ஈழத் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் காணப்படும் பாரம்பரிய அரங்குகளாக கூத்துக்களையும் இசை நாடகங்களையுமே கொள்ளலாம்.
இவ்வரங்குகளும் இன்று அழிந்து வருகின்றன. தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளைப் பேணுவதற்கான முயற்சிகளை ஐம்பதுகளில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் மேற்கொண்டிருந்தார். அவரது முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படாமை வேதனைக்குரியது. பேராசிரியரின் முயற்சிக்குப் பின் எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. மாறாக, அவரது முயற்சிகளை விமர்சிக்கும் போக்கே மேலோங்குகிறது.
தமிழ் அரங்கக் கலைகளைக் காப்பவர் யார்? என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா அரசிடம் இதனைக் கேட்பது என்பது அபந்தமான முரணனி! இருப்பினும் ஸ்ரீலங்கா அரசிடமே கேட்டாக வேண்டிய நிலையிலும் உள்ளோம். இதனை, எந்த அமைப்பினூடாக மேற்கொள்வது? (ஏற்கனவே காணப்பட்ட கலைக்கழகம் செயல் இழந்து கிடக்கிறது) இதற்கான, நிதியை எவ்வாறு தொடர்ச்சியாகப் பெறுவது? பாரம்பரியக் கலைகளைப் பேணும் முயற்சியை முன்னெடுப்பது யார்? காப்பதால் விளைவது என்ன? போன்ற கேள்விகள் நாடகக் கலைஞர்கள், ஆர்வலர்கள் மத்தியில் அடிக்கடி கேட்டுக் கொள்ளப்படுவது வழமை. இவை தொடர்பான ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட முடியாமல் இருப்பது பெரும் துயர்?
தமிழ்ப் பாரம்பரிய அரங்கக் கலைகளைக் காப்பதற்கான வழி என்ன? மட்டக்களப்புப் பல்கலைக்கழகம், பாரம்பரியக் கலை மேம்பாட்டுக்கழகம், திருமறைக் கலாமன்றம் போன்ற நிறுவனங்கள் பாரம்பரிய அரங்குகளைப் பேணுவதற்கான சிறு சிறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது பராட்டுக்குரியது. இருப்பினும், இவை போதுமான விளைவைத் தரவல்ல செயற்பாடுகளாகப் பரிணமிக்க வேண்டும்.
எமது கலைகளைக் காப்பதற்கு, அரசு அக்கறை செலுத்துமென்று காத்திருப்பதில் பயனில்லை. இன்று, மீள்கட்டுமாணம் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் நாம் அதற்குள் மன அபிவிருத்திக்கு வித்திடும் கலைகளில் மீள் கட்டுமாணம் பற்றியும் சிந்தித்துச் செயலாற்றுதல் அவசியம்.
தமிழர் அடையாளத்தைத் துலங்கச் செய்யும் அரங்கக் கலைகளைப் பேணுவதற்கான அரங்க நிறுவனம் உருவாக்கப்படவேண்டும். இதனை, உருவாக்குவதற்கும் வளர்ப்பதற்கும் கலைஞர்கள் ஒன்றுபட வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும்.
- ஆசிரியர் குழு
