளில் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு தென்மோடிக் கூத்துக்களான ‘சங்கிலியன்’, ‘வேதநூல்’, ‘மனுநீதி காத்த சோழன்’, ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’, ‘விக்கிரமாதிதத்தன்’, ‘பண்டாரவன்னியன்’ போன்றவை கலந்துகொண்டன. இதைவிட உடுக்கு, ஆர்மோனியம் போன்ற பாரம்பரிய கூத்துக்கலைக்குரிய வாத்தியங்கள் போட்டிகளில் வாசிக்கப்பட்டன. அத்துடன் கிராமியப் பாடல் போட்டியில் தனியாளுக்குரிய போட்டியும் குழுவிற்குரிய போட்டியும் நடைபெற்றன. வில்லுப்பாட்டு, குதிரையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற போட்டிகளும் நடைபெற்றுள்ளன. 

கரகம், காவடி ஆட்டங்களும் போட்டிகளாக நடத்தப்பட்டன. கிராமிய நடனப் போட்டிகளில் கும்மி, கோலாட்டம் என்பனவும் ஆடப்பட்டுள்ளன. பாரம்பரிய கலை பண்பாட்டுக் கழகத்தின் இம் முயற்சி ஓரளவேனும் எமது வேர்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு வலுச்சேர்ப்பனவாக அமைந்துகொள்கின்றன. 

நாடக அரங்கக்
கல்லூரிக்கு
அகவை 26

college-copy.jpg

ஜனவரி மாதம் 23ம் திகதி ‘நாடக அரங்கக் கல்லூரியின்’ 26வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. வழமை போல இம்முறையும் அரங்கத்துறை சார்ந்த ஒன்றுகூடலாக இந்நிகழ்வு அமைந்து கொண்டதோடு, ஓராள் அரங்க ஆற்றுகையும் நிகழ்த்தப்பட்டது.

1978ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் தலைமையில் நாடக அரங்கக் கல்லூரிக்கான அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்றது. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இவ் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் சுமார் 100 அரங்கவியலாளர்கள் பங்கு கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து வருடா வருடம் நாடகங்களை மேடையேற்றுதல் நாடக அரங்கக் கல்லூரியின் பெரும் பணியாக இருந்து வந்துள்ளது. நிரந்தர ரசிகர்களைக் கொண்டிருந்த நாடக அரங்கக் கல்லூரி சீரான செயல் இயக்கத்தைக் கொண்டிருந்தது. எனினும் நாளடைவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தனித்தனியே – புலம் பெயர்ந்த இடங்களில் கூட – தமது பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமது நிரந்தர ரசிகர்களுக்கென – ‘கோடை’, ‘புதியதொரு வீடு’, ‘கந்தன் கருணை’, ‘பொறுத்தது போதும்’, ‘கூடிவிளையாடு பாப்பா’, ‘சங்காரம்’, ‘அபசுரம்’ போன்ற நாடகங்களை நாடக அரங்கக் கல்லூரியினர் தயாரித்து மேடையேற்றியுள்ளார்கள். இன்றும் இந்நாடகங்கள் பெருமையுடன் பேசப்படும் அளவுக்கு நாடக அரங்கக் கல்லூரியின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

26வது அகவையை அடைந்த ‘நாடக அரங்கக் கல்லூரியை’, ‘கூத்தரங்கம்’ ஒரு கணம் நினைத்து பார்ப்பதில் பெருமை அடைகின்றது.                    

                                                          
பட்டினிக்கெதிரான நிறுவனத்தின் ‘பூதம்’ pootham-copy.jpg

பட்டினிக்கெதிரான நிறுவனம் குடாநாட்டில் பல்வேறு கிராமங்களில் குடிதண்ணீர்க் கிணறுகளை புனரமைப்புச் செய்துள்ளது. மக்களின் பாவனையில் உள்ள இக்கிணறும் அதனைச் சூழ உள்ள கிராமமும் அசுத்தம் நிறைந்ததாக காணப்பட்டிருப்பதனால், புனரமைப்புப் பணியின் தொடர் திட்டமாக சுகாதார விழிப்புணர்வு தொடர்பான வீதிநாடகத்தை கிராமங்கள் தோறும் அளிக்கை செய்து வருகின்றது.

