Theva

Editorial: அரங்கின் உயிர்ப்பினைப் பேணுவோம்.

In பொது on அக்டோபர்14, 2007 at 5:56 மு.பகல்

தமிழர் தாயகமெங்கும் பரவிக்கிடந்த பல அரங்க வடிவங்கள் செத்து மடிந்து போயின. எஞ்சிக் கிடப்பவை குற்றுயிராக ஊசலாடுகின்றன.

அரங்கில் ஆடியவர்கள் அரங்கக் கலையொடு தொடர்பறுந்தவர்களாகத் தம் நாளாந்த ஜீவனோபாயத்திற்குத் திண்டாடுகிறார்கள். அரங்கில் ஆடி ஓய்ந்த பலர் எவரது அரவணைப்புமின்றி தனிமையில் அல்லாடுகிறார்கள். ஊர்களில் நாடகங்கள் போடுவதற்கு ஆட்கள் இல்லை, மேடைகள் இல்லை, வசதிகள் இல்லை.

அரங்கு தொழில்சார் நிலை நோக்கி வளர்ச்சியடையவில்லை. கற்கை நெறியாக அரங்கு வந்த பின்பும் அரங்கத் துறையில் திருப்திகரமான வளர்ச்சியை உணர முடியவில்லைல.

போர் அனர்த்தத்தினால் தடைப்பட்டுப்போன அல்லது சிதைந்து போன அரங்கத்துறையை நீண்ட இடையவெளியின் பின் வெள்ளமென வந்த சின்னத்திரை கருவறுக்கின்றது.

இந்த நிலைமைகளை வெல்வதற்கான பல்வேறு செயற்றிட்டங்களைச் செயல்திறன் அரங்க இயக்கம் நடைமுறைப்படத்தி வருகிறது.

‘வளமான அரங்கப் பண்பாட்டு உருவாக்கத்திற்காக உழைப்போம்’ என்ற மகுட வாக்கியத்திற்கு ஏற்ப இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.

பல்வேறு அரங்க வடிவங்களின் உயிர்ப்பினைப் பேணுவதனூடகவே வளமான அரங்கப் பண்பாட்டை உருவாக்க முடியும் என்று நம்புகின்றோம். அதற்கு அரங்கச் செயற்பாடுகள் தொடர்பான தகவல் பரிமாற்றம் மிக அவசியம். அதனூடாகவே ஆரோக்கியமான முன்மொழிவுகள் கிடைக்கும். இதற்காக நீண்ட நாட்கள் முயற்சித்து இந்தத் தகவல் பரிமாற்ற ஏட்டினை வெளிக்கொணர்கின்றோம். இதனைத் தொடர்ந்து செயல்முனைப்புடன் இயக்குவதற்கு ஒவ்வொரு அரங்கவியலாளர்களினதும் ஒத்துழைப்பு மிக அவசியம்.

சிறார்கள், பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், நாடக மன்றங்களில் மேற்கொள்ளப்படுகிற அரங்க முயற்சிகள் இந்த ஏட்டில் பிரசுரிக்கப்படும். அரங்கத்துறை சார்ந்த கட்டுரைகள், செய்திகள், நேர்காணல்கள், அரங்க நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை எமக்கு அனுப்பி வைக்கலாம்.

கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்வோம். ஆக்கபூர்வமான விவாதங்களை உருவாக்கிக்கொள்வோம். தொழில்சார் நிலைக்கு அரங்கை வளர்த்தெடுப்போம். அரங்கின் உயிர்ப்பினைப் பேணுவோம். அதற்காக உழைத்திடுவோம். வாரீர்!

- ஆசிரியர் குழுlogo-flat.jpg