Theva

ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்

In விமர்சனம் on அக்டோபர்20, 2007 at 9:52 மு.பகல்

திருமதி ஞா.ஜெயறஞ்சினியின் நூல் பற்றிய ஒரு பார்வை

pean.jpgஓர் ஆய்வு நூலாக பரிணமித்துள்ள இந்நூலானது பெண்நிலைவாத நோக்கு நிலையிலிருந்து ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்களின் பங்களிப்பையும், அவர்களின் நிலையினையும் ஆராய விழைகிறது. ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் நூலாசிரியர் வரலாற்றுப் பின்புல விவரணங்களுடன் ஆரம்பித்து எதிர்காலச் சாத்தியப்பாடுகளென எதிர்வு கூறப்படும் விடயங்கள் வரை, தனது கருத்தாக்கத்தைக் கட்டியெழுப்ப விழைகிறார்.

முதுதத்துவமாணி ஆய்வாக ஆரம்பித்து நூலுருப்பெற்றுள்ளது. இயல் ஒன்றில் அரங்கும் பெண்ணும் பற்றிய கருத்தியல் அடிப்படையை விளக்க விழையும் நூலாசிரியர், இயல் இரண்டில் பெண்ணிலைவாத அரங்கின் சர்வதேச வளர்ச்சிப் போக்கினை ஆராய்கிறார். இவ்விரு இயல்களும் எங்ஙனம் மானிட சமூகத்தின், சமூகப் பரிணாம மாற்றங்கள் அதன் வெளிப்பாட்டு நுட்பங்களில், குறிப்பாக அரங்குசார் வெளிப்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தின? அதன் விளைவாக அரங்கியல் எங்ஙனம் கூர்ப்படைந்தது? இத்தோற்றப்பாட்டுடன் எங்ஙனம் பெண்ணின் பங்கு மாறியது? என நோக்க விழைகின்றன.

இது அடிப்படையில் ஒரு வரலாற்றாய்வு அணுகுமுறையைக் கொண்டிருந்த போதிலும், நூலாசிரியர் ஏனைய சமூகவிஞ்ஞானங்களான சமூகவியல், உளவியல் போன்றவற்றின் அணுகுமுறைகளையும், ஆய்வுமுடிவுகள், கருத்துக்களையும் ஆங்காங்கே பயன்படுத்தி தனது கருத்துக்களுக்கு வலுச்சேர்க்க விழைந்துள்ளார்.

மூன்றாவது இயலில் தமிழ் அரங்கில் ‘பெண் நிலைவாத நோக்கு’ என்பது ‘பெண்நிலை வாதம்’ என்ற கருத்துத் தளத்திலிருந்து இவ்விடயத்தை நோக்கவிழைகிறது. ஆயினும், பெண்நிலைவாதம் என்பது கருத்தியல் ரீதியான ஒன்றாகும். கருத்தியல் அடிப்படையிலான கோட்பாடுகளைப் பயன்படுத்துகையில் பொதுவாக எதிர்கொள்ளப்படும் முரண்நிலைகளின் பிரதிபலிப்புகளை இங்கும் காணமுடிகிறது. கருத்தியல் நோக்கு நிலையில் நோக்குவோன் ‘நோக்குவானற்ற நோக்கு நிலையிலிருந்து’ அதாவது, காய்தலு வத்தலற்ற, நோக்கப்படும் விடயத்திலிருந்து தன்னை அன்னியப்படுத்தி நோக்கும் அணுகு முறையினைப் பின்பற்றவியலாது. நோக்குவோனின் ‘மனவுலகம்’ அல்லது ‘கருத்துலகத்தின்’ பிரதிபலிப்புகள், நோக்குநிலையில் செல்வாக்குச் செலுத்திப் பெறப்படும் பெறுபேறுகளை முற்கற்பிதங்களால் மாசுறச் செய்துவிடும். ஆயினும், இது தவிர்க்கவியலாத ஒன்றேயாகும். ‘பெண்நிலை வாதம்’ எனும் பதத்தின் வரையறுப்பு இவ்வியலில் சற்று தெளிவு குறைந்திருப்பது நோக்குநிலையின் ஆய்வுப்பாங்கினை பாதித்துள்ளதென்றே கூறவேண்டும்.

நான்காவது இயலானது பெண்நிலைவாத அரங்கின் அரங்கியல் பிரச்சினைகளை ஆராய்கிறது. இவ்வியலில், பல நடைமுறைப் பிரச்சினைகள் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. அத்துடன், பெண் எதிர்கொள்ளும் பாதகமான சமூக உளம்சார் நிலைகளை அரங்கினூடு மாற்றமுடியுமென்ற கருத்தும் வலுவூட்டப் பெற்றுள்ளது.

ஐந்தாவது இயலானது எதிர்கால, சாத்தியப்பாடுடைய செயற்திட்டங்களை ஆராயவிழைகிறது. இவை பெரும்பாலும் நூலாசிரியரின் கருத்துக்களும், செயற்திட்டங்களுமாகும். இத்தகைய செயல் திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வலுவூட்டல் செயன்முறைகள், வெளிப்பாட்டு முறைகள் போன்றவை உளமருத்துவர் அல்லது உளவியலாளரின் மேற்பார்வையுடன் நடாத்தப்படுவது சாலச்சிறந்ததாகும். மேலும், பங்குபற்றுவோரின் உளநிலை, செயற்றிறன் போன்றன தொடர்ச்சியாக அவதானிக்கப்படவும் வேண்டும்.

மொத்தத்தில் இந்நூல் அரங்கியலில் குறிப்பாக பெண் நிலைவாத அரங்கியலில் ஓர் புதிய அத்தியாயமெனலாம். மேலும், இந்நூல் எதிர்கால ஆய்வுகளுக்கு ஓர் அடித்தளமாகவும், தகவல்க் களஞ்சியமாகவும் விளங்குமென்பதில் சற்றேனும் ஐயமில்லை.

All comments are screened for appropriateness. Commenting is a privilege, not a right. Good comments will be cherished, bad comments will be deleted.