இந்த ஆற்றுகையில் செயல்திறன் அரங்க இயக்கத்தை சேர்ந்த ஆற்றுகையாளர்கள் பங்கெடுத்துள்ளார்கள். இதுவரையில் 33 கிராமங்களில் இப் ‘பூதம்’ வீதி நாடகம் அளிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும,; இக்கிராமங்களில் ஓரளவு சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் ஒழுங்கமைப்பாளர் தெரிவித்துள்ளார். கிராமங்களில் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த விளைந்துள்ளமை வரவேற்கப்பட வேண்டியதே. அதேபோல நகரங்களில் பெருகி வரும் சுகாதார சீர்கேடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதும் சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும்.             

வளரும் பயிருக்கு முளையில் உதவுவோம்.
சிறுவர் அரங்கு தொடர்பான முயற்சிகள் குடாநாட்டில் பல்வேறு தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களை வள ஆளணியாகக் கொண்டு செயல்திறன் அரங்க இயக்கம் சிறுவர் அரங்க களப்பயிற்சிகளை நடாத்தி வருகின்றது. இக் களப்பயிற்சிகள் யாழ் மாவட்டத்தில் 5 கல்வி வலயங்களிலும் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் நாடக எழுத்துருவாக்கம், அரங்கப் பாடலாக்கம், அரங்க விளையாட்டுக்கள், நாடகத்தயாரிப்பு முறைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை 3 தடவைகள் நடந்த இக்களப்பயிற்சியில் 55 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள்.      – சுபா

இந்த வருடம் காவியநாயகன்

இவ்வருட தவக்காலத்தை முன்னிட்டு கிறிஸ்துவின் திருப்பாடுகளைச் சித்தரிக்கும் ஆற்றுகையொன்றைத் திருமறைக் கலாமன்றம் மேடையேற்றவுள்ளது. பாரம்பரியமாக வருடந்தோறும் மேடையேற்றி வரும் இவ்வாற்றுகைக்கு ‘காவிய நாயகன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பிரமாண்டமான காட்சியமைப்புக்களுடன் 250க்கும் அதிகமான நடிகர்களைக்கொண்டு ஆற்றுகை செய்யப்படுகிறது. சமயம் சார்ந்த இவ்வாற்றுகைகளைக் காண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருவதோடு, இறை சிந்தனையுடன் இதனை நோக்குவதும் குறிப்பிடத்தகதாக அமைந்து கொள்கிறது. மார்ச் – 31, ஏப்பிரல் – 01,03,04 ஆகிய திகதிகள் இந்நாடகம் மேடையேற்றப்படவுள்ளது என ஊடகப் பொறுப்பாளர் தெரிவுத்துள்ளார்.    

                          

‘இரத்தவாடைக்குள் தென்றல’

கலைத்தாய் மன்றம் ‘இரத்தவாடைக்குள் தென்றல்’ எனும் வீதி நாடகத்தை குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் அளிக்கை செய்கின்றது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினரின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இவ் வீதி நாடகம் சமகால அரசியல் சிக்கல்கள் தொடர்பான விழிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது.
 

