Theva

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நாடகவிழா – 2004

In சொற்சித்திரம் on அக்டோபர்20, 2007 at 9:50 மு.பகல்

மானிப்பாய் இந்துக் கல்லூரி வருடாந்தம் ஜூலை மாதம் 01, 02ஆம் திகதிகளில் நாடக விழாவினை சிறப்பாக நடத்தி வருகின்றது. இவ்வாண்டும் இவ்விழா சிறப்பாக நடந்தேறியது. பாடசாலையில் உள்ள மாணிக்கர், வாகீசர், சம்பந்தர், சுந்தரர் இல்லங்களுக்கிடையிலான போட்டியாக இந்நாடக விழா நடைபெறுகின்றது.

பொதுவாகப் பாடசாலைகளில் இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் நடத்தப்படுவதே வழமை. மானிப்பாய் இந்துக் கல்லூரியில் மட்டும் இல்லங்களுக்கிடையில் நாடகப் போட்டி நடைபெறுகின்றது. இந்த நாடக விழாவிற்கு நீண்ட பாரம்பரியமுள்ளதாகக் கல்லூரி உபஅதிபர் வி.சிறிகாந்தன் குறிப்பிட்டார். ஈழத்தில் சினிமாவிலும் றேடியோவிலும் சிறந்து விளங்கிய பல நடிகர்கள் மானிப்பாய் இந்துக் கல்லூரி நாடகப் பாரம்பரியத்தினூடாக வந்தவர்கள். ரகுநாதன், வாசகர், மதியழகன், நற்குணசேகரம், அருமைநாயகம் போன்றவர்கள்.

இந்த நாடகவிழாவிற்குப் பல முதியவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் வருகை தந்திருந்தார்கள். அவர்களின் முகத்தில் மிகுந்த சந்தோஷம் காணப்பட்டது. கூடிநின்று தமது பழைய நாடகங்கள் பற்றி நிறையப் பேசிக்கொண்டிருந்தார்கள். இனிவரும் காங்களில் எவ்வாறு நாடக விழாவை சிறப்பாகக் கொண்டாலாம் என்பது பற்றியும் கலந்துரையாடினார்கள்.

இவ்வாண்டு, மீண்டும் என்ன? நாற்பது லட்சம், தடைகளைத் தாண்டி….. மண்சுவடு நாடகங்கள் மெடையெற்றப்பட்டன. இந்நாடகங்களைக் கல்லூரி ஆசிரியர்கள் எழுதி நெறியாள்கை செய்திருக்கவில்லை. கல்லூரிக்கு வெளியில் இருந்து ஆட்களை எடுத்து நாடகங்கங்களைப் பழக்கியிருந்தார்கள்.

ஆண்டு 6 தொடக்கம் ஆண்டு 13 வரையுள்ள ஆண்பிள்ளைகள் இந்த நாடகங்களில் நடித்திருந்தார்கள். மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒரு அண்கள் கல்லூரியாக இருப்பதால் பெண் பாத்திரங்களை ஆண்களே நடிக்கின்ற மரபு காணப்படுகின்றது. மாணவர்கள் பெண் பாத்திரங்கள் நடிக்கவே அதிக அக்கறை காட்டுவதாகப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் குறிப்பிட்டார்கள். தமிழ் பாரம்பரியத்தில் பெண் பாத்திரங்களை ஆண்கள் நடிப்பது மரபு, அதற்கான பிரத்தியேகமான நளின அசைவு நடிப்பு உண்டு. அந்த நடிப்பை இந்த விழாவில் மேடையேறிய பெண் பாத்திரங்களில் காணமுடிந்தது.

கலையரசு சொர்ணலிங்கம் போன்ற சிறந்த நாடகக் கலைஞர்களின் முயற்சியாய் இந்த நாடக விழா ஆரம்பிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகப் பாணியை இன்றும் இங்கு காணமுடிவது மகிழ்ச்சியானது. மானிப்பாய் இந்துக் கல்லூரி உபஅதிபர் தனது உரையில், “இராணுவப் பிரச்சினைகளுக்கு முன் திறந்தவெளி மேடையில் இரவு வேளைகளில் நாடகங்கள் நடந்தன. இந்த விழாவிற்கு ஊர் ஒன்றுகூடி மகிழ்வது வழமை. மானிப்பாய் மண்ணையும் நாடகத்தையும் பிரிக்க முடியாது. மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பழைய மாணவர்கள் அவர்கள் தங்கள் பாடசாலை வாழ்வில் மேடையேறி நடித்தவர்கள் இன்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த விழாவில் வருடாந்தம் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் ஒரு நாடகத்தை மேடையேற்றுவது வழமை. மாணவர்கள் ஒவ்வொருவரும் தமது பாடசாலை வாழ்வில் மேடையேறி நடிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இந்த வருட நாடகவிழாவிற்குப் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் குறைவாகவே வருகை தந்திருந்தார்கள். இது அங்க கூடியிருந்த பலருக்கும் மனவருத்தத்தைத் தந்தது.

மானிப்பாய் இந்துக் கல்லூரி நாடகப் பாரம்பரியத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்களை இவ்விழாவிற்குப் பிரதம விருந்தினர்களாக அழைத்துக் கௌரவிக்கிறார்கள். இம்முறை திரு கந்தையா ஸ்ரீகணேசன், திரு அ.ஸ்ரனிஸ்லாஸ் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகப் பங்குபற்றினார்கள். இந்த விழாவில் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகியொர் தெரிவு இடம்பெற்று ஜூலை 4இல் மானிப்பாய் இந்துக் கல்லூரி நிறுவுனர் தினத்தில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.