
கிராம மட்டத்தில், நிகழ்வுகளில் நாடகம் மேடையேற்றுவதற்காக தாவடி தெற்கில் ஓர் நாடகக் குழு தனது பணியை மேற்கொண்டு வருகிறது. “சிறி காளியம்பாள்” சனசமூக நிலையத்தில் “அம்பாள் நாடக மன்றம்” என்ற பெயரில் 60களில் இருந்து இயங்கி வரும் இந்நாடகக் குழு சனசமூக நிலைய நிகழ்வுகள், கோயிற் திருவிழாக்கள், பண்டிகைகளில் நாடகத்தை மேடையேற்றி வருகிறது.
இம்மன்றத்தின் நாடகச் செயற்பாடுகளிற்கு திரு. முருகர் அப்பையா (64), திரு. ஆறுமுகம் தெய்வேந்திரம் (56), திரு. முருகேசு இரத்தினசிங்கம் (50) என்பவர்கள் உறுதுணையாக இருப்பதோடு, ஆறுமுகம் தெய்வேந்திரம், தேசிங்கராஜா செல்வக்குமார் (23) ஆகியோர் நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்து வந்துள்ளார்கள். தமது நாடகங்களை “சமூக நாடகங்கள்” எனக் கூறும் இவர்கள், பெரும்பாலும் சமகால ஊர்ப் பிரச்சினைகளை நாடகக் கதையாக அமைத்துக் கொள்கிறார்கள். இவற்றுள் “வித்தியா சமானவள்”, “கதிரை யாருக்கு?” போன்ற நாடகங்களைக் குறிப்பிடத்தக்கவை எனத் தெரிவிக்கிறார்கள்.
அத்தோடு இவர்கள் வீதி நாடகங்கள் அளிக்கை செய்வதிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். கலை பண்பாட்டுக்கழக ஆதரவுடன் பல்வேறு வீதி நாடகங்களை அளிக்கை செய்துள்ளார்கள். “மாவீரர் வாரம்”, “மண்ணுக்காக……”, “போர் மண்ணில் மீண்டும் போர்”, “தீச்சுவாலை”, “நச்சுக் காற்று” என்பன தமது வீதி நாடகங்கள் எனத் தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். இந்த வீதி நாடகங்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்டம் சம்பந்தமாகவும், யுத்த அவலங்கள் சம்பந்தமாகவும், தென்னிலங்கை அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பேசுவதாக அமைந்திருந்தன.
பெரும்பாலும் இளந் தலைமுறையினரின் ஈடுபாடு அதிகம் காணப்படும் இந்நாடக மன்றத்தில் பெண்கள் மேடையேறுதல் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக இருக்க ஸ்ரீவில்லை. கடந்த மாதம் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் நடத்திய ‘வேரடி’ மண் பாரம்பரிய கலை விளையாட்டு விழாவிலும் பெண்கள் மட்டும் பங்குகொண்ட ‘வித்தியாசமானவள்’ எனும் நாடகம் மேடையேற்றப்பட்டமையைக் குறிப்பிட்டும் கூறியுள்ளார்கள்.

தெய்வேந்திரம் அவர்கள் தனது நாடக அனுபவம் பற்றிக் குறிப்பிடுகையில் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் “கிளியப் பட்ரா” நாடகம் செய்தபோது தான் கைது செய்யப்பட்டமை பற்றியும் கூறியதோடு, கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திரு. கா.சிதம்பரநாதன் நடத்திய நாடகப் பட்டறையில் பங்கு கொண்டது பற்றியும் பசுமையான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். திரைப்படத்துறை தொடர்பாக அதிக நாட்டம் கொண்ட இவர் தற்போது இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றிய திரைப்படம் தயாரிப்பதற்கான முன்னெடுப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
தற்போது இந்நாடகப் பணிகளை முன்னின்று நடாத்துவதற்கு செல்வன் தே.செல்வக்குமார் என்பவர் உறுதுணையாக இருப்பதும் நம்பிக்கை தரும் விடயமாக அமைந்துள்ளது. அளிக்கை முறைகள், அரங்கு சார்ந்த கற்கை முறைகள் இவர்களை மேலும் வளம்படுத்தும் எனக் கருதுகின்றோம்.
