ஈழத் தமிழரின் கலாசாரத் தலைநகரமாகத் திகழ்வது யாழ்ப்பாணம். பாட்டும் கூத்தும் யாழ்பாணத்தானோடு கூடப்பிறந்தது. எத்துணை துயர் வந்த போதும் தமது பாரம்பரியத்தையும் கலைகளையும் காப்பதில் அவர்கள் தீவிரமாகவே இருந்துள்ளார்கள்; இருக்கின்றார்கள். இத்தனை துயர் பட்டபோதும் கூட இன்றும் - இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் - தமது கலைகளைப் பேணிக் காக்கும் மாண்பு அவர்களிடம் இருக்கின்றது.
அந்த வகையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மக்களாக இருந்து அவர்களின் ஆறுதலுக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரங்குசார் நிறுவனம் ‘செயல்திறன் அரங்க இயக்கம்’ திருநெல்வேலியில் ஆடியபாதம் வீதியில் இருந்து இயங்கி வருகின்றது இந்த நிறுவனம். நாடகம் மற்றும் அரங்கு சார் நடவடிக்கைகளே இதன் முழு நாதம். யாழ். பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் துறையின் சிறப்புப் பட்டதாரியான திரு. தே.தேவானந்த் அவர்களால் 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு எழுச்சியுடன் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் நாடக அரங்குக்கான இதழாக ‘கூத்தரங்கம்’ என்ற இதழை வெளியிடுகின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவரும் இந்த இதழை இணையத்தில் ஏற்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் வலம் வரவிடவேண்டும் என்பது எமது நீண்ட நாள் அவா. எனினும் நிதி வளங்களும் தொழில்நுட்ப வசதிகளும் கிடைப்பத்தில் இருக்கும் சிரமம் காரணமாக இதுநாள் வரை அது நடைபெறாமலேயே போயிற்று. இப்போது இந்த இலவச வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு உலகெங்கும் பரந்து கிடக்கும் தமிழர்களிடம் ஈழத்தின் நாடகக் கலையைக் கொண்டு சோர்க்கும் முகமாக இந்த வலைப் பதிவை ஆரம்பிக்கின்றோம். உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் நல்குவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் எங்கள் பயணம் தொடரும்
- ஆசிரியர் குழு

