தொம்சனின் பிரயோக அரங்கக் கருத்தரங்கு

(பிரிட்டன் மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர்)

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக நாடகத்துறை விரிவுரையாளர் ஜேம்ஸ் தொம்சன் அண்மையில் இலங்கை வந்திருந்தார்.

2000ம் ஆண்டு இலங்கைக்கு முதல்முதலில் வந்திருந்த ஜேமஸ் தொம்சன் அவர்கள் யாழ்ப்பாணம், அனுராதபுரம், மட்டக்களப்பு போன்ற இடங்களில் பிரயோக அரங்கக் களப்பயிற்சிகளை நடத்தியிருந்தார். ஈழத்து தமிழ் அரங்கத்துறை சார்ந்த விற்பனர்களோடு நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்ட இவர், ஈழத்தமிழ் அரங்கு பற்றிக் கற்றறிந்துள்ளார். இவரது மாணவர்களை கள ஆய்விற்காக இலங்கைக்கு அனுப்பி வருகிறார்.

2003ம் ஆண்டு மட்டக்களப்பு பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஒழுங்கு செய்திருந்த சமுதாய அரங்கு தொடர்பான சர்வதேச அரங்க மாநாட்டை நடத்துவதற்கு வசதியாக இங்கிலாந்தில் இருந்து சமுதாய அரங்கில் ஈடுபாடு கொண்டவர்களையும் பல அரங்க அறிஞர்களையும் நடிகர்களையும் அழைத்து வந்திருந்தார்.

ஜேம்ஸ் தொம்சனின் தற்போதைய குறிகிய கால விஜயம் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் பகுதிகளிலும் கொழும்பிலும் உள்ள அரங்கவியலாளர்களின் சாதனைகள் அரங்கப் பயண வரலாறு என்பவற்றை தொகுப்பதற்கான திட்டத்தை வரைவதாக அமைந்திருந்தது. யாழ்ப்பாணம் வந்திருந்தபோது திருமறைக்கலா மன்றம், யாழ்  செயல்திறன் அரங்க இயக்கம் சார்ந்தோருக்கு இரண்டு வெவ்வேறான களப்பயிற்சிகளை, கலந்துரையாடல் அரங்கு, பிரயோக அரங்கு என்ற தலைப்புக்களில் நடத்தியிருந்தார். குழந்தை ம.சண்முலிங்கத்தின் ‘பஞ்சவர்ண நரியார்’ சிறுவர் நாடகத்தைப் பார்வையிட்டுத் தன் கருத்துக்களை அவருடன் பரிமாறிக் கொண்டார்.

இத்தோடு, யாழ் நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் பிரயோக அரங்கு (Applied Theatre) என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றையும் 29.07.2004 அன்று மாலை 4.00 மணிக்கு நடத்தியிருந்தார். இக்கருத்தரங்கில் பிரயோக அரங்க என்றால் என்ன? பிரயோக அரங்கு கொண்டிருக்கும் அடிப்படை அம்சங்கள் எவை? பிரயோக அரங்க உருவாக்கப் படிமுறைகள், பயிற்சிகள் பிரயோக அரங்க எண்ணக்கருவில் தமிழ் அரங்கு போன்ற விடயங்கள் விளக்கப்பட்டன. தொம்சனின் உரைக்குப் பின்னர் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பிரயோக அரங்கின் பல்வேறு வடிவங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , .

மறுமொழி இடுக