நாடகப் பயிலகம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தின் 11வது ‘நாடகப்பயிலகம்’ கடந்த பெப்ரவரி மாதம் 2ம் திகதி மாலை 4.30 மணிக்கு மன்ற அரங்கில் தொடக்கி வைக்கப்பட்டது. திரு. பு.பேபினேஸ் தலைமையில் நடைபெற்ற இத்தொடக்க விழாவுக்கு நாடக இயக்குனர் திரு. தே.தேவானந்த் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். திரு. ஜோன்சன் ராஜ்குமாரின் அறிமுக உரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உட்பட மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் பலரும் சிறப்புரை நிகழ்த்தினர்.                                                     

‘நாடக வழக்கு’  நூல் வெளியீட்டு விழா

nadaka-valakku.jpgஇணுவில் ‘கலை இலக்கிய வட்டம்’ கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய ‘நாடக வழக்கு| எனும் நூலை வெளியிடுகிறது. இணுவையூர் சிதம்பரதிருச் செந்திநாதன் தலைமையில் நடைபெறும் வெளியீட்டு விழாவில் முதற்பிரதியை பதஞ்சலி நாவேந்திரன் பெறவுள்ளார்.

அரங்கக் கட்டுரைகளும், நேர்காணல்களும் அடங்கிய இந்நூல் பற்றிய ஆய்வுரைகளை பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களும், கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக விரிவுரையாளர் திரு. கந்தையா ஸ்ரீகனேசன் அவர்கள் இந்நூலிற்கான கட்டுரைகளைத் தொகுத்து நூலுருக்கு கொடுத்துள்ளார்.

பவள விழா

‘நவாலியூரான்’ எனப் பலராலும் அறியப்பட்ட நாடகக் கலைஞர் கலாபூஷணம் நா.செல்லத்துரை அவர்களைக் கௌரவித்துப் பவளவிழா கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். மத்திய கல்லூரியின் ‘வாழும் கலைஞர்களைக் கௌரவிக்கும் அமைப்பு’ இப்பவள விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. 07.01.2004 அன்று யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலைஞர்களாலும், கல்விமான்களாலும் ‘நவாலியூரான்’ பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டார்.

எழுபத்தைந்து வயது நிரம்பிய இவர் இதுவரை சுமார் எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்ததோடு, நாடகங்களை எழுதி, நெறியாள்கையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் ஒரு திரைப்பட நடிகன் என்பதோடு, திரைக்கதை, வசனம், பாடல் என்பவற்றையும் ‘காத்திருப்பேன் உனக்காக’ (1976ல் வெளியானது) எனும் திரைப்படத்துக்காக எழுதியுள்ளார். கலையுலகில் இவருக்கிருந்த ஈடுபாட்டின் காரணமாக எண்ணற்ற பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
 

‘நல்லதோர் வீணை செய்ய’

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்களால் நாடக ஆற்றுகைகள் மேடையேற்றப்பட்டு வருகின்றன. இதில் யாழ் பல்கலைக்கழக மாணவன் சு.வரதகுமார் நெறியாள்கை செய்த ‘நல்லதோர் வீணை செய்ய………’ எனும் நாடகம் அண்மையில் மேடையேற்றப்பட்டு வருகின்றது. யாழ் குடாநாட்டில் நடைபெற்று வரும் கலாசார பிறழ்வுகளையும் அதன் மூலங்களைப் பற்றியும் இந்நாடகம் பேசிக்கொள்கிறது.
 

“ஒரு தேசத்தின் தனித்துவம் கிராமத்தில் இருக்கிறது”

பெண்கள் நாடகத்தில் பங்கு பற்றுகிறார்கள் என்றால் ‘பெண்ணியம்| என்று பயப்படத் தேவையில்லை. ‘பெண்ணியம்’ என்பது தற்போது பெரியவர்களுடைய விடயமாகவே உள்ளது. இந்நாடக நிகழ்வு கிராமத்துப் பிள்ளைகளின் ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்காக நிகழ்த்தப்படுகிறது. 

– இவ்வாறு தெரிவித்துள்ளார் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள்.

