வெறுவெளி அரங்கக் குழு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் ஒன்றிணைந்து ‘வெறுவெளி’ அரங்கக் குழுவை அமைத்துள்ளார்கள். இவ்வமைப்பு 2003ம் ஆண்டில் இருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறது. இதன் முதலாவது பொதுமக்களுக்கான நிகழ்ச்சியாக ‘சிகப்பு விளக்கு’ எனும் நாடக மேடையேற்றம்  17.07.2004 அன்று மாலை 3.30 மணிக்கு கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் நாடக மேடையேற்றங்களைப் பல்வேறு மன்றங்கள் முன்னெடுத்திருக்கின்றன. பெரும்பாலும் நிதி சேகரிப்பிற்காக நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியிருக்கிறார்கள். மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தயாரித்து மேடையேற்றிய அன்னையிட்ட தீ, வேள்வித் தீ போன்ற நாடகங்களையும் விஞ்ஞான பீட மாணவர்கள் தயாரித்து மேடையேற்றிய விழிச்சுடர், ஆத்ம தரிசனம் போன்ற நாடகங்களையும் கலைப்பீட மாணவர் ஒன்றியம் தயாரித்த பொய்க்கால் நாடகத்தையும் குறிப்பிட்டுக் கூறமுடியும்.

கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்திற்குள் நாடமும் அரங்கியலும் துறை மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டுடன் இணைந்த பல அரங்கக் கருத்தரங்குகள், கலைஞர் சந்திப்பு, சிறப்புக் கலை மாணவர்கள் தமது இறுதியாண்டு பரீட்சைக்காகத் தயாரித்த நாடகங்களை மேடையேற்றுதல் போன்ற செயற்பாடுகளை நுண்கலைத்துறை மாணவர்கள் (நாடகமும் அரங்கியலும் மாணவர்களும் நுண்கலைத்துறை மாணவர்களும் அடங்கலாக) இணைந்து தொண்ணூறுகளின் முற்பகுதியில் ஆரம்பித்த ‘கலைவட்டம்’ என்ற மாணவர் அமைப்பு ஊடாக முன்னெடுத்தார்கள். நாளடைவில் ‘கலைவட்டம்’ நுண்கலை மாணவர்களுக்குரியதாக இனங்காட்டப்பட்டது. இதனால் நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டுடன் இணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க தமக்கானதொரு மாணவர் அமைப்பை உருவாக்க வேண்டிய நிலைக்கு வந்தார்கள்.

வெறுவெளி அரங்கக் குழு உருவாக்கத்தில் நுண்கலைத்துறைத் தலைவி திருமதி நாச்சியார் செல்வநாயகம் (தற்போது இந்து நாகரிகத்துறைத் தலைவராக உள்ளார்) நாடகமும் அரங்கியலும் துறை விரிவுரையாளர் க.ரதிதரன் போன்றோரின் முயற்சிகள் குறிப்பிடக்கூடியன.

வெறுவெளி அரங்கக் குழுவின் முதலாவது தலைவியாக நாடகமும் அரங்கியலும் சிறப்புக் கலை மாணவி எஸ்.சியாமா, செயலாளராக ப.கேதீஸ் ஆகியோர் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். இவர்களால் குறுகிய காலம் மட்டுமே செயற்பட முடிந்தது. இவர்களின் முயற்சியால் 2003ஆம் ஆண்டு நாடக மாணவர்களின் செயல்முறை அனுபவத்திற்காகத் தயாரிக்கப்பட்ட ந.முத்துசாமியின் ‘நாற்காலிக்காரன்’ (நெறியாள்கை தே.தேவானந்த்) ‘காலனை வென்ற காரிகை’ நெறியாள்கை (எஸ்.விமலநாதன்), ‘சிவப்பு விளக்கு பீஜிங் ஒப்பேரா’ (நெறியாள்கை க.ரதிதரன்) ஆகிய நாடகங்கள் பொது மக்களுக்காக மேடையேற்றப்படத் திட்டமிடப்பட்டது. இதற்கான நுழைவுச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் பல்கலைக்கழக அரையாண்டுப் பரீட்சைகளால் நாடக மேடையேற்றங்கள் பிற்போடப்பட்டன.

மேடையேற்றத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்ற அறிவுறுத்தலுடன் இம்முயற்சி இடைநிறுத்தப்பட்டது. இதன் பின் ‘காலனை வென்ற காரிகை’ நாடகமும் ‘சிவப்பு விளக்கு’ நாடகமும் 17.07.2004 அன்று நடைபெறும் என்று 2004 நிர்வாகக் குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது. பின் ‘காலனை வென்ற காரிகை’ நாடகம் தவிர்க்க முடியாத காரணத்தால் நடைபெறாது பின்னர் ஒரு தடவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ‘சிவப்பு விளக்கு’ நாடகம் மட்டும் மேடையேற்றப்பட்டது. வெறுவெளி அரங்கக் குழுவின் முதலாவது பொதுமக்கள் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறாமை வேதனைக்குரியது. இதற்கான காரணங்களை நிர்வாகம் சார்ந்த மாணவர்கள் மீள்மதிப்பீடு செய்வது அவசியம்.

2004ம் ஆண்டு நிர்வாகக் குழுவில் தலைவி க.துகாரதி, உபதலைவர் மு.ஜெயமதன், செயலாளர் ஜே.கில்டன் உபசெயலாளர் இ.யாழினி, இளம் பொருளாளராக பா.சிவரூபன் ஆகியோர் செயற்படுகிறார்கள். பாடசாலைகளில் நாடகக் களப்பயிற்சிகள், கருத்தரங்குகள் நடத்துதல், வெவ்வேறு வகையான நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றுதல், அனுபவம் வாய்ந்த நாடகவியலாளர்களுடன் கலந்துரையாடுதல், நாடகம் தொடர்பான வெளியீடுகளை மேற்கொள்ளுதல், பொதுக் கருத்தரங்குகளை நடத்துதல் போன்ற செயற்றிட்டங்களைத் தமது வருடாந்த செயற்றிட்டங்களாக வெறுவெளி அரங்கக் குழுவினர் குறிப்பிடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட செயற்றிட்டங்களை வருடாந்தம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியதாக நடைமுறைப்படுத்தி நாடகத்துறை வளர்ச்சிக்கான மரபு ஒன்றை பல்கலைக்கழகத்தில் வெறுவெளி அரங்கக் குழு உருவாக்க வேண்டும்.

தற்போது, பல்கலைக்கழகத்தில் துறைசார்ந்த ரீதியில் அதிகமான மாணவர் மன்றங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு இயங்கி வருகின்ற மாணவர் மன்றங்களில் பல துறைத் தலைவரினதும் விரிவுரையாளர்களினதும் விருப்புகளுக்கு ஏற்பவே செயற்படமுனைகின்றன. இதனால் வெறுவெளி அரங்கக் குழு இந்த மரபைத் தவிர்த்து மாணவர்களின் செயல்விருத்திக்கான மன்றமாகச் சுயமாகச் செயற்பட்டு அரங்கத்துறை வளர்ச்சிக்கு உதவவேண்டும். அதன் மூலமே செயலாற்றலும் படைப்பாக்கத் தற்துணிவும் உள்ள அரங்கச் செயலாளிகள் பட்டதாரிகளாக வெளியேறுவர்.

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , .

ஒரு பதில் “வெறுவெளி அரங்கக் குழு” க்கு;

  1. anurakaran சொல்வதென்னவென்றால்:

    hi now how is it growing. who is this pricident? irt is good iam agree. am ti collect

மறுமொழி இடுக