அண்மையில் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பெண்கள் பங்கு பற்றிய பாரம்பரிய நாடக விழாவிற்கு தொடக்கவுரை ஆற்றியபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

செயல்திறன் அரங்க இயக்கத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில், அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் கிராமந்தோறும் நிகழ்த்தி வருகின்ற ‘வேரடி மண்’ எனும் பாரம்பரிய கலை விளையாட்டு விழாவில் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் நடித்த இளம் பெண்கள் பங்குபற்றினர்.

இந்நிகழ்விற்கு தொடக்கவுரை ஆற்றிய கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் தொடர்ந்து பேசுகையில், “இன்று கிராமத்தவர்கள் தங்களது தனித்துவத்தை இழக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தேசத்தின் தனித்துவம் கிராமத்தில் இருக்கின்றது. பாரம்பரியமாக நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்பதையும், கிராமத்தவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும், ‘வேரடி மண்| அமைந்திருந்தது. எமது பாரம்பரியங்களோடு சந்தோசமாக இருப்பதற்கும், எமது பாரங்களை மறப்பதற்கும் கலை நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. இப்பொழுது இங்கு சமாதானம் நிலவுகின்றது. இந்த இடைவெளியின்போது சமூகத்தை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கான செயற்பாடுகளை சமூகப் பொறுப்பாளிகள் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக இவ்வாறான சின்னச் சின்ன அலுவல்களைக் கிராமங்கள் தோறும் செய்தல் வேண்டும். அவற்றின் மூலம் மக்களைச் செயல்திறன் உள்ளவர்கள் ஆக்கமுடியும் எனக் கருதுகிறேன்” என்று தனது உரையிற் குறிப்பிட்டார். 
 

சித்திரம் பேசேல்………

‘சித்திரம் பேசேல்’ என்ற பெயரில் மகளிர் பிரச்சினைகளை அலசும் நாடகமொன்று மார்ச் 8ம் திகதி (2004) மகளிர் தினத்தை முன்னிட்டு திருமறைக் கலாமன்ற அரங்கில் நிகழ்த்தப்படவுள்ளது. இம்மன்றத்தின் 10வது பயிலகத்தில் பயிற்சியை முடித்துக்கொண்ட மாணவர் அணியினால் தயாரிக்கப்பட்ட இந்த நாடகம் 3வது தடவையாக இம்முறை மேடையேற்றப்படுகிறது.

மன்றத்தின் சென்ற வருட ஒளிவிழாவின் போதும், பொங்கல் விழாவின் போதும் மேடையேறிய ‘சித்திரம் பேசேல்| நாடகம் 2004 மகளிர் தினத்தில் பார்வையாளர்களுடனான கலந்துறையாடலை எதிர்பார்த்து மேடையேற்றப்படுகிறது. எனவே நாடக ஆர்வலர்களையும் சமூக அமைப்புக்களையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுகிறார்கள் திருமறைக் கலாமன்றத்தினர்.

பெண்களின் தனி அரங்கு

அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் கிராமமட்ட பெண்கள் அமைப்புக்களை வலுப்படுத்தல் எனும் திட்டத்தினை அமுல்படுத்தி வருகிறது. இதில் ஒரு செயற்பாடாக ‘வேரடி மண்’ எனும் தலைப்பில் பெண்கள் பங்கு பற்றும் பாரம்பரிய கலை விளையாட்டு விழாவினை கடந்த (2004) தை மாதம் முதல் நிகழ்த்தி வருகிறது.

இந் நிகழ்வுகளில் கிராமமட்ட நாடக மன்றங்களில் பெண்கள் பங்கு பற்றிய பல நாடகங்களும் அளிக்கை செய்யப்படடிருந்தன. அவற்றுள் நாவற்குழி தெற்கு கிராமப் பெண்கள் பங்கு பற்றிய ‘இராவனேசன்’ வடமோடிக் கூத்தும், கைதடி மேற்கு கிராமப் பெண்கள் பங்கு பற்றிய ‘காத்தவராயன்’ சிந்துநடைக்கூத்தும் 23.02.2004 அன்று நாவலர் கலாசார மண்டபத்தில் மேடையேற்றப்பட்டன. இந்நிகழ்வை செயல்திறன் அரங்க இயக்கத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர்.

இக்காத்தவராயன் கூத்தினை ஆசிரியை திருமதி சிவலோஜினி கிருஷ்ணமூர்த்தியம் இராவனேசன் கூத்தினை கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் திரு. க.இ.கமலநாதனும் நெறியாள்கை செய்திருந்தார்கள். பெரும்பாலும் யுவதிகளே நடித்த இக்கூத்துக்களினூடாக பெண்களின் அரங்கியல் ஈடுபாட்டினைக் கண்டு கொள்ளக்கூடியதாகவிருந்தது. காத்தவராயன் கூத்தில் பாடல் வடிவமே மேலோங்கி இருப்பதற்கு ஏற்ப நடிகர்களின் குரல் வளத்தினூடாக அதன் செழுமையைப் பேணக்கூடியதாகவும் இருந்துள்ளது.

அதேபோல் கடுமை மிகுந்த தாள, அடவுகளைக் கொண்ட வடமோடிக்கூத்தான ‘இராவணேசனிலும்’ இளம் யுவதிகள் தமது திறனை வெளிக்காட்டியிருந்தமை பெண்களின் அரங்கியல் ஈடுபாட்டின் முனைப்பென்றே கூறமுடியும்.

இவ்விரு கிராமத்துப் பெண்களின் அரங்கியல் திறன்களை வளப்படுத்தி மேலும் முறைமைப்பட்ட, செழுமை மிகுந்த பாரம்பரிய வடிவங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என, ‘கூத்தரங்கம்’ எதிர்பார்ப்பதுடன், இவ்வாறான முயற்சிகளிற்கு ‘கூத்தரங்கம்’ பக்கபலமாக இருக்க ஆர்வமாகவுள்ளது. 

பெண்கள் அரங்க விருத்தி  

செயல்திறன் அரங்க இயக்கம் வளமான அரங்கப் பண்பாட்டு வளர்ச்சிக்காக பல்வேறுபட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதில், ஈழத்தமிழ் அரங்கில் ஆரம்ப நிலை வளர்ச்சியை அடையாத துறையாக உள்ள பெண்கள் அரங்கத்துறையை விருத்தியடையச் செய்வதற்காக பின்வரும் செயற்பாடுகளைத் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.

peon-copy.jpg

1. பெண்கள் ஆளுமை விருத்திக்கான அரங்கக் களப்பயிற்சிகள்.

2. பெண்கள் பிரச்சினைகளைப் பேசும் அரங்க ஆற்றுகைகளை பல்வேறு இடங்களிலும் மேடையேற்றுதல்.

3. பாரம்பரிய அரங்குகளில் பெண்களை ஈடுபடுத்தி பெண்கள் பங்குபற்றும் பாரம்பரிய அரங்க முயற்சிகளை ஊக்குவித்தல்.

4. பெண்கள் அரங்கு தொடர்பான புத்தகங்களை கட்டுரைகளை வெளியிடுதல்.

இந்தச் செயற்பாடுகளில் ஓர் அங்கமாக கைதடி மேற்கு, கைதடி நாவற்குழி தெற்கு ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த 40 பெண்களுக்கு 13.02.2004, 14.02.2004 ஆகிய திகதிகளில் நாடகம் சார்ந்த பயிற்சிகள் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரை அகதிகள் புனர்வாழ்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் தொடர் செயற்பாடாக எதிர்வரும் 08.02.2004ம் திகதி மகளிர் தினத்தை முன்னிட்டு சமகாலத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நாடகம் தயாரித்து மேடையேற்றப்படவுள்ளது.

இந்நாடகத்தில் கைதடி மேற்கு, கைதடி நாவற்குழி தெற்கு ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த 15ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

– வ.கஜித்தா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: